ஒரு நிலமானது ஒருவரது பெயரில் முன்பு இருந்திருக்கலாம். பட்டாவும் அவர் பெயரில் வாங்கி இருக்கலாம். காலங்கள் செல்லச் செல்ல அந்த நிலமானது பல வாரிசுகளுக்குச் சொந்தமாகும். அவர்கள் அந்த நிலத்தை பங்கு போடும்போது தங்களுடைய பங்கை, அவர்களுடைய பெயருக்கு பட்டா மாற்றினால்தான் நல்லது. இல்லையென்றால், அவர்களுக்குப் பின் வருகின்ற வாரிசுதாரர்களுக்கு அது சிக்கலையும், வீண் அலைச்சலையும் ஏற்படுத்திவிடும்.
என்ன செய்ய வேண்டும்?
ஒரே பட்டாவாக உள்ள நிலத்தை அளந்து சப்டிவிஷன் செய்ய முதலில் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் நாம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வேயரை அழைத்து வந்து உடன் இருந்து அந்த நிலத்தை முதலில் அளப்பார். நமக்குரிய பங்கையும் தனியாக அளந்து கல் ஊன்றுவார்கள். அதனையே நாம் நான்குமாலாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நமக்குரிய நிலத்திற்கு பட்டா எண் தனியாக வழங்குவார்கள். அதில் பழைய பட்டா எண்ணைக் குறிப்பிட்டு உட்பிரிவு எண்ணும் குறிக்கப்பட்டு இருக்கும்.
வட்டாட்சியர் அலுவலக நடவடிக்கை
இது போன்று உட்பிரிவு செய்து ஒருவருக்கு பட்டா வழங்கும்போது, அந்த கூட்டுப்பட்டாவில் உள்ள மற்ற பங்குதாரர்களுக்கும், சர்வேயர் அவர்கள் தலையாரி மூலம் கடிதம் கொடுத்தனுப்பி அழைப்பு அனுப்புவார்கள். கடிதத்தை மற்ற பங்குதாரர்கள் பெற்றுக் கொண்டதற்கான கையெழுத்தையும் ஒரு ஆவணத்தில் பெற்றுக் கொள்வார்கள். மற்ற பங்குதாரர்களுக்கு இதில் ஆட்சேபனை இருந்தால், அதனை நிலத்தை அளந்து சப்டிவிஷன் செய்வதற்கு முன் எழுத்து மூலமாக சர்வேயர் அவர்களிடம் நாம் தெரிவிக்க வேண்டும். அவர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார். அதன்பிறகே நிலத்தை அளந்து சப்டிவிஷன் செய்வார்.
தன்னிச்சையாக சப்டிவிஷன் செய்தால்....?
மேற்கண்டவாறு மற்ற பங்குதாரர்களுக்கு அழைப்பு அனுப்பாமல், சர்வேயர் தன்னிச்சையாக சப்டிவிஷன் செய்தால் அது செல்லாது. அதற்கு ஆதாரமாக கீழே வருவாய் கோட்டாசியர் அவர்களின் உத்தரவு நகல் இணைக்கப்பட்டுள்ளது.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.02.2018
இந்த ஆவணத்தில் நாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் 2002 என்று வருடம் தவறாக அச்சிடப்பட்டுளது. அதனை 2007 என்று திருத்தி வாசித்துக் கொள்ளவும். நன்றி!
No comments:
Post a Comment