உயில் எழுதாத சொத்து - பங்கு பிரித்துக் கொள்வது எப்படி?படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
உயில் எழுதி வைக்காத நிலையில் ஒரு ஆண் இறந்து போனால், அந்த ஆணின் சுய சம்பாத்திய சொத்துக்கள் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 (8) &, (9) பிரிவுகளினபடி அந்த ஆணின் வாரிசுகளுக்கு பங்கிட்டு கொடுக்கப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால்.....?
உயில் எழுதி வைக்காமல் இறந்த ஆணிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் இருந்தால் அந்த சட்டத்தின் 10 வது பிரிவு அதற்கு மிகத் தெளிவாக வழி காட்டுகிறது. அந்த 10 வது பிரிவில் மொத்தம் நான்கு விதிகள் உள்ளது. அவை என்ன சொல்கிறது என்பதைப் பற்றி கீழே காணலாம்.
இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 1
இறந்து போன ஆணுக்கு ஒரு மனைவி இருந்தால் அவருக்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும். அந்த ஆணுக்கு பல மனைவிகள் இருந்தால் அனைத்து மனைவிகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு பங்கு வழங்க வேண்டும்.
உதாரணமாக இறந்தவரது வங்கிக்கணக்கில் அறுபது லட்சம் ரூபாய் இருப்பதாகவும், அவரது உறவுகளாக இரண்டு மனைவிகள் ஒரு மகன் ஒரு மகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
(பணம் என்றால் அதனை பிரிப்பது இலகுவாக இருக்கும் என்பதாலும், படிப்பவர்களுக்கு நன்றாக புரியும் என்பதாலும் இந்தப் பதிவில் பணத்தை மட்டும் உதாரணத்திற்காக கூறியுள்ளேன்)
அந்த இரண்டு மனைவிகளுக்கும் சேர்ந்து ஒரு பங்கு (இருபது லட்சம்) அதாவது ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் பங்காக கொடுக்க வேண்டும். மீதமுள்ள ஒரு பங்கான நாற்பது லட்ச ரூபாயை அவரது மகனும், மகளும் ஆளுக்கு இருபது லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பங்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 2
இறந்து போன ஆணின் மகன்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு, மகள்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு, இறந்து போன ஆணின் தாயாருக்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும்.
உதாரணமாக இறந்து போன ஆணுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும், இரண்டு மனைவியும், ஒரு தாயாரும் இருக்கிறார்கள் என்றும், அவரது வங்கிக் கணக்கில் அறுபது லட்சம் ரூபாயும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற சூழ்நிலையில் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956, பிரிவு-10, விதி 2டன் விதி எண் 1 யும் சேர்த்து பயன்படுத்தி பங்குகளை பிரித்துக் கொள்ள வேண்டும். இருக்கின்ற அறுபது லட்சத்தை ஐந்து பங்காக (ரூ.பனிரெண்டு லட்சம்) முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். அதில் தாயார், மகன், மகள்கள் ஆகிய நால்வருக்கும் தலா ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள ஒரு பங்கான ரூ.பனிரெண்டு லட்சத்தை அவருடைய மனைவிகள் இருவரும் ஆளுக்கு ஆறு லட்சமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 3
இறந்து போனவருக்கு முன்பாகவே அவரது மகன் இறந்திருந்தால் அந்த மகனின் வாரிசுகள் ஒரு பங்கையும், இறந்து போனவருக்கு முன்பாகவே அவரது மகள் இறந்திருந்தால் அந்த மகளின் வாரிசுகள் ஒரு பங்கையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக இறந்து போன ஆணுக்கு ஒரு தாயார் ஒரு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும், அவரது வங்கிக் கணக்கில் அறுபது லட்சம் ரூபாயும் இருக்கிறதென்று வைத்துக் கொள்வோம்.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்து இறங்குரிமைச் சட்டம் 1956, பிரிவு-10, விதி 1. விதி 2-டன் விதி 3 யும் சேர்த்து பயன்படுத்தி பங்குகளை பிரித்துக் கொள்ள வேண்டும். இருக்கின்ற அறுபது லட்சத்தை நான்கு பங்காக (ரூ.பதினைந்து லட்சம்) முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும். அதில் இறந்து போனவரது தாயாருக்கு ஒரு பங்கு, மனைவிக்கு ஒரு பங்கு, மகளுக்கு ஒரு பங்கு, அந்த மகனின் வாரிசுகளுக்கு அதாவது அந்த மகனின் மனைவி, மகன்கள் மற்றும் மகள்கள் (அவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் சரி) அவர்களுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொள்ள வேண்டும்.
இந்து இறங்குரிமைச் சட்டம் 1956 பிரிவு-10, விதி 4
விதி 3 ல் குறிப்பிடப் பட்டுள்ள பங்குகளை பிரித்து விநியோகம் செய்வது குறித்து இதில் கூறப்பட்டுள்ளது. விஷேசமாக ஏதுமில்லை.
No comments:
Post a Comment