புயல் எச்சரிக்கை சின்னங்களின்
அர்த்தம் என்ன?
புயல் எச்சரிக்கை விடுக்க
துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில்
விடுக்கப்படும் புயல் எச்சரிக்கை சின்னங்கள் குறித்த விளக்கங்களின் விபரங்கள்.
➽ ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால்
புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால் துறைமுகம்
ஏதும் பாதிக்கப்படவில்லை. ஆனால் சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள்.
➽ இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று
எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும்.
➽ மூன்றாம் எண் புயல்
எச்சரிக்கை விடப்படுமானால், திடீர்
காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று
பொருள்.
➽ நான்காம் எண் கூண்டு
ஏற்றப்பட்டால், துறைமுகத்தில்
உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. 3 மற்றும் 4-ம் எண் கூண்டுகள், துறைமுகத்தில் மோசமான வானிலை
நிலவுவதைத் தெரியப்படுத்துகின்றன.
➽ ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக்
குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான
எச்சரிக்கை ஆகும்.
➽ ஆறாம் எண் கூண்டு, 5 வது எண்ணின் எச்சரிக்கைதான்.
ஆனால் துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில்
துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள்.
➽ ஏழாம் எண் கூண்டு
ஏற்றப்பட்டால், துறைமுகம்
வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை. 5,
6 மற்றும் 7-ம் எண் கூண்டுகள் துறைமுகத்துக்கு
ஏற்பட்டுள்ள அபாயத்தைக் குறிக்கிறது.
➽ எட்டாம் எண் புயல் கூண்டு
ஏற்றப்பட்டால், 'மிகுந்த
அபாயம்' என்று பொருள். அதாவது புயல், தீவிர
புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது. அப்போது துறைமுகத்தின்
இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
➽ ஒன்பதாம் எண் புயல்
கூண்டுக்கு, புயல்,
தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று
பொருள். மேலும் துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும்.
➽ பத்தாம் எண் புயல்
எச்சரிக்கை விடப்படுமானால், அதி
தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது
அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம்.
➽ 11-ம் எண்
புயல் எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால்,
வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத்
துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.
தீவிர புயலுக்கும் அதி
தீவிர புயலுக்கும் இடையேயான வித்தியாசம் காற்றின் வேகத்தைப் பொருத்தே
நிர்ணயிக்கப்படுகிறது.
* அதி
தீவிரப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ முதல் 130
கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.
* அதே
நேரத்தில் தீவிரப் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 கி.மீ
முதல் 110 கி.மீ வேகத்தில் மட்டுமே பலத்த காற்று வீசும்.
புயலின் போது பின்பற்ற வேண்டியதும்
செய்யக் கூடாததும்
அதி தீவிர புயலான 'வார்தா' திங்கள்கிழமை
பிற்பகல் சென்னைக்கு அருகில் கரையை கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் என்னவெல்லாம்
செய்ய வேண்டும், எவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்பது
குறித்த 10 முக்கியத் தகவல்கள்.
1. கனத்த
மழையின் போது வெளியே செல்லாதீர்கள். வீட்டுக்குள்ளேயே கவனமாக இருக்கவும். கதவு,
ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைத்திருக்கவும்.
2. குழந்தைகளை
வெளியே சென்று விளையாட அனுப்பாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீர் அருகிலோ, நீர்நிலைப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்வது மிக
முக்கியம்.
3. போதுமான
அளவு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள்
ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துங்கள்.
4. மேல்நிலைத்
தொட்டிகளில் நீரை நிரப்பி வையுங்கள். இதனால் மழையின் காரணமாக மின்சாரம்
தடைப்பட்டால், தண்ணீருக்காக சிரமப்படத் தேவையிருக்காது.
5. எமர்ஜன்ஸி
விளக்குகள், மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள்.
போதுமான அளவு மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் அருகிலேயே
இருக்கட்டும்.
6. வெள்ளம்
ஏற்படுவது குறித்த வதந்திகளை நம்பாமல், அரசு அதிகாரிகளின்
முறையான அறிவிப்பைக் கேட்டபிறகே வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்குச்
செல்ல வேண்டும்.
7. போக்குவரத்துக்காக
இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களைப்
பயன்படுத்தாதீர்கள்.
8. அவற்றைப்
பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மரங்களுக்கு
அடியில் வாகனங்களை
நிறுத்துவதைத் தவிர்க்கவும்.
9. மக்கள்
மழைக்கு ஒதுங்க வேண்டிய நேரத்தில் பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, மரங்களுக்கு அடியிலோ நிற்பது தவறு.
10. ரேஷன்
கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களையும், வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் மழைநீர் புகாத
உறையில் இட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ்
No comments:
Post a Comment