disalbe Right click

Saturday, June 16, 2018

காவல்துறையினரின் புலன் விசாரணையைப் பற்றி

காவல்துறையினரின் புலன் விசாரணையைப் பற்றி....
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
நம் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவது, குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பது  மற்றும் குற்றம் செய்தவர்களை உரிய நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் ஒப்படைத்து, அவர்களுக்கு தண்டணை வாங்கித் தருவது போன்றவை  காவல்துறையினரின் பணிகள் ஆகும். 
நீதிமன்றத்திற்கு நேரடியாக வருகின்ற வழக்குகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கும் காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.
புலன் விசாரணை
ஒரு வழக்கில் சாட்சிகளையும், சாட்சியங்களையும் திரட்டுவதற்காக ஒரு காவல் அதிகாரியோ அல்லது இது சம்பந்தமாக நீதித்துறை நடுவர் ஒருவர் மூலம் அதிகாரம் பெற்றுள்ளவரோ நடத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் புலன் விசாரணை எனப்படும். இதனைப்பற்றி குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 2 (ஏ)ல் கூறப்பட்டுள்ளது. 
புலன் விசாரணை செய்பவருக்குரிய தகுதி என்ன?
புலன் விசாரணை செய்பவர் காவல்துறை ஆய்வாளராகவோ, காவல்துறை உதவி ஆர்வாளராகவோ அல்லது தலைமைக் காவலராகவோ இருக்க வேண்டும்.
நடுவர் ஒருவரது உத்தரவு இல்லாமல், ஒரு வழக்கில் புலன் விசாரணை செய்யலாமா?
கைது செய்வதற்குரிய எந்த ஒரு  வழக்கிலும் நீதித்துறை நடுவர் அவர்களின் உத்தரவு இல்லாமலேயே காவல்துறை ஆய்வாளர், காவல்துறை உதவி ஆய்வாளர்  அல்லது  தலைமைக் காவலர் புலன் விசாரணை  செய்யலாம்.
புலன் விசாரணை - நடைமுறை என்ன? 
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 157ன்படி,  பொதுமக்களில் யாராவது ஒருவர் கொடுத்த தகவல் மூலமாகவோ அல்லது நீதிமன்ற நடுவர் அளித்த உத்தரவு மூலமாகவோ, காவல் அதிகாரி புலன் விசாரணை செய்யலாம்.
குற்றம் நடைபெற்றுள்ளதாக முடிவு செய்தால்...?
குற்றம் எதுவும் நடைபெற்றுள்ளது தமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்தால், புலன் விசாரணை அதிகாரியானவர், சம்பவ இடத்திற்குச் சென்று, வரைபடம் தயார் செய்து, சம்பவங்களுக்கு தொடர்புள்ள சாட்சியங்களை விசாரித்து, அவர்களிடம் இருந்து எழுத்து மூலமான வாக்குமூலங்களைப் பெற்று, குற்றத்தை மெய்ப்பிக்கும் வகையில் சம்பவ இடத்தில் கிடைக்கும் பொருட்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றம் நடைபெறவில்லை என்று தெரிய வந்தால்...?
குற்றம் எதுவும் நடைபெறவில்லை என்றும், தமக்கு கிடைத்த தகவல் தவறானது என்றும் அல்லது புலன் விசாரணை செய்யுமளவிற்கு, நடைபெற்ற குற்றம் கடுமையானதாக இல்லாமல் இருக்கும் போதும் புலன் விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியமில்லை. 
ஆனால், அவ்வாறு புலன் விசாரணை செய்யாமல் இருப்பதற்கு உரிய காரணத்தை தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 157 (2)ன்படியும், காவல் நிலை ஆணைகள் 660ன் படியும், காவலர் படிவம் 90ன் படியும் அந்த குற்றம் சம்பந்தமாக தகவல் கொடுத்தவருக்கு புலன் விசாரணை செய்வதாக இல்லை என்ற விபரத்தை மாநில அரசு ஏற்படுத்தியுள்ள முறையில் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
சாட்சிகளை அழைக்கும் அதிகாரம்
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 160ன்படி, குற்றம் சம்பந்தமான புலன் விசாரணையில் சாட்சிகள் எவரையும் அழைத்து எழுத்து மூலமாக வாக்குமூலம் கொடுக்க அவர்களுக்கு சம்மன் அனுப்பலாம். அவ்வாறு சம்மன் வந்தால், சமபந்தப்பட்ட சாட்சிகள் புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி சாட்சியம் அளிப்பது அவசியம். இல்லையென்றால், அது குற்றமாகும்.
அதே நேரத்தில் சாட்சி அளிப்பதற்கு பதினைந்து வயதுக்கு உட்பட்ட ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தால் அவர்கள் குடியிருக்கும் பகுதிக்குச் சென்று அவர்களை விசாரணை செய்ய வேண்டும்.
புலன் விசாரனை செய்யும் போது அதிகாரியானவர் சாட்சிகளை தூண்டியோ, பயமுறுத்தியோ அல்லது வாக்குறுதி கொடுத்தோ அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறக்கூடாது.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 155
(1) கைது செய்ய முடியாத குற்றம் பற்றிய தகவல் ஒன்று காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு யாராவது ஒருவரின் மூலம் கிடைக்குமானால், அந்தத்தகவலின் சாராம்சத்தை அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் தாம் வைத்து வரவேண்டிய ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்து, அந்த தகவல் தந்தவரை நடுவரிடம்  சாட்டிவிட வேண்டும்.
(2) கைது செய்ய முடியாத குற்றம் பற்றிய வழக்கு ஒன்றை விசாரணை செய்யவோ, அவ்வழக்கை மேல்விசாரணைக்கு அனுப்பி வைக்கவோ, அதிகாரம் உடைய நடுவர் ஒருவரின் உத்தரவு இல்லாமல் காவல் அலுவலர் எவரும் அந்த வழக்கை புலனாய்வு செய்யக்கூடாது.
(3) அத்தகைய உத்தரவை நடுவரிடம் இருந்து பெறுகின்ற காவல் அலுவலர் கைது செய்வதைத்தவிர மற்ற அதிகாரத்தை கொண்டவராக இருப்பார்.
(4) ஒரு வழக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட குற்றங்களைப் பற்றியதாக இருந்து, அவற்றில் குறைந்தது ஏதாவது ஒன்று கைது செய்யப்பட்ட குற்றமாக இருந்தால், அந்த வழக்கை கைது செய்யப்படக்கூடிய கூடிய வழக்காக புலன் விசாரனை அதிகாரியானவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காவல்நிலைய எல்லையை தாண்டிய பகுதியில் விசாரனை செய்தால்....?
மற்றொரு காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிக்குள் வசிக்கும் மக்களிடம் விசாரனை அல்லது சோதணை செய்வதாக இருந்தால், அந்த காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு அந்த விசாரணை அல்லது சோதனை பற்றிய அறிவிப்பை உடனடியாக அனுப்ப வேண்டும்.
அழைப்பாணை வழக்குகளில் புலன் விசாரணையின் காலம்
அழைப்பாணை வழக்குகளில் எதிரியானவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் புலன் விசாரணையை முடித்துவிட வேண்டும். அந்த காலத்தை நீடிக்க நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. நடுவருக்கு திருப்தி இல்லையென்றால், புலன்விசாரணையை தடுத்து நிறுத்திட உத்தரவிடலாம். அவ்வாறு நிறுத்தியதை அமர்வு நீதிமன்ற நீதிபதி தொடர கட்டளை பிறப்பிக்க அதிகாரம் கொண்டவராவார்.
புலன் விசாரணை பற்றிய நாட்குறிப்பு
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு -172ன்படி, புலன் விசாரனை செய்கின்ற அதிகாரி அந்த புலன் விசாரணை சம்பந்தமாக தான் செய்கின்ற செயல்களை, எடுக்கின்ற நடவடிக்கைகளை மற்றும் அது சம்பந்தமான நேரத்தை நாட்குறிப்பில் அவசியம் பதிவு செய்ய வேண்டும். இவற்றில் அடித்தல், திருத்தல் இருக்கக்கூடாது. வழக்குகளில் இந்த நாட்குறிப்பு தேவை என்றால், நீதிமன்றமானது வரவழைத்து அதனை ஆய்வு செய்யலாம்.
ஆனால் எதிரியோ அல்லது அவரது வழக்கறிஞர்களோ நாட்குறிப்பை பார்க்கவோ, வரவழைக்கவோ முடியாது.
புலனாய்வை முடித்தவுடன் காவல் அலுவலர் விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173-ன்படி  நடுவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். 
புலன் விசாரணை செய்த அதிகாரியானவர் தான் எடுத்த நடவடிக்கை பற்றி, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173 (2) (ii) ன்படி   குற்றம் சம்பந்தமாக தகவல் கொடுத்தவருக்கு மாநில அரசால் விதிக்கப்பட்ட முறையில் தெரிவிக்க வேண்டும்.
மறு புலன் விசாரணை
விசாரணை அறிக்கையை நடுவருக்கு அனுப்பிய பின்னர்  குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-173(8)ன்படி விசாரணை அதிகாரியானவர் தான் புலன்விசாரணை செய்து முடித்த வழக்கு ஒன்றில் தேவைப்பட்டால் மறு புலன் விசாரணையை மேற்கொள்ளலாம்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.06.2018

No comments:

Post a Comment