சட்டவிரோத கைது: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: 'சட்டவிரோத கைதுக்காக, போலீசாருக்கு எதிராகவும், இயந்திர கதியாக காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட தயங்காது' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.
செம்மர கட்டைகள் கடத்தியதாக, ஒரு வாகனத்தை பிடித்து, ஐந்து பேருக்கு எதிராக, வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், சென்னை பாரிமுனை அருகில் நின்ற, மாநில, 'பில்லியட்ஸ்' விளையாட்டு வீரரும், அவரது பயிற்சியாளரும், கைது செய்யப்பட்டனர். இவர்கள், 2016, பிப்., 22ல் கைது செய்யப்பட்டனர்.
ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பில்லியட்ஸ் வீரர், தாக்கல் செய்த மனு:
பயிற்சி முடித்த பின், தங்கச் சாலையில் இறக்கி விடும்படி, பயிற்சியாளர்
கேட்டார். வரும் வழியில், பாரிமுனை தம்புசெட்டி தெருவில், வாகனத்தை நிறுத்தும்படி
கூறினார். மொபைல் போனில், அவரது நண்பருடன் பேசினார். அப்போது, முத்தியால்பேட்டை
போலீசார், எங்களை கைது செய்தனர். எதற்காக கைது செய்து, காவலில் வைத்தனர் என்பது தெரியாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
பொறியியல் கல்லுாரி மாணவரான மனுதாரர், பில்லியட்ஸ் விளையாட்டு வீரராக உள்ளார். ஏன் கைது செய்யப்பட்டோம்
என, தெரியாமல், சிறையில் உள்ளார். அவரது மனதில், இந்த சம்பவம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அவர் மட்டுமின்றி, அவரது பெற்றோர், குடும்பத்தினரும்
அதிர்ந்து போயிருப்பர்.
சட்டவிரோத கைது, ஒருவரது சுதந்திரத்தை மீறுவதாகும். இதனால் தான், ஒருவரை கைது செய்யும் போது, போலீசார் எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை, நீதிமன்றம் அவ்வப்போது உணர்த்தி வருகிறது.
மாஜிஸ்திரேட்டும், இயந்திரகதியாக காவலில் வைக்கும்படி, உத்தரவு பிறப்பிக்கின்றனர்.எனவே, சட்டவிரோதமாக கைது செய்யும் போலீசாருக்கு எதிராகவும், இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதற்கு, நீதிமன்றம் தயங்காது. இதை, போலீசாருக்கும், மாஜிஸ்திரேட்டுகளுக்கும், சுட்டிக் காட்டுகிறோம். நீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகளை மீறியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரியிடம் விளக்கம் கோரி, ஒழுங்கு நடவடிக்கையை, மாவட்ட வனத்துறை அதிகாரி எடுக்க வேண்டும். மனுதாரரை காவலில் வைக்க உத்தரவிட்ட, எழும்பூர் மாஜிஸ்திரேட், வரும், 2௮ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. விசாரணைக்கு தேவைப்படும் போது, ஆஜராக வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
***********************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 26.02.2019