சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் இடையே ஏற்படும் சிக்கல்களை தீர்க்க....
தமிழகத்தில் அமலுக்கு வந்தது:
சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் இடையே சிக்கல்களை தீர்க்கும் சட்டம்
இணையதளம், இ-சேவை மையத்தில் பதிவு செய்ய வசதி; பல்வேறு நிகழ்வுகளுக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன
சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையிலான சிக்கல்களை தீர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டம் தற்போது தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதுடன், வழிகாட்டுதல்கள் அடங்கிய புத்தகத்தை யும் நேற்று முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
தமிழகத்தில் அனைவருக்கும் சொந்த வீடு என்பது இன்றளவும் நிறைவேறாத நிலையில், வாடகை குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை போன்ற நகரங்களுக்கு பணி நிமித்தமாக வருபவர்கள் வாடகை குடியிருப்புகளையே அதிக அளவில் நம்பியுள்ளனர். அதே நேரம், சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள் அவர்களின் கடமைகளை முறைப்படுத்த சட்டம் ஏதும் இல்லை.
முன்னதாக, வாடகை குடியிருப்புவசதிகள் குறைவாகவும், வீட்டுமனை வணிகம் வளர்ச்சியடையாமலும், சொத்துகள் ஒரு சிலரிடமே இருந்த காலகட்டத்தில் (அதாவது 1960-ல்) தமிழ்நாடு கட்டிடங்கள் மற்றும் வாடகை கட்டுப்பாடு சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சட்டம், அரசு சார்ந்த கட்டிடங்களையே கட்டுப்படுத்தும் நிலையில் இருந்தது. எனவே, தனியார் வாடகை வீடுகளும் அதிகமாக பெருகிவிட்ட நிலையில், தற்போதைய சூழலை கொண்டு புதிய சட்டத்தை உருவாக்க அவசியம் ஏற்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு, அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபோது, வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தை நீக்க பரிந்துரைத்தது. இதை ஏற்று, முந்தைய வாடகை கட்டுப்பாட்டு சட்டத்தை நீக்கும் வகையில், தமிழ்நாடு சொத்துஉரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டு, கடந்த 2017-ல் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது இந்த சட்டம் மற்றும் அதற்கான விதிகள், தமிழக அரசு அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு, நேற்றுமுதல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், பொதுமக்கள் எளிதாக பின்பற்றுவதற்காகவும் ‘wwwtenancy.tn.gov.in’ என்ற இணையதளம்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் விண்ணப்பங்களை இ-சேவை மையம் மூலம் பதிவுசெய்ய இதில் வழி ஏற்படுத்தப் பட்டுள்ளது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், வாடகை அதிகார அமைப்பின் மூலம் வாடகை ஒப்பந்த பதிவு எண் வழங்கப்படும். இதன்மூலம் சொத்து உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்கள் இடையே ஏற்படும் பிரச்சினைகளை போக்க வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடையே ஏற்படும்பிரச்சினைகளுக்கு தீர்வு காண,வருவாய் கோட்ட அளவில், வாடகைஅதிகார அமைப்பு ஏற்படுத்தி அதனை செயல்படுத்த துணை ஆட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர் அரசின் முன் அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியர்களால் நியமிக்கப்படுவார். இப்புதிய சட்டத்தின்படி, ஒருமித்த கருத்தின் மூலமே அனைத்து வாடகை ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த முடியும். குத்தகை விடுபவர் 3 மாத வாடகையை முன்பணமாக பெறமுடியும். புதிய சட்டத்தில் உரிமைதாரர் மற்றும் குத்தகைதாரர் இணைந்து வாடகை ஒப்பந்தத்தில் உள்ளபடி வளாகத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வரையறுக்கப்பட்டுள்ளது.
வாடகை, குத்தகைக்கான உடன் படிக்கைகளை மேற்கொள்ளுதல், அதில் இடம்பெற வேண்டிய விஷயங்கள், உள்வாடகைக்கு விடுவதில் உள்ள கட்டுப்பாடுகள், செலுத்தப்பட வேண்டிய வாடகை, அதை மாற்றி அமைப்பதற்கான விதிமுறைகள், வாடகைதாரருக்கு மூல உடன்படிக்கைக்கான பிரதி வழங்கப்படுதல், சொத்து மேலாளர் யார், அவர் குறித்த தகவல் அளித்தல், நில உரிமையாளர் முன்பணம்செலுத்தும் நடைமுறை உள்ளிட்டபல்வேறு நிகழ்வுகளுக்கான விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, வாடகை நீதிமன்றம் அமைத்தல், மேல்முறையீடு செய்தல், வாடகை தீர்ப்பாயம், தீர்ப்பாயத்துக்கு மேல்முறையீடு அமைத்தல், தீர்ப்பாயத்தால் வாடகை நிர்ணயிக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்றம், தீர்ப்பாயம் இவற்றுக்கான வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
***********************************************நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 24.02.2019
No comments:
Post a Comment