disalbe Right click

Monday, March 25, 2019

எம்.பி. ஆக என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும்?

நீங்கள் எம்.பி. ஆக என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும் தெரியுமா?

நமது இந்திய நாடாளுமன்றம் என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.
மக்களவை
543+2 = 545 உறுப்பினர்களைக் கொண்டது மக்களவை. வாக்காளர்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுப்பது மக்களவை உறுப்பினர்களை மட்டும்தான். 2 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுவர். இந்த 2 உறுப்பினர்களும் ஆங்கிலோ இந்தியர்களாக இருக்க வேண்டும். மக்களவைக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
மாநிலங்களவை: 
250 உறுப்பினர்களைக் கொண்டது. இதில், 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுவர். இவர்கள் கல்வி, கலை, அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள். மாநிலங்களவை தலைவராகத் துணை குடியரசுத் தலைவர் இருப்பார். வாக்காளர்களாகிய நாம் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் வாக்களிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள். இவர்களின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். ஒருவரே இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க முடியாது. இரண்டு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், ஏதாவது ஒரு அவையில் இருந்து அவர் கட்டாயம் ராஜிநாமா செய்ய வேண்டும். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
அதிகாரம்: 
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படுகிற எந்தவொரு சட்டமும், இரு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலோடு தான் நிறைவேற்றப்படும் என்பது பொது விதி. பண மசோதா உள்பட அனைத்து சட்டங்களும் மக்களவை உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் யார்?:
மக்களவைத் தேர்தலில் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் மட்டுமின்றி, சாமானியனும் இந்த தேர்தலை சந்திக்கலாம்.
* இந்தியக் குடிமகனாக (ஆண் அல்லது பெண்) இருக்க வேண்டும்.
* 25 பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
* இந்தியாவில் கட்டாயம் அவருக்கு வாக்குரிமை இருக்க வேண்டும்.
* தனக்கு வாக்குரிமை இருக்கும் தொகுதியில் மட்டும்தான் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
* தனக்கு வாக்குரிமை இல்லாத எந்தவொரு தொகுதிகளிலும் போட்டியிடலாம்.
* நல்ல மனநிலையிலும் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல் வேண்டும்.
* குற்றமுறை வழக்குகள் இல்லாதிருத்தல் வேண்டும்.
* முன்னர் நடந்த தேர்தலில் தேர்தல் விதிகளை மீறியதற்காகத் தண்டிக்கப்பட்டவராக இருக்கக் கூடாது.
* 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவராக இருக்கக் கூடாது.
தனித்தொகுதியில் யார் போட்டியிட முடியும்?: 
தனித்தொகுதிகளில் தாழ்த்தப்பட்டோரும், பழங்குடி வகுப்பினரும் மட்டுமே போட்டியிடமுடியும். ஆனால் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு பொதுத்தொகுதிகளில் போட்டியிடலாம். மற்ற தகுதிகள் அனைத்தும் நாடாளுமன்றத்தால் அவ்வப்போது இயற்றப்படும் சட்டங்களின்படி பின்பற்ற வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிளில் போட்டியிட முடியுமா?: 
ஒருவர் ஒரே நேரத்தில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றால், ஒரு தொகுதியில் மட்டும்தான் உறுப்பினராக இருக்க முடியும்.
குறைந்தபட்ச கல்வித்தகுதி உண்டா?: 
குறைந்தபட்ச கல்வித்தகுதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மக்கள் செல்வாக்கு பெற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றால், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே இன்றளவும் நடைமுறையில் இந்த முறை இருந்து வருகிறது.
தேர்தல் தேதி
பொதுவாக தேர்தலுக்கான தேதியை தன்னாட்சி அதிகாரம் பெற்ற நமது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதனுடனே வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நாட்களையும் அறிவிக்கும். அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பங்களை பெற்று, அதனை பூர்த்தி செய்து, தேர்தல் ஆணையத்தால் அந்தந்த தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
விண்ணப்பித்தில் பிழை இருந்தால்
தாக்கல் செய்த விண்ணப்பத்தில் தவறு இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை திருத்தி திரும்பி அளிப்பதற்கான ஒரு வாய்ப்பும் வழங்கப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சார்ந்தவர்கள்தான் போட்டியிட முடியுமா?: 
தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சார்ந்தவர்கள்தான் போட்டியிட முடியும் என்பது இல்லை. தேர்தலில் போட்டியிட வேண்டும் என நினைக்கிற எந்தவொரு இந்திய குடிமகனும் தேர்தலில் போட்டியிட முடியும்.
எத்தனை பேர் முன்மொழிய வேண்டும்
அங்கீகாரம் பெற்ற கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களைச் சம்மந்தப்பட்ட தொகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிந்தாலே போதும். தனிப்பட்ட முறையில் போட்டியிட நினைக்கும் ஒருவருக்கு வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியை சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும்.

முன்வைப்புத்தொகை செலுத்த (டெபாசிட்) வேண்டுமா?: 
தேர்தலில் போட்டியிட நினைக்கும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கும் தொகையை டெபாசிட்டாக செலுத்த வேண்டும். தேர்தலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குகளை பெற்றால் டெபாசிட் தொகை திரும்ப அளிக்கப்படும்.
செலவுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா?: 
தேர்தல் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய செலுவுத்தொகையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது தேர்தல் செலுவகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே தினமும் செலவிட முடியும். தேர்தல் பிரசாரத்திற்காக தாங்கள் செலவிட்ட கணக்கு வழக்குகளைத் தேர்தல் ஆணையத்திடம் உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்.
டெபாசிட் தொகை எவ்வளவு?: 
1951 முதல் 1996 வரை டெபாசிட் தொகை ரூ.5000 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 1996க்கு பின்னர் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. டெபாசிட் தொகை குறைவாக உள்ளதால்தானே அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன என்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகையை உயர்த்தியது. தாழ்ந்தப்பட்டோர், பழங்குடியினருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகையில் பாதி தொகையை மட்டும் டெபாசிட்டாக செலுத்தினால் போதுமானது.
டெபாசிட் இழந்தார் என்பதை எப்படி கணக்கிடுவது?: 
ஒரு தொகுதியில் பதிவான மொத்த, செல்லத்தக்க வாக்குகளில் 6இல் 1 பங்கு அல்லது அதற்கு குறைவாக பெற்றால் அவர் டெபாசிட் இழந்தவராக அறிவிக்கப்படுவார். அதாவது ஒரு தொகுயில் பதிவான செல்லத்தக்க வாக்குகள் 6000 எனில் 1000 வாக்குகளும் அதற்கு குறைவாக பெற்றிருப்பவர்கள் டெபாசிட் இழந்தவர்கள். அவர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழப்பார்கள். 1000க்கும் அதிகமான வாக்குகள் பெற்றவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தேர்தலில் வெற்றி பெற்றவரும் தனது டெபாசிட் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் மனசாட்சியுடன் மக்கள் சேவை செய்வதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், வரும் 17வது மக்களவைத் தேர்தல் தங்களுக்கான ஒரு வாய்ப்பாக கருதி போட்டியிட்டு மாற்றத்துடன் கூடிய முன்னேற்றத்தை தரலாம்.
*******************************************நன்றி : தினமணி நாளிதழ் - 19.03.2019

No comments:

Post a Comment