போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள்
நமது நாட்டில் நடப்பதற்கே சிரமமான தெருக்களில் கூட பல கோவில்கள் திடீரென உருவாக்கப் பட்டிருக்கும். கோவில்தானே என்று யாரும் அதனை கண்டு கொள்வதில்லை. முதலில் சின்னதாக ஒரு சிலை வைப்பார்கள். பின்பு மேடை கட்டுவார்கள். அதன் பிறகு சுற்றுப் பிரகாரம், கோபுரம் என்று வெகு வேகமாக அந்த இடம் ஆக்கிரமிக்கப்படும். ஏதோ ஒரு காரணத்தினால் ஈர்க்கப்பட்டு மக்களும் வழிபாட்டிற்காக அங்கு செல்வார்கள். இதற்கென்று விழாக் கமிட்டியார், தர்மகர்த்தா தேர்ந்தெடுக்கப்பட்டு தலைக்கட்டு வரி, நன்கொடை வசூல் என்று அந்தப் பகுதியே அமர்க்களப்படும்.
அதிகாரிகள் தலையிடுவதில்லை
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று புகார் அளித்தாலும், பக்தி காரணமாக அதிகாரிகள் அதனை அகற்ற பயந்து, புகார் மனுக்களை கண்டு கொள்வதில்லை. இதனை நாம் பல இடங்களில் பார்த்துவிட்டு என்ன செய்வது? என்றே தெரியாமல் அதனை கடந்து தினசரி சென்று கொண்டிருக்கிறோம். ஆனால், இதனை அகற்ற ஒரு வழியை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது தெரியுமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் இப்படி ஒரு வழிபாட்டு ஸ்தலத்தை அகற்ற சிக்கல் வந்தது. உள்ளூரில் ஆரம்பித்த வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த சிக்கலான பிரச்சனைக்குரிய வழக்கு மதிப்பிற்குரிய நீதிபதிகள் சுதிர் அகர்வால் மற்றும் ராகேஷ் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அழுத்தமான தீர்ப்பு ஒன்றை அவர்கள் வழங்கினர். அதன்படி
⧭ போக்குவரத்துக்கு தடையாக உள்ள எந்த ஒரு வழிபாட்டு ஸ்தலமும் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு கட்டப்பட்டிருந்தால், அவை அனைத்தும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
⧭ அரசாங்கத்துக்குச் சொந்தமான காலி இடங்கள், சிறிய தெருக்கள், நெடுஞ்சாலைகள், பாதைகள், போன்ற எந்த ஒரு இடத்திலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள எந்த ஒரு கோவிலையும் கட்ட சட்டம் அனுமதிக்கக்கூடாது.
⧭ அவ்வாறு கட்டப்பட்டிருந்தால், அதனை ஆறுமாத காலத்திற்குள் வேறு இடத்திற்கு உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
⧭ இது பற்றிய விபரங்களை மாவட்ட ஆணையர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள், மாநில தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப வேண்டும்.
⧭ இந்த தீர்ப்பு வந்த (10.06.2016) நாள் முதல் ஏதாவது கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு நடந்தால், அதற்கு அந்த மாவட்டத்தை சேர்ந்த துணை ஆட்சியர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுமே முழுப்பொறுப்பு ஆவார்கள்.
⧭ கோவில் கட்டியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிந்து, கிரிமினல் குற்றம் செய்ததற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வழக்கு எண்: Supreme Court of India, Lavkush vs State of UP, 2016, Decided on 10.06.2016
****************************************** நன்றி : லாயர்ஸ் லைன், செப், 2016
No comments:
Post a Comment