செட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்!
சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும், 'செட்டில்மென்ட்' பத்திரங்களை, அதில் கூறப்பட்ட நிபந்தனைகள் நிறைவேறாத நிலையில், ரத்து செய்ய அனுமதிக்கலாம் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.பொதுவாக, குடும்ப தலைவர் பெயரில் உள்ள சொத்தை, உயில் வாயிலாக, வாரிசுகளுக்கு வழங்கலாம். இல்லையெனில், 'செட்டில்மென்ட்' எனப்படும், தானமாக எழுதி தரப்படும் பத்திரங்கள் வாயிலாகவும் கொடுக்கலாம்.இவ்வகையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த, கண்ணன் என்ற விவசாயி, 'செட்டில்மென்ட்' வாயிலாக, மகன்களுக்கு நிலத்தை பங்கிட்டு கொடுத்துஉள்ளார். அதன்பின், மகன்கள், அவரை முறையாக பராமரிக்கவில்லை என, கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை விசாரித்த, திருவண்ணாமலை கலெக்டர், சம்பந்தப்பட்ட நபர் எழுதி கொடுத்த, 'செட்டில்மென்ட்' பத்திரத்தின் பதிவையும், பட்டா மாறுதலையும் ரத்து செய்து, கண்ணன் பெயருக்கே, அந்த சொத்து திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்தார்.இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது, செட்டில்மென்ட் பத்திரங்களை எழுதி கொடுத்தவர், ரத்து செய்ய அணுகினால், அந்த கோரிக்கையை, எப்படி அணுக வேண்டும் என்பதில், குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவு:
⧭ எவ்வித நிபந்தனைகளும் இல்லாத, செட்டில்மென்ட் பத்திரங்களை எழுதி கொடுத்தவர் மட்டும், ரத்து செய்வதற்கான ஆவணத்தை தாக்கல் செய்தால், அதை ஏற்காமல், மறுப்பு சீட்டு வழங்கலாம்.
⧭ எழுதி கொடுத்தவர், பெற்றவர் இருவரும் நேரில் ஆஜராகி, ரத்து ஆவணம் அளித்தால், அதை ஏற்று, செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யலாம்.
⧭ செட்டில்மென்ட் பெற்றவர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்று, ரத்து ஆவணம் தாக்கல் செய்தால், அதில் நிபந்தனைகளை ஆராய்ந்து, சார் -- பதிவாளர் முடிவு எடுக்கலாம்.
⧭ நிபந்தனைகள் நிறைவேற்றப்படாதது உறுதியாக தெரியும் நிலையில், ரத்து ஆவணத்தை, சார் - பதிவாளர்கள் ஏற்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
******************************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 30.11.2018
No comments:
Post a Comment