சின்னம்மா பிள்ளைகள் பெரியம்மாவுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா?
இந்த வழக்கில் ராதாபாய் என்பவர் ஒருவருக்கு முதல் மனைவி ஆவார். அவருக்கு குழந்தைகள் இல்லாததால், அவரது சம்மதத்துடன், அவர் கணவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். அந்த இரண்டாம் தார மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றனர். அந்தக் குழந்தைகளில் ஒருவர் டாக்டர் ஆகவும், மற்றொருவர் இன்ஜினியர் ஆகவும் ஆகிறார்கள். இந்நிலையில் இவர்களின் தந்தை இறந்து போய்விடுகிறார். இறக்கும் போது, அவரது பெயரில் சில சொத்துக்களை விட்டுச் சென்றார். அந்த சொத்துக்களை இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகளே அனுபவித்து வந்தனர்.
ஜீவனாம்சம் வழங்க வேண்டும்!
கணவர் இறந்து விட்டதால் வயதான முதல் மனைவியான ராதாபாய் அனாதை ஆகி விடுகிறார். தன் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்கிறார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராதாபாய்க்கு மாதம்தோறும் கணவரின் இரண்டாம் தார பிள்ளைகள் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதனை எதிர்த்து இரண்டாம் தார மனைவியின் பிள்ளைகள் இந்த மேல்முறையீட்டு மனுவை பாம்பே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மாற்றாந்தாய் ஜீவனாம்சம் கேட்க முடியாது!
இரண்டாம் தார பிள்ளைகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், மாற்றாந்தாய் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறி பாம்பே உயர்நீதிமன்றம்
"ரமாபாய் Vs தினேஷ்" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அந்த வழக்கில் பாம்பே உயர்நீதிமன்றம், ஒரு மாற்றாந்தாய்க்கு
உள்ள சட்டப்பூர்வமான
உரிமைகளை குறித்து விவாதித்திருந்தது. மேலும் கு. வி. மு. ச பிரிவு 125 ல் கூறப்பட்டுள்ள தாய் என்கிற விளக்கத்திற்குள் மாற்றாந்தாய் வருவதில்லை என்றும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது?
முதல் மனைவியும், மாற்றாந்தாயுமான ராதாபாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தன்னுடைய வாதத்தில், உச்சநீதிமன்றம் "D. வடோடரியா Vs குஜராத் மாநில அரசு
(1996-4-SCC-497)" என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை மேற்கோள் காட்டினார். அதில் கு. வி. மு. ச பிரிவு 125 ன் கீழ் மாற்றாந்தாய்க்கு ஜீவனாம்சம் கோருவதில் உள்ள உரிமைகள் குறித்து விவரிக்கும் பொழுது கீழ்க்கண்டவாறு
கூறியுள்ளது.
" குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ஐ, அந்த பிரிவு இயற்றப்பட்டதன்
நோக்கத்தை நிறைவேற்றும்
வகையில் எளிமையாக பயன்படுத்த வேண்டும். குழந்தை இல்லாத மாற்றாந்தாய் தன்னுடைய கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம், தான் ஒரு விதவை அல்லது கணவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் பெண் என்கிற காரணங்களின் அடிப்படையில் ஜீவனாம்சம் கோரலாம் என்று கூறியுள்ளது.
மேலே சொல்லப்பட்ட தீர்ப்பை பாம்பே உயர்நீதிமன்றம்
"சரோஜ் கோவிந்த் முக்கவார் Vs சந்திரகலா பாய்
(2009-ALLMR-CRL-1139)" என்ற வழக்கில் மேற்கோள் காட்டி தீர்ப்பு கூறியுள்ளதாகவும் கூறி வாதிட்டார்.
ஜீவனாம்சம் பெறத் தடையில்லை!
எனவே மாற்றாந்தாய்
ஒருவர் தன் கணவனின் இரண்டாம் தார பிள்ளைகளிடமிருந்து ஜீவனாம்சம் பெற எவ்வித தடையும் இல்லை என்று பாம்பே உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
Criminal Appeal No - 1486/2001 Dr.Ravi Kumar and others Vs Radha Bai and Others
2013-1-DMC-509
நன்றி : முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான Dhanesh Balamurugan
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.03.2018
No comments:
Post a Comment