காவல்துறையில் கைது செய்யக்கூடிய குற்றம் குறித்து, தக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தினால், ஒருவர் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ் நீதிமன்றம் சென்று வழக்குத் தொடுக்கிறார். குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட்டு, அந்த மனு ஏற்றுக் கொள்ளத் தக்கதா? இல்லையா? என்பதை முடிவு செய்கிறார். ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை என்றால், உடனே நடுவர் அவர்கள் தள்ளுபடி செய்து விடுவார்.
மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால்?
மனு ஏற்று கொள்ளத் தக்கது என்றால், விசாரணை செய்து அறிக்கை தருமாறு அந்தப் பகுதி காவல் நிலையத்திலுள்ள காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நடுவர் அவர்கள் உத்தரவு இடுவார். அந்த காவல்நிலையத்தில் இருந்து நீதிமன்ற பணிக்கு வந்துள்ள காவலர் மூலம், நீங்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களும் அந்தக் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பப்படும். சில நடுவர்கள் இத்தனை நாட்களுக்குள் அறிக்கை வேண்டும் என்று உத்தரவில் சொல்கிறார்கள். சிலர் அதனை குறிப்பிடுவதில்லை. அப்படி குறிப்பிடாத பட்சத்தில், விசாரணை அறிக்கைத் தாக்கல் செய்ய, மூன்று மாதங்கள் கூட ஆகிறது. ஆனால், இது போன்ற புலனாய்வுகள் ஒவ்வொன்றும் அனாவசியமான தாமதம் இல்லாமல் முடிக்கப்பட வேண்டும் என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 கூறுகிறது.
இறுதி அறிக்கையினை நடுவரிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகுகூட அந்தக் குற்றத்தைப் பற்றி புலனாய்வு செய்ய தடை இல்லை என்று குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 (8) கூறுகிறது. இந்த இறுதி அறிக்கைகள் குறித்து காவல் நிலை ஆணைகளில் கூறப்பட்டுள்ளதைப் பற்றிக் காண்போம்.
Tamilnadu Police Standing Orders
காவல் நிலை ஆணை எண்:566
விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன் விசாரணை அதிகாரிகள் ஒருவருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நடைபெற்ற சம்பவம் குறித்து கருத்து கொள்ளக்கூடாது. சம்பவத்தில் உள்ள உண்மையை நடுநிலை பிறழாமல் கண்டுபிடிக்க வேண்டும். நீதிமன்றமானது உண்மையைக் கண்டுகொண்டு நியாயமான முடிவினை எடுக்க அனைத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:568
ஒரு வழக்கு நாட்குறிப்பிலுள்ள புலன்விசாரணைப் பதிவில், புலன் விசாரணை அதிகாரிக்கு தகவல் கிடைத்த நேரம், அவர் தனது புலன் விசாரணையை தொடங்கிய நேரம், முடித்த நேரம், அவ்ர் போய் பார்த்த இடங்கள் மற்றும் நபர்கள், புலன் விசாரணை மூலம் அவர் கேட்டறிந்த விஷயங்களின் அறிக்கை ஆகியவற்றின் அன்றாட விபரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:570
வழக்கு நாட்குறிப்புகளை நகல் எடுத்துக் கொண்டு ஒரு நகலை காவல்நிலையத்திலுள்ள கோப்பில் வைத்துக் கொண்டு மற்றோன்றை வட்டக் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு சார்பு ஆய்வாளர் அவர்கள் அனுப்ப வேண்டும். வட்டக் காவல் ஆய்வாளர் அவர்கள் அதில் தேவையான குறிப்புகளை எழுதி அதனை காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அல்லது காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:658
இறுதி அறிக்கையானது படிவம் எண்:89ல் அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவர் அவர்களுக்கு, காவல் ஆய்வாளர் அவர்களால் அல்லது புலன் விசாரணை அதிகாரி அவர்களால் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 ன் கீழ் அனுப்பப்பட வேண்டிய அறிக்கையாகும்.
படிவம் எண்:89 என்பது விசாரணை செய்கின்ற வழக்குகளை பொய்வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும், துப்பறிய முடியாத வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்ற படிவம் ஆகும்.
காவல் நிலை ஆணை எண்:659
விசாரணை செய்கின்ற வழக்குகளை, அவைகள் பொய்யாக இருந்தால் மட்டுமே, பொய் வழக்கு என்று அறிக்கை செய்ய வேண்டும். அந்த வழக்குகளை பொய்யென்று நம்புவதற்கு தகுந்த ஆதாரங்கள் விசாரணை அதிகாரிக்கு கிடைத்தால் ஒழிய, அந்த வழக்குகளை பொய் வழக்கு என்று சொல்லக்கூடாது. பொய்வழக்காக பெரும்பாலும் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி எண்ணுவதை ஏற்க முடியாது. பொய் வழக்கு என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றாலோ விசாரணை அதிகாரியானவர், அந்த வழக்கை துப்பு துலக்க முடியாத வழக்கு என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:660
விசாரணை செய்கின்ற வழக்குகளில் எடுக்கின்ற முடிவை, படிவம் எண்:90ல் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 157(ஆ) ன் கீழ் புகார் அளித்தவருக்கு அனுப்பிட வேண்டும். அதன் நகலை இறுதி அறிக்கையோடு சேர்த்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் அவர்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:661
நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படுகின்ற ஆய்வு அறிக்கைகள் காவல் வட்ட ஆய்வாளர் மூலமாகவே அனுப்ப வேண்டும். வேறு ஒரு காவல் அலுவலர் மூலம் விசாரணை செய்யப்பட்ட வழக்கின் முடிவு மீது சந்தேகம் வந்தால், அந்த வழக்கை மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட காவல் வட்ட ஆய்வாளர் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. அல்லது அவரே அந்த வழக்கை விசாரணை செய்யலாம்.
காவல் நிலை ஆணை எண்:662
விசாரணை செய்கின்ற வழக்கு திட்டமிட்ட பொய் வழக்கு என்று ஆய்வு அறிக்கையின் மூலம் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் முடிவு செய்தால், அந்த வழக்கைத் தொடுத்த மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க எண்ணுகிறாரா? இல்லையா? என்பதை அந்த அறிக்கையில் முடிவில் தெரிவிக்க வேண்டும். அப்படி முடிவெடுக்காவிட்டால், ஏன் நடவடிக்கை எடுக்க எண்ணவில்லை? என்ற காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:663
”பொய்யான தகவல்களைக் கொடுத்து, புகார் அளித்த ஒருவர் மீது வழக்குத் தொடுப்பது” இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 182 மற்றும் பிரிவு 211 ன் கீழ் தண்டணைக்குரிய குற்றமாகும். இந்தப் பிரிவுகளின் கீழ் காவல் வட்ட ஆய்வாளர் அவர்கள் காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அல்லது மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோரின் உத்தரவு இல்லாமல், பொய் புகார் அளித்த ஒருவர் மீது வழக்குத் தொடுக்கக் கூடாது.
காவல் நிலை ஆணை எண்:664
கொடுக்கப்பட்ட பணியில் செய்த குற்றங்களுக்காக, ஊரகப் பகுதியிலுள்ள அரசுப் பணியாளர்களின் மீது வழக்குத் தொடுப்பதாக இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். சென்னை மாநகராக இருந்தால், அந்தத் துறைத் தலைவரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இத்தகைய அனுமதி கோருகின்ற காவல்துறையினருக்கு பத்து நாட்களுக்குள் அவர்கள் பதிலை அனுப்பிவிட வேண்டும்.
காவல் நிலை ஆணை எண்:668
விசாரணை செய்கின்ற வழக்குகளை, பொய் வழக்கு என்று காவல்துறை ஆய்வாளர் அவர்களால் அறிக்கை செய்யப்பட்டிருந்து, அந்த அறிக்கையானது நடுவருக்கு மனநிறைவை கொடுக்காவிட்டால், குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 190 ன் கீழ், தானாகவே நடவடிக்கை எடுக்க நடுவருக்கு அதிகாரம் உண்டு.
*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.04.2018
No comments:
Post a Comment