ஆதாரம் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்தால் அபராதம்!
சாதாரண காரணங்களுக்காக எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த வழக்கு
டிராபிக் ராமசாமி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிடக் கோரியும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை சட்டப்படி எடுக்க கோரியும் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர்கள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, அனைத்து பேனர்களும் அகற்றிவிட்டதாக அரசுத் தரப்பில் அரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க அனுமதியளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆளுநர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அளித்த மனுக்களின் நகல்களை மட்டுமே இணைத்துள்ள மனுதாரர், வேறு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்றும், எந்த சட்டப் பிரிவின் கீழ் எந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடவில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அதிகாரிகள் யார் யார்? என்று அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்து இந்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
அபராதம் விதிக்கப்படும்
இதுபோல எந்த ஆதாரங்களும் இல்லாமல், எதிர்காலத்தில் சாதாரண காரணங்களுக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.02.2018
No comments:
Post a Comment