ஒரு காசோலையினை அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் இருந்து 90 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்தவில்லை என்றால், அந்தக் காசோலை செல்லாது என்று (Banking Regulations Act), சட்டம் சொல்கிறது. ஆனால், 90 நாட்களுக்குப் பின் பயன்படுத்தப்பட்ட காசோலை பற்றிய வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு சற்று மாறுபடுகிறது. அது என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்.
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 22.02.2018
கலிமுல்லா என்பவர் ரூ 4 லட்சத்தை இராஜசேகர்மூர்த்தி என்பவரிடம் கடனாக பெற்றிருந்தார். அந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக ஒரு காசோலையை 13.5.2015 ஆம் தேதியிட்டு இராஜசேகர்மூர்த்திக்கு கொடுத்திருந்தார்.
அந்த காசோலையை இராஜசேகர்மூர்த்தி பணம் பெறுவதற்காக அவருடைய வங்கி கணக்கில் 13.8.2015 ஆம் தேதி தாக்கல் செய்தார். ஆனால் கலிமுல்லாவின் வங்கி கணக்கு முடிக்கப்பட்டு விட்டதாக திருப்பப்பட்டு விட்டது.
அதனால், காசோலைக்குறிய தொகையை கேட்டு இராஜசேகர்மூர்த்தி கலிமுல்லாவுக்கு அறிவிப்பு அனுப்பினார். அதன்பிறகும் கலிமுல்லா பணம் தராததால் இராஜசேகர்மூர்த்தி ஒரு காசோலை மோசடி வழக்கை கலிமுல்லா மீது தாக்கல் செய்தார்.
வழக்கில் ஆஜரான கலிமுல்லா காசோலையை நான் 13.5.2015 ஆம் தேதியிட்டு கொடுத்துள்ளேன்.
ஆனால் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (Banking Regulations Act), ஒழுங்குமுறை எண். 35A ல் கூறப்பட்டுள்ளதற்கு முரணான வகையில் 90 நாட்களுக்கு பின்னர் 13.8.2015 ஆம் தேதி அந்த காசோலை பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி ஒரு மெமோ தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட விசாரணை நீதிமன்றம், " எக்கான் ஆன்ரி லிட் Vs ரோம் இன்டஸ்ட்ரீஸ் லிட் (2013-3-DCR-417) (AIR-2013-SC-3283)" என்ற வழக்கில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டி, வழக்கு காசோலையானது மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138ல் கூறப்பட்டுள்ள காலவரையறைக்குள்
வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது என்று கூறி கலிமுல்லா தாக்கல் செய்த மெமோவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவை எதிர்த்து கலிமுல்லா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி திரு. ஜான் மைக்கேல் குன்ஹா விசாரித்தார்.
காசோலை கொடுக்கப்பட்ட
நாளிலிருந்து 90 நாட்களுக்குள்
பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்த வேண்டும் என்று மாற்றுமுறை ஆவணச் சட்டம் பிரிவு 138(a) ல் கூறப்பட்டுள்ளது. ஆனால் மேலே சொல்லப்பட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றம்,
புகார் தாக்கல் செய்வதற்கான வழக்கு மூலம் ஏற்பட்ட நாளினை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 30 நாட்கள் காலவரையறையை கணக்கிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே ஒரு காசோலை குறித்த காலவரையறையை கணக்கிடும் போது வழக்கு மூலம் ஏற்பட்ட நாளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் காலவரையறையை கணக்கிட வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம்
தீர்ப்பு கூறியுள்ளது.
Criminal Petition No - 1979/2016 dt- 17.3.2017
கலிமுல்லா Vs இராஜசேகர்மூர்த்தி 2017-ACD-468
நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான திரு Dhanesh Balamurugan
No comments:
Post a Comment