உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகள் தொடுக்கப் போவதாக அச்சுறுத்தல்
ஒரு காவல் அலுவலர், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த தவறான செயல்களுக்காக அவர் மீது உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக யாரிடமிருந்தாவது அறிவிப்பு வரப்பெற்றால், அந்த காவல் அலுவலர் அந்த அறிவிப்பிற்கு பதில் கொடுக்க நினைத்தால், அது சம்பந்தமான குறிப்புடன், பெறப்பட்ட நகல் ஒன்றை இணைத்து உடனடியாக உரிய வழிமுறை மூலம் தனது மேலதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அவர் என்ன பதில் அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால், அரசு ஆணை எம்.எஸ்.எண்:2879, உள்துறை, நாள்:06.06.1938ன்படி அந்த பதில் நகல் ஒன்றுடன் வரப்பெற்ற அச்சுறுத்தல் அறிவிப்பு நகலை இணைத்து,
அச்சுறுத்தல் நடவடிக்கை உரிமையியல் நடவடிக்கைகளாக இருந்தால்...
சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் சென்னை மாநகரக் காவலராக இருந்தால், சென்னைக் காவல் ஆணையருக்கும், இருப்புப்பாதை காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தால், சென்னை - இருப்புப்பாதை பொறுப்பு ஆணையருக்கும், சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் மாவட்டக் காவலராக அல்லது இருப்பூர்தி காலவராக அல்லது குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தால் காவல்துறைத் துணைத்தலைவர் (டி.ஐ.ஜி) அவர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
அச்சுறுத்தல் நடவடிக்கை கிரிமினல் நடவடிக்கைகளாக இருந்தால்...
சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் சென்னை - இருப்புப்பாதை காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தால், சென்னை - இருப்புப்பாதை பொறுப்பு - காவல்துறைத் துணைத்தலைவர் (டி.ஐ.ஜி) அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட காவல் அலுவலர் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த (சி.ஐ.டி) காவலராக பணியாற்றிக் கொண்டிருந்தால், குற்றப் புலனாய்வுத்துறைத் துணைத் தலைவர் அவர்களுக்கும், சென்னை மாநகர காவலராக இருந்தால் சென்னை மாந்கர காவல் ஆணையர் அவர்களுக்கும், மாவட்ட காவலராக இருந்தால், மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
அச்சுறுத்தல் அறிவிப்பை பெறுபவர் உயரதிகாரிகளாக இருந்தால்....
அச்சுறுத்தல் அறிவிப்பை பெறுபவர் காவல்துறை தலைமை இயக்குநர் அல்லது சென்னை மாநகர காவல் ஆணையர் அல்லது சென்னை இருப்புப்பாதை காவல்துறைத் துணைத்தலைவர் அல்லது குற்றப் புலனாய்வுத்துறைத் துணைத் தலைவர் ஆக இருந்தால், அவர் உடனே அத்தகைய அச்சுறுத்தல் அறிவிப்பின் நகல் ஒன்றை அவர்களது உயர் அதிகாரிகளின் மூலம் அரசாங்கத்திற்கு என்ன பதில் அந்த அறிவிப்பிற்கு கொடுக்க உள்ளாரோ அதன் நகலுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.03.2018
No comments:
Post a Comment