நடந்து முடிந்த விசாரணை குறித்த தகவல்களைப் பெற முடியுமா?
நான் சார்ந்த சங்க நிர்வாகிகள் போலி ஆவணம் தயாரித்து பதிவுத்துறையை மற்றும் கல்வித்துறையை ஏமாற்றிக் கொண்டிருப்பது குறித்து, பார்ட்டி இன் பெர்சன் ஆக நீதிமன்றத்தில் Cr.P.C:156(3) ன் கீழ் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தேன். வழக்கு பற்றி இருதரப்பினர்களிடமும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நடுவர் அவர்கள் காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் அவர்கள் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
காவல்துறை ஆய்வாளரின் மோசடி அறிக்கை
காவல் ஆய்வாளர் அவர்கள் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சில மாதங்கள் கழித்தே அதன் நகலை நீதிமன்றத்தில் இருந்து முறைப்படி நான் பெற முடிந்தது. அந்த அறிக்கை எதிர்தரப்பினருக்கு சாதகமாக மோசடியாக தயாரிக்கப்பட்டிருந்தது. மேலோட்டமாக பார்க்கும் போதே அது எனக்குத் தெரிந்தது. அதனை எனது ஆட்சேபனை மனுவில் தெரிவித்தேன். நடுவர் கண்களை மூடிக் கொண்டு எனது வழக்கை தள்ளுபடி செய்தார். எனது கிரிமினல் வழக்கை சிவில் வழக்கு என்று தள்ளுபடி செய்ததற்கான காரணத்தை நடுவர் பதிவு செய்தார்.
காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு
மோசடியான விசாரணை அறிக்கையை நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன். அதனால், அந்த விசாரணை அறிக்கையில் அவர் செய்திருந்த தவறுகளுக்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களாக பெறுவதற்கு முறைப்படி மனுச் செய்தேன்.
காவல்துறையில் பொது தகவல் அலுவலர் யார்?
எந்த ஒரு மாவட்டமாக இருந்தாலும் சரி. அந்த மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது எந்த ஒரு காவல் அதிகாரி இடத்திலோ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற வேண்டும் என்றால், நாம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (Additional Superintendent of Police - ADSP) அவர்களிடமே விண்ணப்பிக்க வேண்டும். அவர்தான் பொது தகவல் அலுவலர் ஆவார். அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் (Superintendent of Police - SP) மேல்முறையீட்டு அலுவலர் ஆவார்.
காவல் ஆய்வாளர் தகவல்கள் தர மறுப்பு
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தகவல்கள் வழங்க முடியாது என்று பதில் வழங்கப்பட்டது. இதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நண்பர் A Govindaraj Tirupur அவர்களின் ஞாபகம் வந்தது. உடனே, அவரது பிளாக் ஸ்பாட்டை https://rtigovindaraj.blogspot.com ஓப்பன் செய்தேன். அந்த ஆவணக் கடலில் நீந்தியது மிக சுகமாக இருந்தது. அடேங்கப்பா எவ்வளவு ஆவணங்கள்? எத்தனை தகவல்கள்?. மலைத்துப் போய்விட்டேன். தனது பொன்னான நேரத்தை மிக மிக அதிகமாக செலவழித்து பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளார்
அவர். நன்றி என்ற சொல் மட்டும் போதாது அவரது இந்த சேவைக்கு.
எனது வழக்கைப் போல் ஒரு வழக்கு
அவரது 5293 வது பதிவு நான் தேடிக் கொண்டிருந்த விடையுடன் எனக்காக காத்துக் கொண்டிருந்தது. அந்தப் பதிவில் ஒரு வழக்கு. ஒரு விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விசாரணை நடத்தியவர்கள் அதனை மேல் அதிகாரிக்கும் அனுப்பி விடுகிறார்கள். மனுதாரர் அந்த விசாரணை அறிக்கையைப் பற்றி தகவல் கேட்கிறார். தகவல் மறுக்கப்படுகிறது. மேல்முறையீடு செய்கிறார் மனுதாரர். பலனில்லை. இறுதியில் ஆணையத்திற்கு வழக்கு செல்கிறது.
விசாரணை முடிந்துவிட்டால் அதிலுள்ள தகவல்களை கொடுக்க வேண்டும்
மாநில தகவல் ஆணையர் திரு தி.சீனிவாசன் அவர்கள் வழக்கை விசாரித்து முடிவில், இறுதி ஆணை பிறப்பிப்பது மேல் அதிகாரியின் முடிவாகும். அதற்காக விசாரணை முடிந்த பின் அதன் தகவல்களை அளிக்காதது தவறு என்று ஒரு அருமையான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள். அதன் நகலைப் பெற இதனை கிளிக் செய்யுங்கள்.
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wclh2QzhicGxGdFE
மேற்கண்ட வழக்கைப் போல மற்றோரு வழக்கின் தீர்ப்பும் உள்ளது. அது https://rtigovindaraj.blogspot.com -ல் 3893 வது பதிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அதில் காவல்துறையில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனு விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகவே விசாரணை பாதிக்கும் என்று தகவல் மறுத்தது தவறு என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
TNSIC - வழக்கு எண்:29452 / விசாரணை / 2009, நாள்:30.04.2010. அதன் நகலைப் பெற இதனை கிளிக் செய்யுங்கள்.
TNSIC - வழக்கு எண்:29452 / விசாரணை / 2009, நாள்:30.04.2010. அதன் நகலைப் பெற இதனை கிளிக் செய்யுங்கள்.
****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.08.2018
No comments:
Post a Comment