வழக்கு விசாரணை தினத்தன்று வேறு பணி கூடாது!
உயர் நீதிமன்றத்தில்
நடந்து வரும் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளுக்கு அன்றைய தேதிகளில் வேறு பணிகளுக்கு அனுப்பக் கூடாது! என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமர்வு நீதிமன்றத்தில்.....
சென்னை உயர் நீதிமன்றத்தில் 20.02.2018 அன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு ஆட்கொணர்வு மனுக்களை விசாரித்தது. மனநலம் பாதிக்கப்பட்ட
பெண் ஒருவர் மாயமான வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி அன்றைய தினம் ஆஜராகவில்லை. அவர் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்குச் சென்றிருப்பதாக அரசு தரப்பு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். இதே போல வேறொரு ஆட்கொணர்வு வழக்கிலும் ஆஜராக வேண்டிய விசாரணை அதிகாரி ஆஜராகவில்லை. அந்த வழக்கிலும் பாதுகாப்பு பணிக்குச் சென்று விட்டதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோபமடைந்த நீதிபதிகள்
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், 'உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் ஆட்கொணர்வு மனுக்கள் உள்ளிட்ட வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராக வேண்டிய போலீஸ் அதிகாரிகளை விசாரணை நாள்களில் எக்காரணம் கொண்டும் வேறு பணிகளுக்கு அனுப்பக்கூடாது. விசாரணை தேதிகளில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.
எதிர்காலத்திலும் இந்த உத்தரவு பொருந்தும்.
இந்த உத்தரவு இப்போதுள்ள காவல்துறை இயக்குநருக்கு மட்டுமல்ல, வரும் காலங்களில் பணிபுரிய இருக்கின்ற காவல்துறை இயக்குநர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இதுதொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் இந்த உத்தரவை டிஜிபி அறிவுறுத்த வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
********************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 22.02.2018
No comments:
Post a Comment