இந்து மதத்தை சார்ந்த ஆணும், கிறிஸ்தவ மதத்தை சார்ந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுடைய திருமணத்தை எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்?
இந்து திருமணச் சட்டம்
இரண்டு இந்துக்களுக்கிடையே நடைபெறும் திருமணத்திற்கு மட்டும்தான் இந்து திருமணச் சட்டம் பொருந்தும். இரண்டு வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்களுக்கிடையே நடைபெறும் திருமணங்களுக்கு இந்த திருமணச் சட்டம் பொருந்தாது என்று இந்து திருமணச் சட்டம் பிரிவு 2 ல் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து திருமணச் சட்டம் பிரிவு 2(1)(a) ஆனது, இந்து மதத்தை சார்ந்துள்ள ஒரு நபருக்கு தான் பொருந்தும். அந்த இந்து மதம் எந்த முறையில் வளர்ச்சியில் இருந்தாலும் அந்த பிரிவு பொருந்தும். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் அல்லது ஜீ மதத்தை சார்ந்தவர்கள் இந்து என்பதிலிருந்து விலக்கப்பட்டு உள்ளார்கள் என்று உட்பிரிவு C ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு இரண்டு இந்துக்களிடையே ஒரு திருமணம் நடைபெற்றிருக்க வேண்டுமென இந்து திருமணச் சட்டம் பிரிவு 5 ல் கூறப்பட்டுள்ளது. எனவே இந்து திருமணச் சட்டமானது இரண்டு இந்துக்களுக்கிடையே நடைபெற்றுள்ள திருமணத்திற்கு தான் பொருந்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம்
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் பிரிவு 4 ல் "திருமணம் நடைபெறும் இருவரில் ஒருவர் அல்லது இருவருமே கிறிஸ்தவராக இருந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றிருந்தால் மட்டுமே அந்த திருமணம் செல்லும் என்றும், அப்படி இல்லையென்றால் அந்த திருமணம் செல்லாது என்று" கூறப்பட்டுள்ளது.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் பிரிவு 4 மற்றும் இந்து திருமணச் சட்டம் பிரிவு 5 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது, குல வழக்கப்படி இரண்டு இந்துக்களிடையே நடைபெற்றுள்ள திருமணத்தை மட்டுமே இந்து திருமணச் சட்டம் செல்லத்தக்கது என்று ஏற்றுக்கொள்கிறது.
இரண்டு சட்டங்களில் எது பொருந்தும்?
திருமணம் செய்து கொள்கிற இரண்டு நபர்களில் ஒருவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவராக இருந்து, மற்றொரு நபர் இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், இந்து திருமணச் சட்டம் அந்த திருமணத்திற்கு பொருந்தாது. அத்தகைய திருமணத்திற்கு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டமே பொருந்தும்.
இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு, ஒரு திருமணம் நடைபெறவில்லை என்றால், அந்த திருமணம் இல்லாநிலை திருமணமாக (Void) கருதப்படும். சிறப்பு திருமணச் சட்டத்தை விடவும், மேலோங்கு செயல் திறன் (Over riding Effect) இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்திற்கு அளிக்கப்படவில்லை.
சிறப்பு திருமணச் சட்டம்
சிறப்பு திருமணச் சட்டத்திற்கு அந்த மேலோங்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திருமணச் சட்டம் பிரிவு 4 ல் சிறப்பு திருமண செய்வதற்கான நடைமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதன்படி திருமணம் ஒன்று நிகழ்வதற்கு திருமண தம்பதிகள் இருவரும் அட்டவணை 2 ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் அவர்கள் இருவரும் அல்லது ஒருவர் திருமணத்திற்கு முன் 30 நாட்களுக்கு குறைவில்லாமல் வாழ்ந்த பகுதியைச் சேர்ந்த திருமண பதிவு அலுவலரிடம் திருமணம் பற்றிய அறிவிப்பை எழுத்து மூலம் கொடுக்க வேண்டும்.
திருமண பதிவு அலுவலர் என்ன செய்ய வேண்டும்?
பிரிவு 5 ன் கீழ் கொடுக்கப்படும் அறிவிப்புகள் அனைத்தும் திருமண அலுவலர் பதிவேட்டுடன் இணைத்து வைக்க வேண்டும். அதோடு அவர் உடனடியாக அந்த அறிவிப்புகள் ஒன்றின் உண்மை நகலை அதற்கென உள்ள திருமண பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். நபர் எவரும் அந்த பதிவேட்டை பார்வையிடுவதற்கு விரும்பும் பொழுது, அதை எல்லா காலங்களிலும் பார்வையிட வழிவகை செய்ய வேண்டும்.
மேலும் திருமண பதிவு அலுவலர் அந்த அறிவிப்பு நகல் ஒன்றை அவரது அலுவலகத்தில் வெளிப்படையாக தெரியுமாறு ஒட்டி விளம்பரம் செய்ய வேண்டும்.
திருமணம் செய்து கொள்ள இருக்கும் தரப்பினர்கள் பிரிவு 5 ன் கீழ் அறிவிப்பு கொடுத்த திருமண அலுவலரின் வட்டார எல்லைக்குள் நிலையான குடியிருப்பை கொண்டிராத போது, திருமண அலுவலர், அவ்விருவரும் நிலையான குடியிருப்பை கொண்டிருக்கும் திருமண அலுவலருக்கு அந்த அறிவிப்பினை அனுப்பி வெளிப்படையாக தெரியும் இடத்தில் அதை ஒட்டி விளம்பரப்படுத்த வேண்டும்.
ஆட்சேபனை யாராவது தெரிவித்தால்?
ஆட்சேபனைகள் ஏதாவது தெரிவிக்கப்பட்டால், அந்த ஆட்சேபனைகளை குறித்து திருமண அலுவலர் முடிவெடுக்க வேண்டும். அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு பிறகு, ஆட்சேபனைகள் ஏதும் இல்லை என்றால் அந்த தம்பதிகளின் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் ஒருவேளை ஆட்சேபனை இருந்தால் அது குறித்து திருமண அலுவலர் முடிவு எடுக்கலாம். அந்த முடிவின் மீது தம்பதிகள் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம்.
இதுவே சட்டப்படியான செயலாகும் என்று கீழ்க்கண்ட வழக்கு ஒன்றில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தீர்ப்பை வழங்கியவர்கள் நீதியரசர்கள் திரு. P. R. சிவக்குமார் மற்றும் S. வைத்தியநாதன் ஆகியோர்கள் ஆவார்கள்.
H. C. P. NO - 1722/2015, DT - 18.12.2015
Natarajan Vs Supertendent of police,
Pudhukkotai District and Others
(2016-2-MLJ-CRL-27)
No comments:
Post a Comment