disalbe Right click

Thursday, May 17, 2018

வழக்கறிஞர் அல்லாதவர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமா?

வழக்கறிஞர் அல்லாதவர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமா?
நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் ஆஜராகலாமா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • தஞ்சாவூரைச் சேர்ந்தவர் விக்டர் வில்லியம். இவர் அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
  • இவர் 5 பேர்களுடன் இணைந்து ரூ. 20.84 லட்சம் கையாடல் செய்ததாக, தஞ்சாவூர் போலீஸார் கைது செய்தனர்.
  • இந்த வழக்கில் இவர் தஞ்சாவூர் 2-வது நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்றார்.
  • இந்த வழக்கை முதல் நிலை நடுவர்தான் விசாரிக்க வேண்டும். ஆனால் 2-வது நீதித்துறை நடுவர் 2-ம் நிலை நடுவராக இருப்பதால் அவர் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என இந்த வழக்கை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில், மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
  • ஆனால், நீதித்துறை நடுவர்களில் முதல் நிலை, இரண்டாம் நிலை கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று கூறி மனுவை நடுவர் தள்ளுபடி செய்ததால், அந்த வழக்கை அமர்வு நீதிமன்றத்தில் விக்டர் வில்லியம் மேல்முறையீடு மனு செய்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அல்லாத பி.பாலசுப்பிரமணியன் என்பவர் விக்டர் வில்லியமிற்காக வாதிட்டார்.
  • அமர்வு நீதிமன்றத்திலும் விக்டர் வில்லியமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
  • இதற்குப்பிறகு சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிவாரணங்களை கோரி குற்றவியல் மனுக்களை விக்டர் வில்லியம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.என். பிரகாஷ் அவர்கள் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.
  • உயர் நீதிமன்றத்திலும் விக்டர் வில்லியமிற்காக பி.பாலசுப்பிரமணியன் வாதிட்டார்.
  • வழக்கறிஞர் அல்லாத நீங்கள் நீதிமன்றத்தில் வாதாடலாமா? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, யாருக்காகவும் யார் வேண்டுமானாலும் வாதாடலாம் என வழக்கறிஞர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது என பாலசுப்பிரமணியன் பதில் தெரிவித்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
  • வழக்கு தொடர்பவர்களுக்காக வழக்கறிஞராக இல்லாவிட்டாலும், சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர் வாதாடலாம் என வழக்கறிஞர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
  • ஆனால் பாலசுப்பிரமணியன் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக, போலீஸாருடன் தகராறு செய்ததாக வழக்குகள் உள்ளது.
  • கீழமை நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளார்.
  • இதனால் அவரை நீதிமன்றம் ஏற்கனவே கண்டித்துள்ளது.
  • இந்த வழக்கிலும் இவர் தேவையில்லாமல் வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளார்.
  • இதனால் பி.பாலசுப்பிரமணியனை எந்தவொரு நீதிமன்றத்திலும் வாதாட அனுமதிக்கக்கூடாது என்றும், இந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்றும்,. மனுதாரருக்கு விதிக்கப்படுகின்ற ரூ.ஆயிரம் அபராத பணத்தை 2 வாரத்தில் உயர் நீதிமன்ற இலவச சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
(23.04.2016 அன்று வெளியான தி இந்து தமிழ் நாளிதழில் வெளியான செய்தியை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்தப்பதிவு)
https://www.hindutamil.in/news/tamilnadu/76467--1.html

**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 18.05.2018 

No comments:

Post a Comment