இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 182 & 211 இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
- இந்திய தண்டணைச் சட்டம்-1860ல் 182-வது பிரிவும், 211வது பிரிவும் பொது ஊழியருக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்டப்படியான அதிகாரத்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கு கேடு விளைவிக்க பொய்யான தகவலை தருவதைப் பற்றியும், அதற்கான தண்டணையைப் பற்றியும் நமக்குத் தெரிவிக்கின்ற பிரிவுகள் ஆகும்.
- இந்த இரண்டு பிரிவுகளும் ஒன்றுபோல இருந்தாலும், இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளது. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.
இந்திய தண்டணைச் சட்டம், 182-வது பிரிவு
- அது ஒரு பொய்யான தகவல் என்பதையும், அந்த தகவலினால், வேறு ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு நேரிடும் என்பதையும் தாம் நன்கு அறிந்திருந்தும் பொது ஊழியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வேறு ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடன் அந்த பொது ஊழியரிடம் பொய்யான தகவலைத்தருவது ஆகும்.
- உதாரணமாக ஒரு பொது ஊழியரிடம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வேட்பாளர் ஒருவர் குடோனில் மூட்டை, மூட்டையாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒருவர் (அது பொய்யான தகவல் என்பதையும், அதனால், அந்த வேட்பாளருக்கு தொல்லைகள் நேரிடும் என்பதையும் நன்கு அறிந்தே) தகவல் அளிக்கிறார்! என்றால் அவருக்கு இந்தப் பிரிவின் கீழ் ஆறு மாத சிறைத்தண்டணை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
இந்திய தண்டணைச் சட்டம், 211-வது பிரிவு
- ஒருவருக்கு அல்லது பலருக்கு கேடு விளைவிக்கும் எண்ணத்துடன், அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதும் இல்லை என்று தான் நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் மீது அல்லது பலரின் மீது காவல்நிலையத்தில் பொய்புகார் அளிக்கின்ற அல்லது நீதிமன்றத்தில் வழக்கு எதனையும் தொடுக்கின்ற எவர் ஒருவருக்கும் இரண்டு ஆண்டுகள் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
- இதில் மரணம், ஆயுள் சிறை அல்லது ஏழு ஆண்டுகள் தண்டணை விதிக்கக்கூடிய ஒரு குற்றம் பற்றி, அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதும் இல்லை என்று நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் அல்லது பலரின் மீது பொய்யான புகார் அளிப்பவரை அல்லது பொய்யான வழக்கு தொடுப்பவர் எவர் ஒருவருக்கும் ஏழு ஆண்டுகள் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டணை வழங்கப்படும்.
சுருக்கமாகச் சொன்னால்,
- இந்திய தண்டணைச் சட்டம், 182-வது பிரிவு என்பது அது பொய்யான தகவல் என்பதையும், அதனால், ஒருவருக்கு அல்லது பலருக்கு தொல்லைகள் நேரிடும் என்பதையும் நன்கு அறிந்த ஒருவர், பொது ஊழியரிடம் பொய்யான தகவல் அளிப்பது (மட்டும்) ஆகும்.
- இந்திய தண்டணைச் சட்டம், 211-வது பிரிவு என்பது அந்த குற்றச்சாட்டுக்கு நியாயமான, சட்டப்படியான ஆதாரம் ஏதுமில்லை என்று நன்கு தெரிந்திருந்தும் ஒருவர் அல்லது பலரின் மீது பொது ஊழியரிடம் பொய்யான புகார் அளிக்கும் அல்லது நீதிமன்றத்தில் பொய்யான வழக்கு தொடுக்கும் குற்றம் சம்பந்தப்பட்டது ஆகும்
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.04.2019
No comments:
Post a Comment