disalbe Right click

Friday, February 2, 2018

விடுதலைப் பத்திரம்

விடுதலைப் பத்திரம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட சொத்துக்கு மிக அதிகமான பங்குதாரர்கள் இருந்தாலோ அல்லது பங்கு பிரிக்க முடியாதபடி சிறிய சொத்தாக இருந்தாலோ அல்லது அதனை யாரும் தனியாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை இருந்தாலோ, இருக்கின்ற பங்குதாரர்களில் ஒருவருக்கோ அல்லது சிலருக்கோ மற்ற பங்குதாரர்கள், (பங்கை அனுபவிக்க இருப்பவர்களிடமிருந்து அவர்கள் பங்குக்குரிய பணத்தை பெற்றுக் கொண்டு) விட்டுக்கொடுத்து அதனை ஒரு பத்திரம் மூலம் எழுதிக் கொள்வார்கள். இதனையே விடுதலைப் பத்திரம் என்கிறார்கள். ஆங்கிலத்தில் இதற்கு (Release Deed) என்று பெயர். தனி மனித உரிமைகளைக் கூட விட்டுக் கொடுப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை Releasor என்றும், விடுதலைப் பத்திரம் எழுதி வாங்குபவரை Releasee என்றும் சொல்கிறார்கள்
வித்தியாசங்கள் 
மற்ற பத்திரங்களுக்கும் இதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. 
1. இதற்கு நிரந்தரமான முத்திரைக் கட்டணம் கிடையாது. மற்ற பத்திரங்களுக்கு இருப்பது போல் ஒரே அளவாக இல்லாமல்  சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல மாறுபடும்.
2. மற்ற பத்திரங்கள் அசையாச் சொத்துகள் குறித்த நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. ஆனால், விடுதலைப் பத்திரமானது அசையும் சொத்து, அசையாச் சொத்து ஆகியவற்றில் உள்ள உரிமைகள் மட்டுமல்லாமல், கணவன் - மனைவி, பெற்றோர் - பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள் ஆகியோர்களுக்கிடையே இருக்கின்ற, தனி மனித உரிமைகளைக் கூட விட்டுக் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
3. சொத்துக்களை அடமானம் வைக்கும் போதோ அல்லது அந்த சொத்துக்களின்மீது கடன் வாங்கும் போதோ எழுதிக் கொடுக்கப்படுகின்ற விடுதலைப் பத்திரம், அந்த அடமானத்தை அல்லது அந்தக் கடனை முழுமையாக தீர்த்துவிட்டால், அடமானம் பெற்றவரிடமிருந்தோ, கடன் கொடுத்தவரிடமிருந்தோ அந்த சொத்தின் உரிமையாளரால் திரும்பப் பெறப்படுகிறது.
கவனம் தேவை
விடுதலைப் பத்திரம் என்பது உங்களது உரிமைகளை சில நேரங்களில் தற்காலிகமாகவும், சில நேரங்களில் நிரந்தரமாகவும் விட்டுக் கொடுத்து எழுதி பதிவு செய்யப்படுகின்ற ஒரு ஆவணமாகும்.  ஆகையால், மிக கவனமாக எழுத வேண்டும். ஒருமுறைக்கு பலமுறை படித்துப் பார்த்து கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் அதனை நாம் திரும்பப் பெற முடியும். 

விடுதலைப் பத்திரம் மாதிரி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விடுதலை ஆவணம்

201_______ம் வருடம் _______ மாதம் _____ம் நாள் _________________________ விலாசத்தில் வசிக்கும் திரு.__________ அவர்களின் குமாரர் சுமார் ____ வயதுள்ள திரு. __________ (அடையாள அட்டை ______) (கைபேசி எண்.______) ஆகிய தங்களுக்கு

_________________________ விலாசத்தில் வசிக்கும் திரு.__________ அவர்களின் குமாரர் சுமார் ____ வயதுள்ள திரு. __________ (அடையாள அட்டை ______) (கைபேசி எண்.______) ஆகிய நான்

மனப்பூர்வமான சம்தத்துடன் சம்மதித்து எழுதிக்கொடுக்கும் விடுதலைப் பத்திரம் என்னவென்றால்.

இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘ஏ’ ஷெடியூல் சொத்தானது ____________. ________________ பதிவு மாவட்டம், ____________ சார்பதிவகம், ________________ கிராமம், சர்வே எண்.______ மனை எண்._____, கதவு எண்.______________________ இதற்கு உட்பட்ட விஸ்தீரணம் ____________ சதுரடிக்கொண்ட சொத்தினை, நமது தகப்பனார் திரு.________________ அவர்கள் கடந்த ____________ந் தேதியில் ________________ சார்பதிவாளர் அலுவலகம் 1 புத்தகம், _______ வருடத்திய __________ம் ஆவண எண்ணாக பதிவு செய்யப்பட்ட கிரைய பத்திரப்படிக்கு, தமது பெயருக்கு கிரையம் கிடைக்கப் பெற்று அன்று முதல் அவர் மேற்படி சொத்தினை அவருடைய சுவாதீனத்தில் சர்வ அக்கு உரிமைகளுடன் சர்வ வில்லங்கச் சுத்தியாய் ஆண்டனுபவித்துக்கொண்டு வந்தார்.

அவ்வாறு ஆண்டனுபவித்து வருகையில் நமது தகப்பனார் பிரஸ்தாப சொத்தைப் பொருத்து எந்தவித ஏற்பாடும் செய்யாமல் ______ தேதியில் காலமாகிவிட்டார். அவர் காலத்திற்கு பிறகு அவரது வாரிசுகள் என _______ வட்டாட்சியர் வழங்கிய வாரிசுரிமை சான்று எண்.______ நாள்.________ன்படி நமது தாயார் திருமதி.___________ மற்றும் நாம் இருவரும் வாரிசுகள் ஆவோம்.

இந்நிலையில் ______ தேதியில் நமது தாயாரும் இயற்கை எய்திவிட்ட நிலையில், பிரஸ்தாப சொத்தை நமது தந்தையின் நேரடி வாரிசுகளாக நாம் இருவர் மட்டும் கூட்டாக அனுபவித்து வருகிறோம்.

மேலும் நம்மால் இச்சொத்தை கூட்டாக ஆண்டனுபவிக்க முடியாத காரணத்தினாலும், தங்கள் மீது எனக்குண்டான அன்புனாலும், பிரியத்தினாலும் இதனடியில் ‘பி’ ஷெடியூலில் கண்ட எனக்குண்டான பிரிபடாத 1/2 பாக சொத்தினை, இன்றைய தேதியில் நான் தங்களின் பெயருக்கு இந்த விடுதலை பத்திரப்படிக்கு விடுதலை செய்து தங்களின் சுவாதீனத்தில் ஒப்படைத்து விட்டேன்.

ஆகையால் இன்று முதல் தாங்கள் இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘பி’ ஷெடியூல் சொத்தினை தங்கள் பெயரில் மனைக்குரிய ரெவின்யு ரிக்கார்டுகளையும், பட்டாவையும் சப்-டிவிஷன் செய்துக்கொண்டும், கட்டிட கட்ட அனுமதி பெற்றக்கொண்டு, மாநகராட்சி கட்டிட வரிவகையறாக்கள், மின்இணைப்பு வரி வகையறாக்கள், குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி வகையறாக்கள் உள்ள பாகத்திற்கு பெயர் மாற்றிப் பெற்றுக்கொண்டு, தங்களின் இஷ்டம்போல் தங்களின் புத்திர பௌத்திர பாரம் பரியமாய், வித்தொத்தி தானாதி வினிமிய விக்கிரையங்களக்கு உரித்த யோக்கியங்களுடன் சர்வ சுதந்திர பாத்தியதைகளுடன் சர்வ வில்லங்க சத்தியாய் ஆண்டனுபவித்துக்கொள்ள வேண்டியது.

அப்படி தாங்கள் இன்று முதல் இதன் கீழ் சொத்து விவரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ‘பி’ ஷெடியூல் சொத்தினை ஆண்டனுபவித்துக் கொள்வதில் எனக்கும், எனது வாரிசுகளுக்கும், சந்ததிகளுக்கம் மற்ற உள்ள எவருக்கும் எவ்விதமான சொந்தமும், சம்மந்தமும், பாக அக்கு வாரிசு உரிமையும், பின்தொடர்ச்சி தாவாக்களும் ஏதும் கிடையாது என்று இதன் மூலம் நான் உறுதி அளிக்கிறேன்.

சொத்து விவரம்
.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

ஆக இந்தப்படிக்கு நான் கீழ்கண்ட சாட்சிகள் முன்னிலையில் மனப்பூர்வமான சம்மதித்து எழுதிக் கொடுத்த விடுதலை ஆவணம் ஆகும்.

சாட்சிகள்.


1.

2.

******************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 03.02.2018 

No comments:

Post a Comment