கணவனை இழந்த ஒரு வயதான பெண்மணி. சுயசம்பாத்தியத்தில் அவருக்கென்று பல சொத்துக்கள் இருக்கிறது. அவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். துரதிருஷ்டவசமாக மகன் இறந்துவிடுகிறார். மருமகள் விதவை ஆகிறார். மகனுக்கென்று குழந்தைகள் இல்லை. இந்த சூழ்நிலையில் எதிர்பாராவிதமாக அந்தப் பெண்மணியும் இறந்துவிடுகிறார். தான் சம்பாதித்து தனது பெயரில் வைத்துள்ள சொத்துகள் யார் யாருக்கு சேரவேண்டும் என்று எந்த ஒரு முன்னேற்பாடும் அந்தப் பெண்மணி செய்து வைக்கவில்லை.
எனக்கும் பங்கு இருக்கிறது!
எனது கணவர் உயிரோடு இருந்தால் அவருக்கு சொத்தில் பங்கு கொடுப்பீர்கள்தானே! நான் அவருடைய வாரிசு என்பதால் எனக்கும் அந்த சொத்தில் உரிமை இருக்கிறது. அந்த சொத்தினை மூன்று சமபங்காக போட்டு, எனக்கு ஒரு பங்கு தர வேண்டும் என்று இறந்துபோன பெண்ணின் மருமகள் கேட்கிறார். கேட்பவர்களுக்கு இது நியாயந்தானே! என்று தோன்றும்.
சொத்து எங்களுக்கு மட்டும்தான்!
இறந்துபோன பெண்ணின் மகள்கள் இருவரும், எங்கள் அம்மா பெயரில் இருக்கின்ற சொத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே சொந்தம் என்று தங்களது அண்ணனின் மனைவிக்கு பங்குதர மறுக்கிறார்கள். இது அநியாயம், அந்தப் பெண்ணிற்கு ஒரு பங்கு கொடுத்தால் என்ன? அவருடைய கணவன் பங்கைத்தானே அவர் கேட்கிறார் என்று நமக்குத் தோன்றும். பிரச்சனை தீர ஊர் பெரியவர்கள் இறந்து போன பெண்ணின் மகள்களிடம் பேசிப் பார்க்கிறார்கள். அவர்கள் ஒரே பிடிவாதமாக பங்கு தர மறுக்கிறார்கள். இந்த வழக்கு கோர்ட்டுக்குச் செல்கிறது. நீதிமன்றம் அந்த விதவை மருமகளுக்கு, மாமியாரின் சொத்தில் பங்கு இல்லை என்று தீர்ப்பளித்தது.
சட்டத்தின் கொடுமை இது!
இதை கேட்பதற்கே நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா? தனது பெற்றோரை, உடன் பிறந்தோரை, பழகிய பக்கத்து வீட்டு நண்பர்களை, சொந்த பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டு கணவனை மட்டுமே நம்பி, வாழ வந்த ஒரு பெண்ணுக்கு, கணவன் இறந்து போய்விட்ட சூழ்நிலையில் அவரது கணவனுக்கு உரிமையுள்ள சொத்தும் இல்லை என்றால், இது மிக மிக அநியாயமாக அல்லவா இருக்கிறது!
சட்டம் என்ன சொல்கிறது?
மேற்கண்டது போல சுய சம்பாத்திய சொத்துக்கள் கொண்ட பெண் ஒருவர், அந்த சொத்துக்கள் குறித்து முன்னேற்பாடாக ஏதும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அந்த சொத்துக்கள் அவரது வாரிசுகளான, கணவர், மகன்கள், மகள்கள் ஆகியோருக்குச் சேரும் என்றும், ஒருவேளை மகனோ அல்லது மகளோ ஏற்கனவே இறந்துபோயிருந்தால் அவர்களது குழந்தைகளுக்குச் சேரும் என்று சட்டம் சொல்கிறது. மகனின் மனைவிக்கோ, மகளின் கணவனுக்கோ அந்த சொத்து சேராது.
குறிப்பு: இந்த வழக்கு சம்பந்தமான விபரங்களை PROPERTY RIGHTS என்ற தலைப்பில் மரியாதைக்குரிய வழக்கறிஞர் திரு த.இராமலிங்கம் அவர்கள் பேசி You Tube ல் பதிவு செய்துள்ள வீடியோவில் இருந்து தெரிந்து கொண்டேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.04.2018
No comments:
Post a Comment