disalbe Right click

Thursday, June 14, 2018

காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க....?

காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க....?
நான் சார்ந்திருக்கும் சங்க நிர்வாகிகள் 2014-’15 மகாசபைக்கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் கலந்து கொண்டது போல, போலி ஆவணம் தயாரித்து அதனை உண்மையான ஆவணம் போல் பயன்படுத்திக் கொண்டிருப்பதினால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என்று சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை, பார்ட்டி இன் பெர்சன் ஆக தாக்கல் செய்திருந்தேன்.
காவல் ஆய்வாளருக்கு உத்தரவு
எனது வேண்டுகோளை ஏற்ற நீதித்துறை நடுவர் அவர்கள் எனது கேஸ்கட்டை திருத்தங்கல் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அனுப்பி வைத்து, இருதரப்பினரிடமும் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 
நடைபெற்ற விசாரணையில்....
நடைபெற்ற விசாரணையில் நான் எனது தரப்பு விளக்கத்தை எடுத்துரைத்தேன். போலி ஆவணத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் என்று சுமார் 40 பெயர்கள் என்னால் ஏற்கனவே வழக்கில் அடையாளம் காட்டப்பட்டிருந்தது. அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதாக காவல் ஆய்வாளர் என்னிடம் உறுதியளித்தார். 
கிடைத்தது மற்றோரு மோசடி ஆவணம்!
இதற்கிடையில் சங்க நிர்வாகிகளின் கையெழுத்தே இல்லாமல் கோர்வை செய்யப்பட்ட எங்கள் சங்கத்தின் 2014-’15 நிதியாண்டு வரவு செலவு அறிக்கை எனது கைகளுக்குக் கிடைத்தது.  
பொதுவாக, சங்கத்தின் கணக்குகளை நிர்வாகிகள் எழுதி, அதில் அவர்களின் கையொப்பமிட்டு, அதனை தகுதியுள்ள ஆடிட்டர் ஒருவரிடம் கொடுத்து சரிபார்க்கச் சொல்லி, சரியாக இருக்கிறது என்று அவரிடம் ஒரு சான்றிதழ் பெற வேண்டும். 
வரவு செலவு அறிக்கையின் வழிமுறை என்ன?
எங்களது சங்க பைலா விதிகளின்படி, ஆடிட்டரிடம் சான்றிதழ் பெற்ற பிறகு அந்த வரவு செலவு அறிக்கையை  நிர்வாகக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து விவாதம் நடத்தி ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு மகாசபைக் கூட்டத்தில் சமர்ப்பித்து, அங்கு வருகை தந்துள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும்  அதன் நகல் வழங்கி, விவாதம் நடத்தி ஏகமனதாக அவர்கள் ஏற்றுக் கொண்டதாக தீர்மானம் இயற்றி உறுப்பினர்களின் கையொப்பம் பெற வேண்டும்.
நிர்வாகிகள் கையெழுத்து இல்லாமலேயே பதிவு செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை
ஆனால், எங்கள் சங்கத்தின் 2014-’15 நிதியாண்டு வரவு செலவு அறிக்கை (சுமார் 9 கோடி ரூபாய்)  சங்க நிர்வாகிகளின் கையெழுத்தே இல்லாமல், (1)ஆடிட்டர் சான்றிதழ் பெற்று, (2) நிர்வாகக்குழு ஒப்புதல் பெற்று, (3) மகாசபையின் ஒப்புதல் பெற்று, (4) மாவட்டப் பதிவாளர் அவர்களின் ஒப்புதல் பெற்று கோர்வையும் செய்யப்பட்டுள்ளது.
வாங்க மறுத்த ஆய்வாளர்
அந்த வரவு செலவு அறிக்கையும் மோசடியானது என்று எடுத்துக்கூறி அதனையும் வழக்கில் இணைத்துக் கொள்ளுமாறு காவல் ஆய்வாளரிடம் வேண்டினேன். அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார்.  அதனால், அதனை அவருக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தேன். அதன் பிறகு ஏனோ அவர் என்னை விசாரணைக்கு அழைக்கவே இல்லை.
மறு புலன் விசாரணை செய்யலாம்
விசாரணை அறிக்கையை நடுவருக்கு அனுப்பிய பின்னர்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173(8)ன்படி விசாரணை அதிகாரியானவர் தான் புலன்விசாரணை செய்து முடித்த வழக்கு ஒன்றில் தேவைப்பட்டால் மறு புலன் விசாரணையை மேற்கொள்ளலாம் என்பதை அவர் மறைத்துவிட்டாரா? அல்லது மறந்துவிட்டாரா? என்று தெரியவில்லை. 
அதிர்ச்சி அளித்த விசாரணை அறிக்கை
விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக அறிந்து, அதன் நகலை நீதிமன்றத்தில் இருந்து பெற்றேன். அதில் நான் குறிப்பிட்ட 40 நபர்களிடமும் விசாரணை நடத்தாமல் மூன்று நபர்களிடம் மட்டுமே காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி இருந்தார். அவர்கள் மூவருமே இரண்டு இடங்களில் கையெழுத்து போட்டதை ஒப்புக் கொண்டிருந்தனர். தாங்கள் எதேச்சையாக இரண்டு இடங்களில் கையெழுத்து போட்டதாகவும், யாரையும் ஏமாற்ற வேண்டும் என்று இரண்டு இடங்களில் கையெழுத்து போடவில்லை என்றும் காவல் ஆய்வாளரிடம் எழுதியும் கொடுத்திருந்தனர்.  
முன்னுக்குப்பின் முரணான முடிவு
என்னால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்ட பிறகும், அந்த அறிக்கையின் இறுதியில் “மனுதாரர் உண்மைக்குப் புறம்பான சங்கதிகளைத் தெரிவித்துள்ளார்!” என்று என்மீதே குற்றம் சுமத்தி, காவல் ஆய்வாளர் தனது அறிக்கை நிறைவு செய்திருந்தார். அந்த அறிக்கையின் எந்த இடத்திலும் நான் அவருக்கு பதிவுத்தபாலில் அனுப்பிய வரவு செலவு அறிக்கையைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.  எனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 
வழக்கின் போக்கை மாற்றிய காவல் ஆய்வாளரை என்ன செய்யலாம்?
எனது வழக்கானது ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டது. குற்றம் செய்தவர்கள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. உள்நோக்கத்தோடு அவர்களுக்கு காவல் ஆய்வாளர் உதவியுள்ளது அவர் சமர்ப்பித்த ஆவணங்களின் மூலமாகவே அப்பட்டமாகத் தெரிகிறது. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல் ஆய்வாளரே குற்றம் செய்துள்ளதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்!
வரவு செலவு அறிக்கையை ஏன் விசாரணை அறிக்கையில் இணைக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டதற்கு, நீங்கள் 17.07.2017ல் அதை அனுப்பி இருந்தீர்கள், நான் கோர்ட்டில் விசாரணை அறிக்கையை 15.07.2017ல் தாக்கல் செய்துவிட்டேன், அதனால் அதனை விசாரணை அறிக்கையில் இணைக்கவில்லை என்று பதில் கொடுத்திருந்தார். ஆனால், நான் பெற்ற விசாரணை அறிக்கை நகலில் அதனை 24.08.2017 அன்று பெற்றதாக நடுவர் அவர்களின் கையெழுத்துடன் அலுவலக முத்திரையும் குத்தப்பட்டு இருந்தது. எனவே அந்த விசயத்திலும் காவல் ஆய்வாளர் பொய் சொல்லியது தெரிந்துவிட்டது.
கை கொடுத்த காவல்துறை இணையதளம் 
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று உறுதி கொண்டேன். அவருக்கு 05.04.2018 அன்று சட்ட அறிவிப்பு அனுப்பினேன். இன்றுவரை பதில் ஏதுமில்லை. காவல் துறை இணையதளத்தில் www.tnpolice.gov.in ஆதாரம் எதுவும் இணைக்காமல்இரண்டு வரியில் 08.06.2018 அன்று புகார் அளித்தேன். 
என்ன ஒரு ஆச்சர்யம்?. 
12.06.2018 அன்று விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து செல்போனில் (919498184721) அழைத்து 13.06.2018 அன்று விசாரணையில் கலந்து கொள்ளச் சொன்னார்கள். கலந்து கொண்டேன். காவல் ஆய்வாளரும் விசாரணைக்கு வந்திருந்தார். நேர்முக விசாரணை முடிந்த பிறகு என்னிடம் ஸ்டேட்மெண்ட் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். ஏற்கனவே  தயாரித்து வைத்திருந்த ஆதாரங்களுடன் கூடிய எனது ஸ்டேட்மெண்டை சமர்ப்பித்தேன். விசாரணையின் முடிவை ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம் என்றார்கள். இவர்களது விசாரணை நியாயமாக இருக்கும் என்று நம்புகிறேன். பார்ப்போம்.
காவல் ஆய்வாளர் மீது வழக்கு தொடுக்க......? 
காவல் ஆய்வாளர் மீது வழக்குத் தொடுக்க என்ன வழிமுறை? என்று கேட்டேன். ஐ.பி.எஸ். ரேங்க் உள்ள அதிகாரி மீது வழக்கு போட வேண்டும் என்றால்தான் நீங்கள் மேலதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். காவல் ஆய்வாளர் மீது நீங்கள் நேரடியாகவே நீதிமன்றத்தில் பிரைவேட் கம்ப்ளெண்ட் செய்யலாம் என்றார்கள்.  
(தொடரும்)
கீழ்க்காண்பவை  03.07.2018 ல் பதிவு செய்யப்பட்டது
முடிவைத் தெரிவிக்கவில்லை!
ஒரு வாரம் ஆகியும் முடிவு தெரியாததால், மீண்டும் அதே இணையதளத்தில் மீண்டும் ஒரு புகார் பதிவு செய்திருந்தேன். அதில் நடந்த விசாரணை பற்றி குறிப்பிட்டு, சீக்கிரம் முடிவைத் தெரிவியுங்கள் என்று கூறிவிட்டு “கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கும்!” என்பதை தெரிவித்திருந்தேன்.  விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு மதி அவர்கள் அலுவலக லேண்ட் லைன் மூலமாக என்னுடன் தொடர்பு கொண்டார்.   “கால தாமதம் ஊழலுக்கு வழி வகுக்கும்!” என்ற எனது வாக்கியத்திற்கு கடும் ஆட்சேபணையைத் தெரிவித்தார். யாரையும் குறிப்பிட்டு நான் கூறவில்லை என்பதையும் அது பொதுவான ஒரு வாக்கியம் என்பதையும் அவருக்கு விளக்கினேன். இருந்தபோதிலும் அவரது கோபம் குறைந்ததாக தெரியவில்லை.தொடர்பு துண்டிக்கப்பட்டது.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முடிவு மறுநாளே தெரிந்தது!
கோப்புகளை தான்  ஆய்வு செய்ததாகவும், காவல் ஆய்வாளர் பொய் ஆவணம் புனையவில்லை என்றும், தள்ளுபடி செய்யப்பட்ட எனது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும் விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு மதி அவர்கள் முழுமையில்லாத தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆக மொத்தத்தில் அவரும் போலி ஆவணம் தயார் செய்திருந்தார்.
அதன் நகல்களை கீழே காணலாம்.


எனது வழக்கை நான் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், செய்யப்பட்டு உள்ளதாக விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு மதி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காவல் ஆய்வாளரை காப்பாற்ற தவறான தகவலை அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.  எனவே  இதுவும் பொய்யாவணம்தான். இவர் மீதும் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 219-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது பற்றி தகவல் கேட்டுள்ளேன். மேலும், காவல்துறை இணையதளத்தில் விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு மதி அவர்கள்  பொய்யாவணம் புனைந்துள்ளது பற்றி கடந்த 24.06.2018 அன்று புகார் ஒன்று  பதிவு செய்துள்ளேன். இன்றுவரை அதன் மீது ஏதும் நடவடிக்கை இல்லை. Pending என்றே Statusல் காணப்படுகிறது. 
போகும் பாதை சரியாக இருந்தால் மெதுவாக சென்றாலும் வெற்றிதான்! நான் சரியான பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறேன்.
(தொடரும்)
************************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 14.06.2018 

No comments:

Post a Comment