disalbe Right click

Monday, April 30, 2018

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான கையேடு


தமிழக அரசின் போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள
இரு சக்கர வாகன ஓட்டிகள் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிகள் கையேடு

Image may contain: text

No automatic alt text available.
No automatic alt text available.

Image may contain: text

No automatic alt text available.

No automatic alt text available.
No automatic alt text available.
Image may contain: text

Image may contain: text

Image may contain: text
Image may contain: text
No automatic alt text available.

Image may contain: text

Saturday, April 28, 2018

நீதிமன்றத்தில் ஆவண நகல்களைப் பெற.....

நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்கள்
கடந்த வாரத்தில் ஒரு நாள், எனது நண்பரின் கடைக்குச் சென்றிருந்தேன். அவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அத்துடன் ஜெராக்ஸ் கடையையும் இணைத்து நடத்தி வருகிறார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க வந்திருந்தார். எனது நண்பர் அவர் கொண்டு வந்த ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது அவற்றை நான் கவனித்ததில் அது ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு நகல் என்பதையும், அவரை கவனித்ததில் மிகவும் ஏழ்மையானவர் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
எவ்வளவு செலவு?
  • அதைப் பெறுவதற்கு எவ்வளவு செலவழித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருந்தது.
  • ஏனென்றால், எனது வழக்கில் பார்ட்டி இன் பெர்சன் ஆக ஆஜராகி அந்த வழக்கின் உத்தரவு ஆவணங்களை அந்த சமயத்தில்தான் நான் பெற்றிருந்தேன்.
7 பக்க உத்தரவு நகலைப் பெற்றுத் தருவதற்கு வழக்கறிஞர் கட்டணம் ரூ.1300
  • இதற்குள் ஜெராக்ஸ் எடுத்து முடிக்கப்பட்டு அதற்கு கூலியாக எனது நண்பர் அவரிடமிருந்து 14 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார்.
  • அங்கிருந்து கிளம்பிய அவரிடத்தில், யார் மூலமாக இந்த உத்தரவு நகலைப் பெற்றீர்கள்?, இதனைப் பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்று கேட்டேன்.
  • அவர் அவரது வழக்கறிஞர் மூலமாக பெற்றதாகவும், அதற்காக அவருக்கு 1300 ரூபாய் கொடுத்ததாகவும் வருத்தத்தோடு கூறினார்.
  • அதிர்ச்சி அடைந்தேன் நான்.
  • வழக்கு சம்பந்தமான ஆவண நகல்களை நாமே மனுச் செய்து பெற முடியும் என்பதையும், அதற்கு செலவு அதிகபட்சம் 50 ரூபாய்தான் ஆகும் என்பதையும் அவரிடத்தில் எடுத்துக் கூறினேன்.
  • இது பற்றி ஒன்றுமே தனக்குத் தெரியாது என்றும், இது போன்ற ஒரு சூழ்நிலை இனி ஏற்பட்டால் என்னை சந்தித்து சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்கிறேன் என்றும் கூறி எனது முகவரியை பெற்றுச் சென்றார்.
  • நமது மக்கள் சட்ட அறிவு இல்லாத காரணத்தால், எவ்வளவு நஷ்டம் அடைகிறார்கள் என்ற கவலையையும், நமது மாநிலத்தில் சட்ட விழிப்புணர்வு இலவச முகாம்களை நடத்தி வருகின்ற ”லா பவுண்டேஷன், சென்னை”-யின் நிறுவனர் நண்பர் சரவண அர்விந்த் போல, எங்கள் பகுதியிலும் இலவச சட்ட விழிப்புணர்வு நடத்த வேண்டிய அவசியத்தையும் அந்த சம்பவம் எனக்கு ஏற்படுத்தியது.
  • மேலும், இந்த பதிவை போடத் தூண்டியது அந்த நிகழ்ச்சிதான்!
நகல்களை எந்த வழிகளில் பெறலாம்?
  • பொதுவாக, அரசு அலுவலகங்களில் உள்ள ஆவணங்களின் நகலை பொதுவாக நாம் இரண்டு வழிகளில் பெறலாம்.
  • 1. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ், பத்து ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலம் நமக்குத் தேவையான ஆவண நகல்களைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்கின்ற கட்டணத்தை மாவட்ட கருவூலம் மூலம் செலுத்தி தபால் மூலம் அவைகளைப் பெறலாம்.
  • 2. இந்திய சாட்சியச் சட்டம்
  • இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 76ன் கீழ் ஐந்து ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலம் நமக்குத் தேவையான ஆவண நகல்களைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்கின்ற கட்டணத்தை செலுத்தி, நேரிடையாகவும், தபால் மூலமாகவும் அவைகளைப் பெறலாம்.
நீதிமன்றங்களில் உள்ள ஆவண நகல்களைப் பெற......
  • மேற்கண்ட முறைகளில் எவரும், பதிவுத்துறையில் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்களைப் பெற முடியாது.
  • பதிவுத்துறைக்கென்றும், நீதிமன்றத்திற்கென்றும் சில வழிமுறைகளை நமது அரசு வகுத்து வைத்து உள்ளது.
  • அதன்படிதான் அவர்களிடமிருந்து நாம் ஆவண நகல்களைப் பெற முடியும்.
  • இதனைப் பெறுவதற்கு ஆங்கிலத்தில் C.A என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்கிறார்கள். அதன் விரிவான வார்த்தை Copy Application ஆகும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்களை அந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர்கூடப் பெறலாம்.
  • ஆனால், எந்த வழக்கின் ஆவண நகல்கள் உங்களுக்கு வேண்டுமோ, அந்த வழக்கின் எண், அந்த வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகள் பெயர்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
  • அவற்றை பச்சைக் கலர் பேப்பரில் (கான்கிரிட் பேப்பர்) எழுதி, அதில் 20 ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி கையொப்பமிட்டு, நீதிமன்றம் துவங்கும் நேரத்தில், நீதிமன்ற ஊழியர் பிராது வாங்கும் சமயத்தில் அவரிடத்தில் அதனை கொடுக்க வேண்டும்.
  • ஆவண நகல்கள் அவசரமாக வேண்டும் என்றால், அதில் அவசரம் என்றோ அல்லது ஆங்கிலத்தில் EMERGENT என்றோ எழுதி மேற்கொண்டு 2 ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி கொடுக்க வேண்டும்.
மாதிரி மனு 


நடுவர் என்ன செய்வார்?
  • அதில் நடுவர் அவர்கள் தன்னுடைய சுருக்குக் கையெழுத்து இட்டு கீழே அமர்ந்துள்ள MC என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற Magistrate Clerkகிடம் கொடுப்பார்.
  • அவர் டவாலியிடம் அதனை அளிப்பார்.
  • டவாலி அதனை RC எனப்படும் Record Clerkகிடம் கொடுப்பார்.
  • Record Clerk அதனை பதிவு செய்வார்.
  • இது நீதிமன்றம் துவங்கிய சிறிது நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடும்.
  • நடுவர் அனுமதி கொடுத்திருக்கிறாரா? இல்லையா? என்பது அங்கு நாம் இருந்தால், உடனடியாக நமக்குத் தெரிந்துவிடும்.
  • நம்மை அழைக்க மாட்டார்கள். நாமாகத்தான் இதனை இருந்து அறிந்து கொள்ள வேண்டும்.
  • வேறு அவசர வேலைகள் இருந்தால் அன்று அல்லது மறுநாள் மாலை நேரத்தில் நீதிமன்றம் சென்றும் அதனை அறிந்து கொள்ளலாம்.
நகல் வழங்க நடுவர் அனுமதி கொடுத்தே ஆகவேண்டுமா?
  • ஆவண நகல்கள் கேட்டு விண்ணப்பித்தவருக்கு அதைத் தருவதில் நடுவருக்கு இயலாமை இருந்தால், அதனை உங்கள் மனுவின் பின்புறத்தில் எழுதி கொடுத்துவிடுவார்.
  • அந்த மனுவை நீங்கள் Record Clerkகிடம் இருந்து முறைப்படி பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
  • உதாரணமாக குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றில் காவல்துறை ஆய்வாளர் அவர்களின் விசாரணை அறிக்கையின் நகலை நான் கேட்டு Copy Application செய்திருந்தேன்.
  • அந்த அறிக்கையை காவல் ஆய்வாளர் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டு நாட்களுக்குள் Copy Application நான் செய்ததால் அதனை வழங்க இயலாது என குறிப்பிட்டு எனது மனுவை நடுவர் அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
  • சில மாதங்கள் கழித்து மீண்டும் விண்ணப்பித்து அவைகளைப் பெற்றேன்.
நடுவர் அனுமதி கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
  • நடுவர் அனுமதி கொடுத்தால், கேஸ்கட்டுகளை வைத்து பராமரிக்கும் அலுவலரை நீங்கள் அணுக வேண்டும்.
  • அவர் ஒரு இரண்டு நாட்கள் கழித்து உங்களை வரச்சொல்லுவார்.
  • அந்த நேரம் சென்றால், நகல் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணத்திற்கான (ஜெராக்ஸ்) செலவை, உங்களிடம் இருந்து மெமோவில் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டுவதன் மூலமாக, பெற்றுக் கொள்வார்.
  • அதன் பிறகு அந்த ஆவண (அனைத்து) நகல்களில் அவர் கையொப்பம் இட்டு, நடுவர் அவர்களிடமும் கையொப்பம் பெற்று அவற்றை உங்களுக்கு அளிப்பார்.
  • அவைகள் உண்மை நகலாகும்.
மாதிரி மெமோ

அமர்வு நீதிமன்றங்களில் நகல் பெற வேண்டுமென்றால், நகல் கண்காணிப்பாளர் Copy Superintendent அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.04.2018 

Monday, April 16, 2018

மோசடி செய்வது சிவில் வழக்கா?

சிவில் வழக்கு கிரிமினல் வழக்காக மாற வாய்ப்புண்டு!
ஆனால், கிரிமினல் வழக்கு சிவில் வழக்காக மாறாது!
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், எனது சங்க நிர்வாகிகள், போலி ஆவணம் புனைந்தது மற்றும் அதனை உண்மையானது போல பயன்படுத்திக் கொண்டிருப்பது பற்றி வழக்கு ஒன்று (Cr.M.P. No.:6216/2017) தாக்கல் செய்திருந்தேன்.
இந்தி்ய தண்டணைச் சட்டம், பிரிவுகள் 468 மற்றும் 471ன்படி ஒவ்வொரு பிரிவிற்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கக்கூடிய அளவுக்கு அது கடுமையான கிரிமினல் குற்றம் செய்யப்பட்டவர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு அது. முழுக்க முழுக்க ஆவண சாட்சியங்களின் அடிப்படியில் அது என்னால் தொடுக்கப்பட்டிருந்தது.
விளக்கம் கேட்ட நடுவர்
வழக்கை எடுப்பதற்கு முன்னமே சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்கள் இது சிவில் வழக்கு போல் இருக்கிறதே, இங்கு வந்து தாக்கல் செய்ததற்கான காரணம் என்ன? என்று என்னிடம் விளக்கம் கேட்டு எனது கேஸ்கட்டை திருப்பி கொடுத்துவிட்டார்கள். .
நானும் நடைபெற்ற குற்றங்களையும், அதற்குரிய சட்டப் பிரிவுகளையும் அதற்குரிய தண்டணைகளையும் குறிப்பிட்டு இது கிரிமினல் கேஸ்தான் என்பதை எனது உரையின் மூலம் அழுத்தமாக தெளிவு படுத்தினேன்.
அதன் பிறகே கேஸ் நம்பரானது.
ஒரு வருடத்திற்கு மேலாக வழக்கு நடந்தது. முடிவில் இது கிரிமினல் சாயம் பூசப்பட்ட சிவில் கேஸ் என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கு கிரிமினல் வழக்குதான் என்பதற்கான விளக்க உரை

குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு:155(4)
ஒரு வழக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குற்றங்களைப் பற்றியதாக இருந்து அவற்றில் குறைந்தது ஏதேனும் ஒன்று கைது செய்யப்படக்கூடிய குற்றமாக இருந்தால், அவ்வழக்கு கைது செய்யப்படக்கூடிய வழக்காக கொள்ள வேண்டும்.

 
பசுமாட்டின் கதையைப் போலவே எனது வழக்கும் இருக்கிறதா?
சொல்லுங்கண்ணே, சொல்லுங்க!
************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 17.04.2018

Friday, April 13, 2018

மதம் மாறினால் வாரிசு உரிமை என்னாகும்?

முடியும், ஆனால் முடியாது!
இந்துவாக இருக்கின்ற ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கோ, முஸ்லீம் மதத்திற்கோ மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது தந்தையின் சொத்தில் அவருக்கு கண்டிப்பாக பங்கு உண்டு. ஆனால், அவரது பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் பங்கு கிடையாது. 
இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு-26
மேற்கண்ட குழப்பங்களுக்கு இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு - 26 தீர்வு தருகிறது.  இந்து மதத்தைச் சேர்ந்த தகப்பனார் ஒருவர் இறந்து போனால், அவரது வாரிசான அவரது மகனுக்கு அல்லது மகளுக்கு   (அந்த மகன்/மகள் மதம் மாறி இருந்தாலும்) அவரது சொத்துக்கள் சேரும்.  அதோடு வாரிசுரிமை ஒரு முடிவுக்கு வந்துவிடும். மகனின் மகன்களுக்கு அதாவது பேரன்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது.
தந்தை இறப்புக்கு முன்னரே மகன்/மகள் இறந்திருந்தால்?
தந்தையார் உயிரோடு இருக்கிறார். அவருக்கு முன்னரே மதம் மாறிய அவரது மகன்/மகள் இறந்துவிட்டார். ஆனால், மகனின்  மகன் மகள் அல்லது மகளின் மகன் மகள்  அதாவது பேரன் பேத்தி உயிரோடு இருக்கிறார். இந்த நிலையில் தாத்தா இறந்து விடுகிறார். தாத்தாவின் சொத்தில் மதம் மாறிய தந்தைக்கு வரவேண்டிய பங்கு, மேற்கண்ட எந்த பேரனுக்கும் எந்த பேத்திக்கும் கிடைக்காது. 
சுருக்கமானச் சொல்வதென்றால், இறந்து போன ஒரு இந்துவின் சொத்துக்களை நேரடியான அவரது வாரிசுகள் அடைந்து கொள்ளலாம். அவர்கள் எந்த மதத்திற்கு மாறியிருந்தாலும் சரி. ஆனால், மதம் மாறிய வாரிசின் வாரிசுகளுக்கு அந்த உரிமை ரத்தாகிறது. இதுவே  இந்து வாரிசுரிமைச் சட்டம், பிரிவு - 26 தருகின்ற  தீர்வாகும்.
E. ரமேஷ் மற்றும் ஒருவர் Vs P. ரஜினி மற்றும் இருவர் (2002-MLJ-216)" என்ற வழக்கில், ஜாதிக் குறைபாடுகளை போக்கும் சட்டத்தின் பிரிவு 1ன்படி, ஒரு இந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதால், அவருக்கு தனது சொத்தை இழந்து விடுவார் என்பது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே  தீர்ப்பளித்துள்ளது
***************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.04.2018 

Thursday, April 12, 2018

இந்துக்கள் திருமணம் - பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கை

இந்துக்கள் தங்களது திருமணத்தை பதிவுத்துறையில் பதிவு செய்து கொள்ளும் போது, அதனை பதிவு செய்கின்ற பதிவுத்துறை அலுவலர்கள் என்னென்னெ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அவர்களுக்கு பதிவுத்துறை தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.  
அவ்வாறு வழங்கப்பட்ட சுற்றறிக்கைகள் பற்றிய தெளிவுரை, கடந்த 14.03.2018 அன்று பதிவுத்துறை தலைவர் அவர்களால், திருமணப் பதிவு அலுவலர்களுக்கு தற்போது  வழங்கப்பட்டுள்ளது. 
அவுங்க தப்பு செஞ்சாலும் நாமதான் அலையணும்!  
  1. இதன்படி மனுதாரர்கள் சரியாக மனுவை பூர்த்தி செய்திருந்து சமர்ப்பித்திருந்தாலும், அரசு அலுவலர்களால் அந்த விபரத்தை டைப் செய்யும்போது தவறு ஏற்பட்டாலும்,  மனுதாரர்கள் தவறாக மனுவை பூர்த்தி செய்து விண்ணப்பத்திருந்தாலும்,  வழங்கப்படுகின்ற திருமணச் சான்றுகளில்  அதனால் ஏற்படுகின்ற  தவறுகளை திருத்தம் செய்ய சென்னையிலுள்ள பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  2. ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஆதார் அட்டை திருமணப் பதிவிற்கு கட்டாயம் இல்லை.
  3. மணமக்கள் மற்றும் சாட்சிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளை திருமணப் பதிவு அலுவலர் நன்கு சரிபார்த்த பின்னரே பதிவு மேற்கொள்ள வேண்டும்.
  4. மணமக்களின் பெற்றோர்கள் இறந்துவிட்டிருந்தால், அவர்களது பெயருக்குப் பின் (லேட்) என்று குறிப்பிட்டால் போதுமானது. இறப்புச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டியதில்லை.
  5. மணமக்களில் யாரேனும் ஒருவர் கணவரை இழந்தவர் அல்லது மனைவியை இழந்தவர் என்று குறிப்பிட நேர்ந்தால், இறந்த மனைவி அல்லது கணவரின் இறப்புச் சான்றிதழை கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். அதனை பதிவு அலுவலர் சரிபார்க்க வேண்டும்.
பதிவுத்துறைத் தலைவர் அவர்களின் சுற்றறிக்கை நகல்கள் பெற https://tnreginet.gov.in/
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 13.04.2018 

ஆய்வு அறிக்கை பற்றி காவல் நிலை ஆணை

காவல்துறையில் கைது செய்யக்கூடிய குற்றம் குறித்து, தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தினால், ஒருவர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுக்கிறார். குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு, அந்த மனு ஏற்றுக் கொள்ளத் தக்கதா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறார். ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை என்றால், உடனே நடுவர் அவர்கள் தள்ளுபடி செய்து விடுவார்.
மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால்?
மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால், விசாரணை செய்து அறிக்கை தருமாறு அந்தப் பகுதி காவல் நிலையத்திலுள்ள காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நடுவர் அவர்கள் உத்தரவு இடுவார்.  அந்த காவல்நிலையத்தில் இருந்து நீதிமன்ற பணிக்கு  வந்துள்ள காவலர் மூலம், நீங்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களும் அந்தக் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு  அனுப்பப்படும். சில நடுவர்கள் இத்தனை நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் என்று உத்தரவில் சொல்கிறார்கள். சிலர் அதனை குறிப்பிடுவதில்லை. அப்படி குறிப்பிடாத பட்சத்தில், விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்ய, மூன்று மாதங்கள் கூட ஆகிறது. ஆனால், இது போன்ற புலனாய்வுகள் ஒவ்வொன்றும் அனாவசியமான தாமதம் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 கூறுகிறது. 
இறுதி அறிக்கையினை நடுவரிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகுகூட அந்தக் குற்றத்தைப் பற்றி புலனாய்வு செய்ய தடை இல்லை என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 (8) கூறுகிறது.  இந்த இறுதி அறிக்கைகள் குறித்து காவல் நிலை ஆணைகளில் கூறப்பட்டுள்ளதைப் பற்றிக் காண்போம்.
Tamilnadu Police Standing Orders
காவல் நிலை ஆணை எண்:566
விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன் விசாரணை அதிகாரிகள் ஒருவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து கொள்ளக்கூடாது. சம்பவத்தில் உள்ள உண்மையை நடுநிலை பிறழாமல் கண்டுபிடிக்க வேண்டும். நீதிமன்றமானது உண்மையைக் கண்டுகொண்டு நியாயமான முடிவினை எடுக்க அனைத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:568
ஒரு வழக்கு நாட்குறிப்பிலுள்ள புலன்விசாரணைப் பதிவில், புலன் விசாரணை அதிகாரிக்கு தகவல் கிடைத்த நேரம், அவர் தனது புலன் விசாரணையை தொடங்கிய நேரம், முடித்த நேரம், அவ்ர் போய் பார்த்த இடங்கள் மற்றும் நபர்கள், புலன் விசாரணை மூலம் அவர் கேட்டறிந்த விஷயங்களின் அறிக்கை ஆகியவற்றின் அன்றாட விபரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:570
வழக்கு நாட்குறிப்புகளை நகல் எடுத்துக் கொண்டு ஒரு நகலை காவல்நிலையத்திலுள்ள  கோப்பில் வைத்துக் கொண்டு மற்றோன்றை வட்டக் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சார்பு ஆய்வாளர் அவர்கள் அனுப்ப வேண்டும். வட்டக் காவல் ஆய்வாளர் அவர்கள் அதில் தேவையான குறிப்புகளை எழுதி அதனை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அல்லது   காவல்துறை கண்காணிப்பாளர்  அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:658
இறுதி அறிக்கையானது படிவம் எண்:89ல் அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவர் அவர்களுக்கு, காவல் ஆய்வாளர் அவர்களால் அல்லது புலன் விசாரணை அதிகாரி அவர்களால்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 ன் கீழ் அனுப்பப்பட வேண்டிய அறிக்கையாகும். 
படிவம் எண்:89 என்பது விசாரணை செய்கின்ற வழக்குகளை பொய்வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும், துப்பறிய முடியாத வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்ற படிவம் ஆகும்.
காவல் நிலை ஆணை எண்:659
விசாரணை செய்கின்ற வழக்குகளை, அவைகள் பொய்யாக இருந்தால் மட்டுமே, பொய் வழக்கு என்று அறிக்கை செய்ய வேண்டும். அந்த வழக்குகளை பொய்யென்று நம்புவதற்கு தகுந்த  ஆதாரங்கள்  விசாரணை அதிகாரிக்கு கிடைத்தால் ஒழிய, அந்த வழக்குகளை பொய் வழக்கு என்று சொல்லக்கூடாது. பொய்வழக்காக பெரும்பாலும் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி எண்ணுவதை ஏற்க முடியாது. பொய் வழக்கு என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றாலோ விசாரணை அதிகாரியானவர், அந்த வழக்கை துப்பு துலக்க முடியாத வழக்கு என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும். 
காவல் நிலை ஆணை எண்:660
விசாரணை செய்கின்ற வழக்குகளில் எடுக்கின்ற முடிவை, படிவம் எண்:90ல் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(ன் கீழ் புகார் அளித்தவருக்கு அனுப்பிட வேண்டும். அதன் நகலை இறுதி அறிக்கையோடு சேர்த்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:661
நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுகின்ற ஆய்வு அறிக்கைகள் காவல் வட்ட ஆய்வாளர் மூலமாகவே அனுப்ப வேண்டும். வேறு ஒரு காவல் அலுவலர் மூலம் விசாரணை செய்யப்பட்ட வழக்கின் முடிவு மீது  சந்தேகம் வந்தால், அந்த வழக்கை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட காவல் வட்ட ஆய்வாளர் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அல்லது அவரே அந்த வழக்கை  விசாரணை செய்யலாம்.
காவல் நிலை ஆணை எண்:662
விசாரணை செய்கின்ற வழக்கு திட்டமிட்ட பொய் வழக்கு என்று ஆய்வு அறிக்கையின் மூலம் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் முடிவு செய்தால், அந்த வழக்கைத் தொடுத்த மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க எண்ணுகிறாரா? இல்லையா? என்பதை  அந்த அறிக்கையில் முடிவில் தெரிவிக்க வேண்டும். அப்படி முடிவெடுக்காவிட்டால், ஏன் நடவடிக்கை எடுக்க எண்ணவில்லை? என்ற காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:663
பொய்யான தகவல்களைக் கொடுத்து, புகார் அளித்த ஒருவர் மீது வழக்குத் தொடுப்பது” இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 182 மற்றும் பிரிவு 211 ன் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும்.  இந்தப் பிரிவுகளின் கீழ் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவு இல்லாமல், பொய் புகார் அளித்த ஒருவர் மீது வழக்குத் தொடுக்கக் கூடாது.
காவல் நிலை ஆணை எண்:664
கொடுக்கப்பட்ட பணியில் செய்த குற்றங்களுக்காக, ஊரகப் பகுதியிலுள்ள  அரசுப் பணியாளர்களின் மீது  வழக்குத் தொடுப்பதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். சென்னை மாநகராக இருந்தால், அந்தத் துறைத் தலைவரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இத்தகைய அனுமதி கோருகின்ற   காவல்துறையினருக்கு பத்து நாட்களுக்குள் அவர்கள் பதிலை அனுப்பிவிட வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:668
விசாரணை செய்கின்ற வழக்குகளை, பொய் வழக்கு என்று காவல்துறை ஆய்வாளர் அவர்களால் அறிக்கை செய்யப்பட்டிருந்து, அந்த அறிக்கையானது நடுவருக்கு மனநிறைவை கொடுக்காவிட்டால்,     குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 190 ன் கீழ், தானாகவே நடவடிக்கை எடுக்க நடுவருக்கு அதிகாரம் உண்டு.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.04.2018 

Sunday, April 8, 2018

அரசு ஊழியர் மீது வழக்கு!

அரசு ஊழியர்கள் யார்?
பொதுமக்களுக்கு இவர்கள் அதிகாரிகளா? அல்லது எஜமானர்களா?
இவர்களின் பணிதான் என்ன?
இவர்களின் கடமை தவறிய செயல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை, சட்ட விரோத காரியங்களை தட்டிக் கேட்பது எப்படி?
இதுபோன்ற கேள்விகள் நம் ஒவ்வொருவர் மனதிலும் எழாமல் இருக்க வாய்ப்பே இல்லை.
ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதுதான்.
மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணி செய்வதற்காக பலதரப்பட்ட அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே!
மக்கள்தான் இவர்களுக்கு எஜமானர்கள்
மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
பணி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது.
அரசு அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களுக்கு பணிபுரியும் ஊழியர்கள்தானே தவிர அரசர்கள் அல்ல.
ஆனால் உண்மையில் அரசு ஊழியர்கள் எப்படி பொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள்?
அரசு ஊழியர்கள் தங்களை அரசர்கள் போல நினைத்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் உள்ளது போல நினைத்துக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.
உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், நியாயத்தை கேட்கும் பொதுமக்கள் என அனைவர் மீதும், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக பொய் புகார் அளித்து காவல்துறையினர் உதவியுடன் வழக்கு பதிவு செய்கின்றனர்.
அரசு வழங்கும் ஊதியங்களையும், சலுகைகளையும் பெற்றுக் கொண்டு சொகுசான ஆடம்பர வாழ்க்கை வாழும் இவர்கள் ஏழை, எளிய மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை கொள்வதில்லை. பொதுமக்களிடம் கையேந்தி லஞ்சம் என்னும் பிச்சை எடுக்கின்றனர்.
எத்தனையோ சட்டங்களின் இருந்தும் இதுபோன்ற அரசு ஊழியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? அதற்கான காரணம் என்ன? என்பதை யோசித்து பாரத்தால் அற்ப காரணங்களால் தான் தப்பி விடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக....
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 01.08.2014 ஆம் தேதி ரிட் மனு எண். 20527/2014 ல் உத்தரவு பிறப்பித்தது.
மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுபடி பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசும் 21.09.2015 ஆம் தேதி அரசாணை எண். 99 வெளியிட்டது.
ஆனால் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவையோ அல்லது அரசாணை எண் 99 யையோ  யாராவது மதிக்கிறார்களா?
அப்படி என்றால் இவர்களை எப்படி தண்டிப்பது?
மக்கள் பணி செய்யாத, செய்ய தவறுகிற அரசு ஊழியர்கள் அனைவரும் கடமை தவறிய கேடு கெட்ட அலுவலர்களே என்று சட்டம் கூறுகிறது. மேலும் இதுபோன்ற அலுவலர்களுக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 கூறுகிறது.
ஆனால் தண்டனை பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அற்ப காரணங்களின் அடிப்படையில் தான் தவறு செய்யும் அரசு ஊழியர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள். சட்டத்தில் உள்ள அந்த ஓட்டை என்ன?
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 தான் அந்த ஓட்டை.
Cr. P.C. sec 197 - Prosecution of judges and public servants
பொது ஊழியர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் மத்திய அல்லது மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அனுமதி பெறாமல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் கு. வி. மு. பிரிவு 197 கூறுகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 166(), 166(), 354, 354(), 354(), 354(), 370, 375, 376, 376(), 376(), 376(), 509 போன்ற குற்றங்களை ஒரு அரசு ஊழியர் செய்தால் அதற்கு அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. மேலும் ஊழல், பொய் ஆவணம் தயாரித்தல், பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக வழக்கு தொடரவும் அனுமதி பெற தேவையில்லை.
அரசு ஊழியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை பார்த்தால், அநேகமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 197 காரணம் காட்டி தப்பி சென்றிருப்பதாகவே துலங்குகிறது.
எனவே ஒரு அரசு ஊழியர் அவரது கடமையை செய்யத் தவறினால் அவர்மீது வழக்கு தொடர அந்தந்த துறை செயலாளர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் எழுத்து மூலமாக அனுமதி கேட்டு பதிவுத் தபாலில் அனுப்பி அதன்பிறகு தான் குற்ற வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தவறு செய்த அதிகாரி ஈசியாக தப்பி விடுவார்.

விழிப்புணர்வுக்காக இந்த பதிவை பதிவேற்றம் செய்துள்ளேன்.  
நன்றி : வழக்கறிஞரும் எனது நண்பருமான  Dhanesh Balamurugan அவர்களுக்கு.

அரசு ஊழியர் மீது வழக்குத் தொடர்வது குறித்த செய்தி - தி இந்து தமிழ் நாளிதழ் - 09.10.2018



************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 08.04.2018