இந்திய சாட்சியச் சட்டத்தில் - மெய்ப்பிக்கும் சுமையைப் பற்றி .....
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
காவல்நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ எவர்மீதும், யாரும் புகார் அளிக்கலாம். அந்தப் புகாரினை மெய்ப்பிக்கும் சுமை யாருடையது? என்ற கேள்விக்கு இந்திய சாட்சியச் சட்டம் விடை தருகிறது. ஏனென்றால், நீதிமன்றமானது தன்னிடம் தாக்கல் செய்யப்பட்ட எந்த ஒரு வழக்கையும் அளிக்கப்படும் சாட்சியங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும், தீர்த்து வைக்கிறது.
பேனா இருக்கிறது, பேப்பர் இருக்கிறது, எழுதுவோம் புகாரை! என்று பொய்புகாரை எழுதி காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ ஒருவர் வழக்கு தொடுக்கலாம். ஆனால், அந்தப் புகாரிலுள்ள சங்கதிகளை மெய்ப்பிக்கும் சுமையானது புகார்தாரருக்கே உள்ளது. நாம் தொடுக்கின்ற வழக்குகளை நாம்தான் மெய்ப்பிக்க வேண்டும். அவ்வாறு மெய்ப்பிக்க முடியாவிட்டால், அந்த வழக்கு காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்படும்.
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு - 101
சட்டப்படியான உரிமை அல்லது பொருள் எதையாவது பற்றி ஒரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டுமென்று ஒருவர் வழக்கு தாக்கல் செய்தால், அது அந்த வழக்கில் கூறியுள்ள சங்கதிகளின் உண்மையைப் பொறுத்து இருக்குமானால், அந்த உண்மைகளை அவரேதான் மெய்ப்பிக்க வேண்டும்.
உதாரணம் :
ஒரு குற்றம் செய்ததற்காக ராஜா என்பவர் மீது குமார் என்பவர் வழக்குத் தொடுக்கிறார்! என்று வைத்துக் கொள்வோம். அந்த ராஜா என்பவர் குற்றம் செய்தார்! என்பதை குமார்தான் மெய்ப்பிக்க வேண்டும்.
இந்திய சாட்சிய சட்டம் பிரிவு - 102
ஒருவர் தொடுத்த வழக்கை அவரேதான் நிரூபிக்க வேண்டும் என்பது பற்றி இந்திய சாட்சியச் சட்டம் 101ல் நாம் பார்த்தோம். அவ்வாறு நிரூபித்துவிட்டால் வழக்குத் தொடுத்தவருக்கு வெற்றி கிடைத்துவிடும். ஆனால், அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் சங்கதிகளைப் பற்றிக் கூறினால் அந்த சங்கதிகளைக்கூறிய குற்றம் சாட்டப்பட்டவரே அதனை மெய்ப்பிக்க வேண்டும்
உதாரணம் : 1
பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்ததாக பயணச் சீட்டு பரிசோதகர் ஒருவரால் ரயில் பயணி ஒருவர் குற்றம் சாட்டப்படுகிறார். தன்னிடம் பயணச்சீட்டு உள்ளதாக விசாரணையில் அந்தப் பயணி கூறுகிறார். தன்னிடம் பயணச்சீட்டு இருப்பதை அந்தப் பயணிதான் மெய்ப்பிக்க வேண்டும்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு - 211
பொய்யான புகாரினை ஒருவர் நீதிமன்றத்திலோ, காவல்நிலையத்திலோ அளித்தால் பாதிக்கப் பட்டவர் இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 211ன் கீழ் அவருக்கு இரண்டு வருட தண்டணை பெற்றுத் தரலாம்.
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.03.2019
No comments:
Post a Comment