disalbe Right click

Thursday, June 27, 2019

உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற....


உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற....
உங்கள் தெருவிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முதலில் துறைரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல் நடவடிக்கையாக, அதற்கு உரிய அரசு அலுவலகத்தில் எழுத்து மூலமாக புகார் அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே அகற்றிவிட வேண்டும். சகித்துக் கொள்ளக்கூடாது. அதிகமாக ஆக்கிரமிப்பு செய்ய அனுமதித்தால் அதனை அகற்ற அதிக சக்தியை செலவழிக்க நேரிடும்.

புகார் அளிப்பதற்கு முன்னர் என்ன செய்ய வேண்டும்?
புகார் அளிப்பதற்கு முன்பாக தங்களுடைய தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியின் வரைபடத்தை வைத்து அந்த தெருவின் அகலம் ஏற்கனவே எவ்வளவு இருந்தது என்பதை அறிந்து கொண்டால் புகாரை தெளிவாக எழுத முடியும். கிராமப்புறமாக இருந்தால் இதற்கான பகுதி வரைபடத்தை (FMB SKETCH) கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதைக்கொண்டு தங்களுடைய தெருவின் உண்மையான அகலம் எவ்வளவு என்பதை அறிந்து அதற்கேற்ப உங்களது புகார் மனுவைத் நீங்கள் தயாரிக்கலாம்.

யாரிடத்தில் புகார் அளிக்க வேண்டும்?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்டதாக இருந்தால் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், பேரூராட்சி அல்லது நகராட்சியாக இருந்தால் சம்பந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி அலுவலகத்திலுள்ள நகரமைப்புப் பிரிவிலும் எழுத்து மூலமாக உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வேண்டும். நேரில் சென்று கொடுப்பதைவிட பதிவுத்தபால் மூலமாக புகாரை அனுப்புவது நல்லது. அதன் மூலம் புகார் அளித்ததற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கும்.
மாநகராட்சிப் பகுதியாக இருந்தால்..?
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த வார்டு எந்த மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது என்பதை அறிந்து, அந்த மண்டல அலுவலகத்திலுள்ள உதவி ஆணையர் அல்லது உதவி நகரமைப்பு அலுவலர் அவர்களிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கலாம். அதில் ஏதும் நடவடிக்கை இல்லாதபட்சத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் புகார் தெரிவிக்கலாம். எங்குமே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடக்கும் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகைப்பட ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கலாம். அங்கு புகார் பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்குவார்கள்.
நீதிமன்றத்திற்கு எப்போது செல்ல வேண்டும்?
அரசு அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையுமே இல்லையென்றால் மட்டுமே நீதிமன்றம் செல்ல வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நீதிமன்றம் செல்லக்கூடாது. அரசு அதிகாரிகளிடம்  புகார் அளித்ததற்கான அனைத்து ஆதாரங்களுடன் உயர்நீதி மன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யலாம்.
Image result for poclain machine job doing
பொதுநல வழக்குகளை தனிநபர் தாக்கல் செய்யலாமா?
செலவு, பாதுகாப்பு மற்றும் வழக்கை வலுப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக. ஆக்கிரமிப்பு சார்ந்த பொதுநல மனுக்களை நீதிமன்றத்தில்  தனிநபராகத் தாக்கல் செய்வதைவிட, ஏதேனும் ஓர் அமைப்பு சார்ந்தோ, குடியிருப்போர் சங்கங்கள் சார்ந்தோ தாக்கல் செய்வது நல்லது.
***************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 27.06.2019 

No comments:

Post a Comment