disalbe Right click

Tuesday, July 31, 2018

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்
கடந்த 1993ம் ஆண்டு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டு பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மகளிர் ஆணையம் பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பெண்களுக்கு சமத்துவம் வழங்கவும்,
பெண்களுக்கெதிரான அனைத்து வகை இன்னல்களிருந்து பாதுகாப்பினை உறுதி செய்யவும் மற்றும் குடும்பத்திலும், சமுதாயத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு தேவையான அதிகாரங்களைப் பெற்ற ஒரு சட்ட ரீதியான அமைப்பாகும். மேலும் மகளிர் ஆணையம் பெண்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அது தொடர்பான ஆராய்ச்சிகளையும் மேற்கொள்கிறது. இந்த ஆணையம் நமது மாநிலத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆணையத்தின் குறிக்கோள்கள்கள் என்னென்ன?
1. மகளிரின் நலனை உறுதி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
2. பாலினப்பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல்.
3. பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆணையத்தின் பரிந்துரையை அரசுக்கு அனுப்பி வைத்தல்.
மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள் என்னென்ன?
1. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள் பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விபரங்களை கவனித்தல்.
2. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்
3. பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளஅரசுக்கு பரிந்துரை செய்தல்.
4. பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல். பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம்.
என்ன தீர்வு கிடைக்கும்?
யாராவது மனு கொடுத்தார்கள் என்றால், எதிர் மனுதாரருக்குச் சம்மன் அனுப்பி, அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், உரிய துறைகளுக்கு மனுவை அனுப்பி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பரிந்துரை செய்யவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களில் அவர்களுக்கு பாதகமான அம்சங்கள் ஏதேனும் இருக்குமானால் அதில் திருத்தங்கள் செய்யும்படி பரிந்துரைக்கவும் இவ்வாணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அந்தப் பிரச்சினைக்கு அதிகாரப்பூர்வமான தண்டனையோ, தீர்ப்போ சொல்லுகின்ற அதிகாரம் இந்த ஆணையத்திற்கு வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்குள் அடங்கிய அதிகாரங்களாகவேதான் இருக்கின்றன.
இதன் முகவரி:
தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்,
தேவநேயப் பாவாணர் நூலகம், 2வது மாடி,
735, அண்ணா சாலை,
சென்னை
தொலைபேசி எண்: 044 25264568

No comments:

Post a Comment