நிலத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை: சென்னை மாவட்ட கலெக்டர் ஆஜராக உத்தரவு
நிலத்தை ஆர்ஜிதம் செய்து, 30 ஆண்டுகள் ஆகியும் அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்காததால், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையகப்படுத்தப்பட்ட நிலம்
சென்னை, மயிலாப்பூரில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான, 487 சதுர அடி இடம் இருந்தது. இந்த இடம் பறக்கும் ரயில் திட்டத்துக்காக, 1986ம் ஆண்டில் அரசால் கையகப்படுத்தப்பட்டது; 1993-ம் ஆண்டில், அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு ரூபாய் 2..33 லட்சம் இழப்பீடாக அரசால் நிர்ணயிக்கப்பட்டது.
குறைவான இழப்பீட்டுத் தொகை
அந்த இழப்பீட்டு தொகையை உயர்த்தும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நிலத்தின் உரிமையாளர் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 2017 ஜூலையில் 35.44 லட்சம் ரூபாயாக இழப்பீட்டு தொகையை நிர்ணயித்து,உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், 'இடம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகியும், அதற்கான பலனை அதன் உரிமையாளர் அனுபவிக்க வில்லை. .
'எனவே, ஒரு லட்சம் ரூபாய், அவரது வழக்கு செலவு தொகையாக அளிக்க வேண்டும். மொத்த தொகையை 12 வாரங்களில் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டது.
கண்டு கொள்ளாத கலெக்டர்
உயர்நீதிமன்றம் நிர்ணயித்த கெடு முடிந்ததும், இழப்பீட்டு தொகையை வழங்கும்படி, 2017 டிசம்பரில், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, ராமசாமி, 'நோட்டீஸ்' அனுப்பினார்; ஆனால், எந்த பதிலும் இல்லை. 2018 ஜனவரியில், நினைவூட்டும் கடிதத்தையும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினார்.நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், சென்னை மாவட்ட ஆட்சியருக்கு எதிராக, அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதி, கிருபாகரன் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
சொத்தை இழந்தும், இழப்பீட்டின் பலனை, 30 ஆண்டுகளாக அதன் உரிமையாளரால் அனுபவிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவை சென்னை மாவட்ட ஆட்சியர் மீறியிருப்பது தெரிகிறது.
நேரில் ஆஜராக வேண்டும்
நீதிமன்ற உத்தரவுகளுக்கு, அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. உத்தரவுகள் எப்படி எல்லாம் புறக்கணிக்கப்படுகின்றன என்பதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். எனவே, மார்ச், 5ம் தேதி, சென்னை மாவட்ட ஆட்சியர் ஆஜராகும்படி, நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.02.2018
No comments:
Post a Comment