வாதி என்ன சொல்றாருன்னு கேப்போம், வாங்க!
என்னோட பேரு வி.சக்ரவர்த்திங்க. எங்கப்பா பேரு வடிவேலுங்க. கடலூர் மாவட்டத்தில திருவதிகைன்னு ஒரு ஊரு இருக்குதுங்க. அந்த ஊர்ல இருக்குற சரநாராயணப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஒரு சொத்த, 40 வருஷத்துக்கு முன்னால, அப்ப இருந்த கோயில் நிர்வாகிங்க, எங்க அப்பாவுக்கு குத்தகைக்கு வுட்டாங்கங்க. அப்போ குத்தகை வருஷத்துக்கு 15 ரூபாய்ங்க. எங்கப்பா 20 வருஷத்துக்கு முன்னால எறந்து போயிட்டாருங்க. இப்ப அந்த சொத்துக்கு நான் வருஷ குத்தகையா 2000 ரூபா கொடுத்திட்டு அனுபவப்பாத்தியம் செஞ்சிக்கிட்டு வாரேனுங்க. இப்ப இருக்குற கோயில் அதிகாரி (செயல் அலுவலர்) எனக்கு குத்தகைப் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்காருங்க. குத்தகைப் பணத்த நான் ஒழுங்கா அவருகிட்ட கொடுத்துக்கிட்டு வாரேனுங்க. எல்லாத்துக்கும் எங்கிட்ட ஆதாரம் இருக்குதுங்க.. என்னன்னே தெரியலீங்க? எங்க ஊரு வீ.ஏ.ஓ, பண்ருட்டி தாசில்தாரு, கடலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கூட சேந்துக்கிட்டு, அந்த சொத்த எங்கிட்ட இருந்து, இப்ப அவரு அபகரிக்கப் பாக்குறாருங்க. நீதிபதி ஐயா, நான் அனுபவிச்சிக்கிட்டு இருக்குற கோயில் சொத்துல யாரும் உள்ள வந்து எந்தத் தொந்தரவும் செய்யக்கூடாதுன்னு ஒரு நிரந்தர உறுத்துக்கட்டளை கொடுங்கய்யா.
வழங்கப்பட்ட தீர்ப்பு :
சான்றாவணங்கள் மூலம் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாதியானர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது.
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 31.03.2018
மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி .ஏ.உமாமகேஸ்வரி பி.எஸ்ஸி.¸ பி.எல்.¸
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு
2046¸ ஜய ஆண்டு¸ தைத்திங்கள் 15 ஆம் நாள்
2015 ம் ஆண்டு ஜனவரித்திங்கள்
29 ஆம் நாள் வியாழக்கிழமை
அசல் வழக்கு எண்.170 / 2006
வி.சக்கரவர்த்தி …................................................................................................................ வாதி
/எதிர்/
1. கிராம நிர்வாக அலுவலர்¸ திருவதிகை
2. தாசில்தார்¸ பண்ருட்டி
3. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்¸ கடலூர்
4. மாவட்ட ஆட்சியர்¸ கடலூர் மாவட்டம்
5. செயல் அலுவலர்¸
அருள்மிகு சரநாராயணபெருமாள்
திருக்கோயில்¸திருவதிகை …........... பிரதிவாதிகள்
வழக்கிலிருந்து
முக்கிய குறிப்புகள்:
'இவ்வழக்கானது¸
வாதியானவர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரியும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது
என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பிக்கக்கோரியும் மற்றும் தாவா செலவுத்தொகை கேட்டும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது."
'2. வழக்குரையின் சுருக்கம்:
தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு
முன்பு இறந்தபின்னர்
தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5 ஆம் பிரதிவாதிதான்
வருடாவருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக்கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடாவருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்திவருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள்
2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான
செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு
உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின்
சட்டபுறம்பான செய்கைகளுக்கு
பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்."
'3. ஐந்தாம் பிரதிவாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையின் சுருக்கம்:
வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ செலவுத்தொகையுடன்
தள்ளுபடி செய்யப்பட வேண்டியதொன்றாகும். தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத்தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை.
தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள்வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை.
எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை. 5 ஆம் பிரதிவாதி¸ 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு
வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டியதாகும்."
4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை
ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர் 03.03.2008 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) வழக்குச்சொத்து
வாதியின் சுவாதீன அனுபவத்தில் உள்ளதா?
2) வழக்கில் வாதி கோரியுள்ளவாறு விளம்புகைப் பரிகாரம் வாதிக்கு கிடைக்கத்தக்கதா?
3) நிரந்தர உறுத்துக்கட்டளைப் பரிகாரம் பெறுவதற்கு வாதிக்கு தகுதி உள்ளதா?
4) இவ்வழக்குக்கு
வழக்குமூலம் உண்டா?
5) வாதிக்கு எத்தகைய நிவாரணம் கிடைக்கக்கூடியது?
'6) வழக்கெழு வினாக்கள் 1 முதல் 3:
வாதிதரப்பில்
தங்களது வழக்கினை நிரூபிக்கும் வகையில்¸ வாதியானவர் வா.சா.1 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதிதரப்பில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வழக்குரையில்¸ தாவா சொத்து திருவதிகையில்
உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது. தாவா சொத்தை அக்கோயிலின் அறங்காவலர்கள் வாதியின் தகப்பனார் வடிவேலு என்பவருக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விட்டனர். அப்போது வருட குத்தகை ரூ.15 ஆகும். மேற்படி வாதியின் தகப்பனார் சுமார் 20 வருடங்களுக்கு
முன்பு இறந்தபின்னர்
தாவா சொத்திற்கான குத்தகையை மேற்படி கோயிலுக்கு செலுத்தி வாதி அனுபவித்து வருகிறார். தற்போது தாவா சொத்திற்கான வருட குத்தகை ரூ.2000 ஆகும். தாவா சொத்துக்கான குத்தகைத் தொகையை 5 ஆம் பிரதிவாதிதான் வருடாவருடம் வசூலித்து வருகிறார். 5 ஆம் பிரதிவாதி தாவா சொத்தைப் பொறுத்து வாதிக்கு குத்தகைப் பத்திரங்கள் எழுதிக்கொடுத்துள்ளார். வாதி தாவா சொத்துக்கான குத்தகையை வருடாவருடம் தவறாமல் 5 ஆம் பிரதிவாதியிடம் செலுத்திவருகிறார். இந்நிலையில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள்
2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டது. மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான
செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்தார். வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர். அவரை தாவா சொத்திலிருந்து வெளியேற்ற பிரதிவாதிகளுக்கு உரிமையில்லை. 4 ஆம் பிரதிவாதியானவர் 1 முதல் 3 பிரதிவாதிகளின்
சட்டபுறம்பான செய்கைகளுக்கு
பதில் சொல்ல கடமைப்பட்டவர். அதனால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளார். எனவே வாதி¸ தன்னை தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்யக்கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது."
'7) இவ்வழக்கில் வாதி¸ வழக்குரையுடன்
தாக்கல் செய்திருந்த ஐ.ஏ.793/06 தற்காலிக உறுத்துக்கட்டளை மனுவில்¸ 1 முதல் 5 பிரதிவாதிகளும் எதிருரை தாக்கல் செய்து¸ அம்மனுவில் விசாரணைக்குப்பிறகு வாதி கோரியவண்ணம் தற்காலிக உறுத்துக்கட்டளை பரிகாரம் வழங்கி 15.9.06 ஆம் தேதி உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை எதிர்த்து 1 முதல் 4 பிரதிவாதிகள்
தரப்பில் பண்ருட்டி சார்பு நீதிமன்றத்தில் சி.எம்.ஏ.7/06 மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு¸
6.9.07 ஆம் தேதி மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அசல் வழக்கிலும் 1 முதல் 4 பிரதிவாதிகள் எதிர்வழக்குரை
தாக்கல் செய்யாத காரணத்தால் 22.9.06 ஆம் தேதி ஒருதலைபட்சமாக்கப்பட்டுள்ளனர்."
'8) 5 ஆம் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்வழக்குரையில்¸
தாவா சொத்து இந்த பிரதிவாதி கோயிலுக்கு பாத்தியமானது¸ அவரைத்தவிர மேற்படி தாவா சொத்தில் உரிமைகோர எவருக்கும் அருகதையில்லை. தாவா சொத்தானது சுமார் 20 ஆண்டுகளுக்கு
முன்புவாதிக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இதுநாள்வரை வாதி குத்தகைத் தொகையை செலுத்தியதில்லை. எனவே இந்த பிரதிவாதி கடலூர் வருவாய் நீதிமன்றத்தின் முன்பு குத்தகை பாக்கியைக் கேட்டு வழக்கு தாக்கல் செய்து¸ செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்ட
பிறகுதான் வாதி மேற்படி குத்தகை பாக்கியை செலுத்த முன்வந்தார். ஆனால் வாதி¸ தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பதை மறுக்கவில்லை.
5 ஆம் பிரதிவாதி¸ 1 முதல் 3 பிரதிவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு. 1 முதல் 4 பிரதிவாதிகள் தாவா சொத்தில் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு தாவா சொத்தைப் பொறுத்து எவ்வித உரிமையும் இல்லை. மேலும் இவ்வழக்கிற்கு
வழக்குமூலம் இல்லை. எனவே இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது."
'9) வாதி தரப்பில் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான ஆவணங்களும்¸ நீ.ம.சா.ஆ.1 முதல் நீ.ம.சா.ஆ.3 வரையிலான ஆவணங்களும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
வா.சா.ஆ.1 மற்றும் வா.சா.ஆ.2 ஆகியவை முறையே 07.07.2001 மற்றும் 04.07.2005 ஆகிய தேதிகளில் 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு எழுதிக்கொடுத்த தாவா சொத்துக்கான அசல் குத்தகைப்பத்திரங்களாகும். வா.சா.ஆ.3 முதல் வா.சா.ஆ.12¸ வா.சா.ஆ.14¸ வா.சா.ஆ.17 மற்றும் வா.சா.ஆ.18 ஆகியவை வாதி¸ தாவா சொத்துக்கு 5 ஆம் பிரதிவாதிக்கு
செலுத்திய குத்தகை ரசீதுகளாகும். வா.சா.ஆ.13 என்பது 11.07.2001 ஆம் தேதி 5 ஆம் பிரதிவாதி¸ வாதிக்கு குத்தகை பாக்கி கேட்டு அனுப்பிய நோட்டீஸ் ஆகும். வா.சா.ஆ.15 என்பது 22.10.2013 ஆம் தேதி வாதியை வருவாய் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டி அனுப்பப்பட்ட
கடிதம் ஆகும். வா.சா.ஆ.16 என்பது 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். வா.சா.1 தனது முதல் விசாரணையில் வழக்குரையை ஒட்டி சாட்சியம் அளித்துள்ளார். தனது குறுக்கு விசாரணையில்¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணர் கோயிருக்கு பாத்தியமானது என்றும்¸ தன் தகப்பனார் பெயர் சுமார் 60 வருடங்களுக்கு முன்பாகவே அப்போதைய கோயில் நிர்வாகத்தார்களிடமிருந்து குத்தகை எடுத்துக்கொண்டதாகவும்¸ அவருக்கு பின்னிட்டு தான் குத்தகைக்கு பயிர் செய்து வருவதாகவும்¸ ஆரம்பத்தில் தன் தகப்பனார் ரூ.90ம்¸ தற்காலம் தான் ரூ.2000 வருட குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ குத்தகை பாக்கி ஏதுமில்லை என்றும்¸ தன்பேரில் கோயில் நிர்வாகத்தால் கடலூர் ரெவின்யூ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து¸ அதன்படி தான் குத்தகை செலுத்தி வருவதாகவும்¸ தான் கோயிலுக்கு பாத்தியமான சொத்தைதான் அனுபவித்து வருவதாகவும்¸ அரசாங்கத்திற்கு இதில் சம்மந்தம் இல்லை என்றும்¸ தன்னை குத்தகைதாரர் அல்ல என்று கோயில் தரப்பில் எந்தகாலத்திலும்
சொல்லவில்லை என்றும்¸ வழக்கு போடுவதற்கு முன்பு அரசாங்கத்திலிருந்து வந்து தாவா சொத்தில் கட்டுமானம் செய்யப்போவதாக சொல்லி பிரச்சனை செய்ததாகவும்¸ வழக்குக்கு பின்னிட்டு 1 முதல் 4 பிரதிவாதிகளான அரசாங்கத்திலிருந்து தனக்கு எந்த பிரச்சனையும் தரவில்லை என்றும்¸ 5 ஆம் பிரதிவாதியால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சாட்சியம் அளித்துள்ளார்."
10) இவ்வழக்கில் பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித சாட்சிகளும் முன்னிலைப்படுத்தப்படவில்லை¸ சான்றாவணங்களும் குறியீடு செய்யப்படவில்லை.
11) மேற்படி வாதிதரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களையும்¸ வாதிதரப்பில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
ஆவணங்களையும் பரிசீலனை செய்து பார்க்கும்பொழுது¸ தாவா சொத்து திருவதிகையில் உள்ள அருள்மிகு சரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு பாத்தியமானது என்பதும்¸ அதனை வாதியின் தகப்பனாரும்¸ அவருக்குப் பின்னிட்டு வாதியும் குத்தகைதாரர்
என்ற முறையில் அனுபவித்து வருவதும் வாதியின் சாட்சியம் மற்றும் வாதிதரப்பில்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான சான்றாவணங்கள் மூலம் தெளிவாகிறது. மேலும்¸ வாதியும்¸ கோயில் நிர்வாகமும் குத்தகைப்பத்திரங்கள் எழுதிக்கொண்டதும்
வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் வாதி தொடர்ந்து குத்தகை தொகையை கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி வந்திருப்பதும் தெரியவருகிறது. மேலும் வாதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வா.சா.ஆ.16 ஆவணத்தை பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ 21.11.2013 ஆம் தேதி வாதிக்கு கடலூர் வருவாய் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு நகல் ஆகும். இதில் வாதி¸ கோயில் நிர்வாகத்திற்கு செலுத்தவேண்டிய குத்தகை பாக்கியை செலுத்தவேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம்¸ தாவா சொத்தில் வாதிகுத்தகைதாரர்
என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வழக்கில் 1 முதல் 4 பிரதிவாதிகள் ஒருதலைபட்சமாகியுள்ளனர். 5 ஆம் பிரதிவாதியான
கோயில் நிர்வாகத்தால்
தாக்கல் செய்யப்பட்டுள்ள
எதிர்வழக்குரையிலும்¸ வாதி¸ மேற்படி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் வாதி¸ தனது சாட்சியத்தில் வருவாய் நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின்படி
தான் குத்தகை பாக்கியை செலுத்தி வருவதாகவும் சாட்சியம் அளித்துள்ளார். மேலும்வாதிதரப்பில் திடீரென 1 முதல் 3 பிரதிவாதிகள் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் வாரத்தில் தாவா சொத்தை வாதியிடமிருந்து சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முயற்சித்து¸ அந்த முயற்சி வாதி கேட்டுக்கொண்டதின்பேரில் தவிர்க்கப்பட்டதாகவும்¸ மேற்படி 1 முதல் 3 பிரதிவாதிகளின் சட்டபுறம்பான
செய்கைக்கு 5 ஆம் பிரதிவாதி உடந்தையாக இருந்ததாகவும்¸
4 ஆம் பிரதிவாதியானவர்
1 முதல் 3 பிரதிவாதிகளின்
சட்டபுறம்பான செய்கைகளுக்கு
பதில் சொல்ல கடமைப்பட்டவர் என்பதால் அவரையும் வாதி இவ்வழக்கில் தரப்பினராக சேர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே வா.சா.1-ன் சாட்சியம் மற்றும் வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.18 வரையிலான சான்றாவணங்கள் மூலமும் வாதி¸ தாவா சொத்தின் அனுபவத்தில் இருந்து வருகிறார் என்றும்¸ வாதி தாவா சொத்தின் குத்தகைதாரர் என்றும் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தாவா சொத்தைப் பொறுத்து வாதி கோரியுள்ள விளம்புகை மற்றும் நிரந்தர உறுத்துக்கட்டளை
பரிகாரம் அவருக்கு கிடைக்கத்தக்கது என்றும் முடிவு செய்து எழுவினா 1¸2 மற்றும் 3 ஆகியவற்றிற்கு வாதிக்கு ஆதரவாக தீர்வு காணப்படுகிறது.
'14) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸
வாதியானர் 5 ஆம் பிரதிவாதிக்கு பாத்தியமான தாவா சொத்தின் குத்தகைதாரர் என விளம்புகை செய்தும்¸ வாதி அமைதியான முறையில் அனுபவித்து வரும் தாவா சொத்தில் பிரதிவாதிகளோ அவர்களது ஆட்களோ எவ்விதத்திலும் அத்துமீறி நுழையக்கூடாது
என நிரந்தர உறுத்துக்கட்டளை பிறப்பித்தும் வாதிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. அவரவர்கள் செலவுத்தொகையை அவரவர்களே ஏற்றுக்கொள்ள
வேண்டுமென உத்தரவிடப்படுகிறது."
நன்றி : http://www.tamiljudgements.org