இனி அவசர உதவிக்கு 112
தமிழகம் உள்பட 16 மாநிலங்களில் 112 எண் சேவை தொடக்கம்: இனி அவசர உதவிகளுக்கு இந்த ஒரே எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம் உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பொதுமக்களின் அவசர உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி சேவை 19.02.2019 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி சேவை, நமது நாட்டில் முதல்கட்டமாக
ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில்
தொடங்கப்பட்டது. அதன்பின்னர் தமிழகம், ஆந்திரம், உத்தரகண்ட், பஞ்சாப், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி, டாமன் அன்ட் டையு, ஜம்மு -காஷ்மீர் ஆகிய 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 19.02.2019 செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உதவிக்கும் ஒவ்வொரு எண்
இதற்கு முன்னர் காவல்துறைக்கு 100 என்ற எண்ணையும், தீயணைப்புத்துறைக்கு 101 என்ற எண்ணையும், சுகாதாரத் துறையினருக்கு 108என்ற எண்ணையும், பெண்கள் தொடர்பான உதவிகளுக்கு 1090 என்ற எண்ணையும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு வந்தனர்.
இனி 112 என்ற ஒரு எண் போதும்
பொதுமக்கள் இனி 112 என்ற ஒரே எண்ணிலேயே அனைத்து வகையான உதவிகளையும் கோர முடியும்.
நெருக்கடி காலத்தில் உதவி கோர விரும்புவோர், (லேண்ட் லைன்) தொலைபேசியில் 112 என்ற எண்ணை அழுத்தினால் போதும், அந்த அழைப்பானது அவசரகால உதவி சேவை மையத்துக்கு அழைப்பு செல்லும்.
ஸ்மார்ட் போன் செல்லிடப்பேசி
என்றால், அதை ஆன் செய்ய பயன்படுத்தப்படும்
பொத்தானை 3 முறை அழுத்தினால், அவசரகால உதவி சேவை மையத்துக்கு அழைப்பு செல்லும்.
சாதாரண செல்லிடப்பேசி
எனில், 5ஆம் எண் பொத்தான் அல்லது 9ஆம் எண் பொத்தான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நீண்ட நேரம் அழுத்த வேண்டும்.
மேலும், செல்லிடப்பேசியில் 112 என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து, அதன்மூலமும் உதவி கோரலாம். அந்த அழைப்பு, 112 சேவை மையத்துக்கு செல்லும்.
தொடர்பு கொண்டபின்னர் என்ன நடக்கும்?
தொடர்பு கிடைத்த பின்னர், அதன் மூலம் பேசும் அதிகாரிகள், பொதுமக்கள் கோரும் உதவி வகைகளை குறித்துக் கொண்டு, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், சுகாதார நிலையம் மற்றும் பிற உதவிகள் மையங்களில் ஏதேனும் ஒன்றுக்கு தகவல் அனுப்புவார்கள். அதன்மீது சம்பந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்வர்.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 20.02.2019
No comments:
Post a Comment