பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா தொழிற் கடன் திட்டம்
நீங்கள் வேலை பார்த்துக் கொண்டே தொழில் ஒன்றை செய்ய விரும்புகிறீர்களா? அல்லது முழுநேர வேலையாக நிறுவனம் ஒன்றை தொடங்க விரும்புகிறீகளா? அல்லது வேலை இல்லாமல் இருக்கும் நீங்கள் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களைப் போன்றவர்களுக்காக இந்திய அரசு ஒரு கடன் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.
பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா
பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா என்ற இந்தத் திட்டம் வேலை இல்லாமல் ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் இளைஞர்கள் கடன் பெற்று உற்பத்தி, வணிகம், சேவை அல்லது டிரேடிங் நிறுவனம் போன்றவற்றைத் துவக்கலாம்
இந்த திட்டத்தில் என்ன விசேஷம்?
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் வாங்கும் போது உங்களது சம்பளம் அறிக்கையினைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. ஆனால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும். தொழில் துவங்கி நடத்துவதற்கான திட்டம் (Project Report) முறையாக இருக்க வேண்டும். நீங்கள் கேட்ட கடன் உங்களுக்கு வழங்கப்படும்.
இதற்கான தகுதிகள் என்ன?
- விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களுக்குக் கூடுதலாக 10 வருடங்கள் விலக்கு உண்டு.
- நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குறைந்தது 3 வருடங்கள் வரை தொடர்ந்து குடி இருந்து இருக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.
- குறைந்தது 8வது வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்.
- மத்திய அரசு சார்ந்த டிரேடிங் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் வரை பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- விண்ணப்பதாரருடைய மற்றும் அவரைச் சார்ந்தவர்களுடைய, பெற்றோர்களுடைய வருட வருமானம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது.
- பொதுத் துறை வங்கி, தனியார் வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் ஏற்கனவே கடன் பெற்று, அதனைச் செலுத்தாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இதைப் போல இருக்கும் வேறு அரசு திட்டங்களின் கீழ் ஏதாவது கடன் வாங்கி இருப்பவர்களும் விண்ணப்பிக்க முடியாது.
- விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் கடன் அளிக்கப்படாது. விவசாயப் பொருட்கள் மூலமாக நடைபெறும் வணிகத்திற்குக் கடன் வழங்கப்படும்.
வணிகத் துறை என்றால் ரூ. 2 லட்சமும், சேவை துறை என்றால் ரூ. 5 லட்சமும், தொழிற்துறை என்றால் ரூ. 5 லட்சமும், கூட்டு நிறுவனங்கள் என்றாலோ அல்லது இரண்டு அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து தொழில் துவங்கும் போது 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
இதற்கான வட்டி விகிதம் எவ்வளவு?
இடத்திற்குத் தகுந்தாற்போல், காலத்திற்குத் தகுந்தாற்போல், வங்கிக்கு தகுந்தாற்போல் இது மாறக்கூடியது. விண்ணப்பிக்கும் போது இதனை அங்கு விண்ணப்பதாரர் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் பொது நிர்வாகியை நீங்கள் அணுகுங்கள். அவர் இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? மற்றும் கடன் சம்பந்தமான விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பார்.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 25.02.2018
No comments:
Post a Comment