காவல்நிலையத்தில் மனு ஏற்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியம் என்ன?
காவல்நிலையத்தில் நேரடியாக புகார் அளிப்பவர்கள் தங்களால் அளிக்கப்படுகின்ற புகார் சம்பந்தமான, மனு ஏற்புச் சான்றிதழ் எனப்படுகின்ற CSR ரசீதை கண்டிப்பாக அவர்களிடமிருந்து கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், முதலில் புகார் அளித்த வாதி மீது, பிரதிவாதி புகார் அளித்து தப்பித்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இன்றைய காவல்நிலையங்கள் அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும், அடிபணிந்து நடப்பதை பல செய்திகளில் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு : 1
உதாரணமாக உங்களை ஒருவர் தாக்கியவுடன் காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று எழுத்து மூலமாக புகார் அளிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புகாருக்கு மனு ஏற்பு ரசீது வாங்கிவிட்டால் நல்லது. நீங்கள் முதலில் புகார் அளித்ததை மாற்ற முடியாது. இல்லையென்றால், அந்த காவல் நிலையத்தில் உள்ள அலுவலர்கள் உங்களை தாக்கியவருக்கு வேண்டியவர்கள் என்றால், அவரிடமிருந்து ஒரு புகாரை எழுதி வாங்கி பதிவு செய்து கொண்டு, (நீங்கள்தான் அவரை முதலில் அடித்ததாகவும், அவர் உங்கள் மீது ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் கூறி) வழக்கை திசை திருப்பி உங்களை மிரட்டி பணிய வைக்க முடியும்.
எடுத்துக்காட்டு ;2
நீங்கள் உங்கள் நண்பருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு கார் வேகமாக வந்து உங்கள் நண்பர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விடுகிறது. காரின் நம்பரை குறித்து வைத்துக் கொள்கிறீர்கள். நண்பருக்கு விபத்தினால் பலத்த காயம் ஏற்பட்டு. உயிருக்கே ஆபத்து. உண்டாகிறது. நண்பர் சுயநினைவை இழக்கிறார். அருகில் உள்ளவர்கள் மூலம் நண்பரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு , புகார் அளிக்க காவல் நிலையம் செல்கிறீர்கள். புகாரை பெற்றுக் கொண்டு ரசீது தரவில்லை என்றால், ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று அர்த்தம். காவல் துறையினர் அந்த கார் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு அவரது காரை ஒரு மணி நேரமாக காணவில்லை என்று புகார் எழுதி வாங்கிக் கொண்டு, அதனை முதலில் பதிவு செய்து, காரை திருடியவர்தான் விபத்தை உண்டாக்கிவிட்டார் என்று அந்த புகாரை முடித்து வைக்க முடியும். அந்த கார் உரிமையாளரை அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முடியும்.
எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்
ஆகையினால், காவல்நிலையத்தில் எந்தப் புகாரையும் நேரடியாக அளித்தால் மனு ஏற்பு சான்றிதழ் பெற தவறாதீர்கள். எல்லாக் காவல் நிலையங்களிலும் இது போல் நடப்பதில்லை என்றாலும், தயவு செய்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
அவர்கள் தர மறுக்கும்போது மனுதாரர் என்ன செய்ய வேண்டும்?
அவர்கள் புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தர மறுத்தாலோ, தட்டிக் கழித்தாலோ உடனடியாக அந்த மனுவின் ஒரிஜினல் காப்பி ஒன்றை பதிவுத்தபால் மூலமாக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்திற்கும், அந்த காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்து விடுங்கள். இதை செய்வதன் மூலம் ஒரு நல்ல ஆதாரத்தை மற்றும் பாதுகாப்பை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
காவல்துறை இயக்குநர் அவர்களின் ஆணை
காவல்நிலையங்களில் எந்தப்புகார் அளித்தாலும், அதற்கு தாமதமில்லாமல் உடனடியாக மனு ஏற்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட ஆணை நகல், காவல்துறை இயக்குநர் அவர்கள் வெளியிட்ட ஆணை நகல், மனு ஏற்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற முகநூல் நண்பர் திரு Saravanan Palanisamy அவர்கள் முகநூல் நண்பர் திரு A.Govindaraj Tirupur அவர்கள் மூலமாக நமக்கு வழங்கி உதவியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் நன்றி. அதன் இணைப்பு கீழே உள்ளது.
https://drive.google.com/file/d/1-Lm3tVu8dHVE9eYQjwUtMEfvEpXht0Ky/view?fbclid=IwAR3xMs9rfQuFR04INEtS8uMmMOUwJiMNGcyPPsNuo7eEZaOgbfxYvoqWWto
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.06.2019
No comments:
Post a Comment