disalbe Right click

Monday, January 21, 2019

சிபில் ஸ்கோர் தவறுகளை சரி செய்ய முடியுமா?

சிபில் ஸ்கோர் தவறுகளை சரி செய்ய முடியுமா?
கடன் வாங்கும் போது ஒருவருடைய சிபில் ஸ்கோர் (கடன் மதிப்பீட்டு அறிக்கை) முக்கிய பங்கு வகிக்கிறது. சிபில் ஸ்கோரை பார்த்தபின்புதான் கடன் வழங்கும் முடிவை வங்கிகள் எடுக்கின்றன. இன்னும் சில வங்கிகள் நல்ல மதிப்பீடு இருப்பவர்களுக்கு குறைவான வட்டியும், குறைவான மதிப்பீடு இருப்பவர்களுக்கு அதிக வட்டியும் வசூலிக்கின்றன.
சிபில் ஸ்கோர் என்றால்?
கடனை திருப்பி செலுத்தும் திறன் அடிப்படையில் சிபில் ஸ்கோர் தரப்படுகிறது. குறைந்தபட்சம் 300 புள்ளியில் இருந்து அதிகபட்சம் 900 புள்ளிகள் வரை இருக்கும். எவ்வளவு கடன், எங்கெங்கு வாங்கி இருக்கிறீர்கள் இன்னும் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். தவிர முகவரி, தொலைபேசி எண், பணி குறித்த தகவல்கள் பான், ஆதார் உள்ளிட்ட தகவல்களும் இருக்கும். மேலும் எவ்வளவு முறை கடனுக்காக விண்ணப்பித்திருக்கிறீர்கள், எந்த தொகைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்பது உள்ளிட்ட தகவல்களும் இருக்கும்.
வங்கிகள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்படுகிறது. அதேபோல கடனுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபரின் சிபில் அறிக்கை நேரடியாக வங்கிக்கு செல்லும். அதனடிப்படையிலேயே கடன் முடிவு செய்யப்படும். பெரும்பாலான சமயங்களில் இந்த அறிக்கை தனிநபர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால் சிபில் அமைப்பில் பணம் செலுத்தி நேரடியாக பெரும் வசதி உள்ளது. ஒரு வேளை கடன் மறுக்கப்படும் பட்சத்தில் ஏன் மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை வங்கிகள் சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கும்.
சிபில் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரிஷிகேஷ் மேத்தா கூறும் போது, தனிநபர்கள் சிபிலிடம் விண்ணப்பிக்கும் போது ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக தங்களுடைய சிபில் அறிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்றார். ஒன்றுக்கு மேற்பட்ட முறை அறிக்கை தேவைப்பட்டால் கணிசமான தொகையை செலுத்திய பின்னரே கிடைக்கும்.
பொதுவான தவறுகள் என்ன?
சிபில் அறிக்கையில் கூட தவறு இருக்குமா என்று கேட்டால், துரதிஷ்டவசமாக ஆமாம் என்றுதான் பதில் சொல்ல வேண்டி இருக்கும். சில தவறுகள் இருக்கக் கூடும். அதே சமயத்தில் இந்த தவறுகளை சரி செய்யவும் முடியும். இரு வகையான தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. தனிப்பட்ட தகவல் குறித்த தவறுகள் அல்லது கணக்குகளில் ஏற்பட்டிருக்கும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.
கணக்கு சார்ந்த தகவல் என்னும் போது, கால தாமதமாக செலுத்திய தொகை, வரவு வைக்கப்படாமல் இருக்கலாம். ஏற்கெனவே முடிக்கப்பட்ட கடன் அல்லது கிரெடிட் கார்டுகளில் உங்களது பெயர் இருக்கலாம். உங்களது பெயர், முகவரி, பணிபுரியும் நிறுவனம் உள்ளிட்ட பல தகவல்கள் தவறாக இருக்கலாம். இது போன்ற தவறுகளை எந்த நேரத்திலும் சரி செய்துகொள்ள முடியும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லாமலே தவறுகளை சரி செய்ய முடியும்.
என்ன செய்ய வேண்டும்
அதே சமயத்தில் எந்தவிதமான மாற்றங்கள் செய்வதாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட வங்கியின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.
தகவல்களை திருத்துவதற்கான விண்ணப்பங்கள் கடன் அறிக்கையை தயார் செய்யும் நிறுவனங்களின் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து மதிப்பீடு செய்யும் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த தகவல் வங்கிக்கு அனுப்பப்பட்டு, சரி செய்யப்பட்ட பிறகு, கடன் அறிக்கையில் திருத்தம் செய்யப்படும். கடன் தகவல் சட்டத்தின் படி, திருத்தத்துக்கு விண்ணப்பித்து 30 நாட் களுக்குள் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
# கடன் மதிப்பீடு அறிக்கை சரி பார்க்க வேண்டும்
# ஆண்டுக்கு ஒரு முறை இலவசமாக பெற முடியும்.
# தவறுக்கான வாய்ப்புகள் உண்டு.
# கட்டணம் இல்லாமல் திருத்தம் செய்ய முடியும்.
# அதிக மதிப்பீடு இருக்கும் பட்சத்தில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும்
-nithya.p@thehindu.co.in
******************************************நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 29.01.2018
https://tamil.thehindu.com

No comments:

Post a Comment