disalbe Right click

Friday, March 23, 2018

மதம் மாறுவதால் வாரிசு உரிமையை இழக்க நேருமா?

பழைய காலங்களிலிருந்த நிலைப்படி ஒருவர் வேறு மதத்திற்கு மாறுவதன் மூலம், தான் பிறந்த ஜாதியை விட்டு விலகிவிட்டால், அதன் காரணமாக மரபுரிமையின் கீழ் வாரிசாக தான் அடைய இருக்கும் சொத்துக்களை இழந்து விடுவார்.
ஆனால் 1850 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஜாதிக் குறைபாடுகளை போக்கும் சட்டத்தின் மூலம் இந்த சொத்துரிமையை இழக்கும் நிலைமைக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது.
மேற்படி ஜாதிக் குறைபாடுகளை நீக்கும் சட்டம் 1850 ( Caste Disabilities Removal Act 1850) ன், பிரிவு 1ன்படி, ஒரு நபர் தன்ன மதத்தை விட்டு விலகி வேறு மதத்திற்கு மாறியதால், அவர் முன்பிருந்த மதத்தின் படி அவருக்கிருந்த மரபுரிமைப்படி வாரிசாகப் பெறும் சொத்துரிமையை அவர் இழக்க நேரிடும் என நம் நாட்டில் ஏதாவது சட்டமோ அல்லது வழக்கமோ இருக்குமானால், அந்த சட்டத்தை அல்லது வழக்கத்தை எந்த நீதிமன்றத்தாலும் அமல்படுத்த முடியாது என்று கூறுகிறது.
சுருக்கமாக சொன்னால் ஜாதிக் குறைபாடுகளை நீக்கும் சட்டம் தன்னுடைய மதத்தை விட்டு விலகியவரை பாதுகாக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றம் " E. ரமேஷ் மற்றுமொருவர் Vs P. ரஜினி மற்றும் இருவர் (2002-MLJ-216)" என்ற வழக்கில், ஜாதிக் குறைபாடுகளை போக்கும் சட்டத்தின் பிரிவு 1ன்படி, ஒரு இந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதால், அவருக்கு தனது சொத்தை இழந்து விடுவார் என்பது தவறு என்று தீர்ப்பு கூறியுள்ளது.
ஆனால் இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 26 ஆனது இதை ஏற்கவில்லை.
இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 26 என்ன சொல்கிறது?
இந்த சட்டம் துவங்கும் முன்போ அல்லது துவங்கிய பிறகோ, ஒரு இந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதன் மூலம் இந்து அல்லாமல் போய்விடுகிறார். அவ்வாறு அவர் மதம் மாறிய பின், அவரது குழந்தைகளும், அடுத்த வாரிசுகளும், அவரது உறவினர்களிடமிருந்து வாரிசாக சொத்துக்கள் பெறும் உரிமையை இழந்துவிடுவர். ஆனால் அவர்கள் அந்த சொத்துக்களை வாரிசாக பெறும்போது இந்துவாக இருந்தால் அவ்வாறு உரிமையை இழக்க மாட்டார்கள்.
மேற்படி பிரிவை கவனமாக படித்து பார்த்தால் அந்த பிரிவு கூறுவது நன்றாக புரியும். அதாவது மதம் மாறியவருடைய வாரிசுகளுக்கு, அதிலும் அவர் மதம் மாறிய பின் பிறந்த குழந்தைகளும், அவர்களது வாரிசுகளும் மதம் மாறியவரின் உறவினர்களுக்கு வாரிசாகும் தகுதியை இழக்கிறார்கள். எப்படி இருந்தாலும் மதம் மாறியவரை பொறுத்தவரை, அவர் பழைய மதத்தை சேர்ந்த உறவினரின் வாரிசாக பெறும் உரிமையை பற்றி இந்த பிரிவு எதுவும் கூறவில்லை. அவருக்கு பிறக்கும் குழந்தைகள் மற்றும் அடுத்த வாரிசுகளை பற்றி மட்டும் தான் கூறுகிறது.
ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் இதனை உறுதி செய்து ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
"ஷாபனா கான் Vs சுலோக்சனா மற்றும் பலர் (2008-2-ALDB-18)" என்ற வழக்கில், மதம் மாறுவதால் வாரிசாகும் தகுதியை இழப்பது என்பது சம்பந்தப்பட்ட இந்துவிற்கும் அவர் மதம் மாறிய பின் பிறந்த குழந்தைகளுக்கும், அவர்களது வழித்தோன்றல்களுக்கும் தான் பொருந்துமே தவிர, மதம் மாறிய நபருக்கு பொருந்தாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.


நன்றி : முகநூல் நண்பரும் வழக்கறிஞருமான Dhanesh Balamurugan

No comments:

Post a Comment