disalbe Right click

Thursday, September 26, 2019

குழந்தை வளர்ப்பு - அவர்களின் தனித்துவம்

குழந்தை வளர்ப்பு - அவர்களின் தனித்துவம்
உங்களின் தனித்துவங்கள் எவை?
நம் தனித்துவங்கள் நம்முடைய அடையாளம். நமது பெயரை மற்றும் பலருக்குச் சூட்டியிருப்பதைக் கண்டிருப்போம். முகம், உருவம் கூட ஓரளவிற்கு ஒற்றுப் போகலாம். ஆனால் நம்மைத் தனித்துவப் படுத்தும் குணாதிசயங்களின் கலவையை வேறு யாரிடமும் காண முடியாது.
தனித்துவ அடையாளம் ஒவ்வொரு குழந்தையிடமும் உண்டு. இந்த கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில் ஒவ்வொரு குழந்தையையும் நாம் கொண்டாடுவோம். குழந்தைகள் அதை அடையாளம் கண்டு கொள்வது மட்டும் அல்லாமல் நாமும் அதைக் கண்டறிந்தால் உத்தமம்.
மனநல ஆலோசகரான என்னைப் பொருத்தவரை, எல்லோருக்கும் இந்த மனோபாவம் இருந்தால், அது குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறைகளைக் குறைத்து, குழந்தைகளுக்கு நன்றாக வளரும் சூழல் ஏற்படுத்த உதவும்.
தனித்துவம், அப்படி என்றால்?
உங்களின் தனித்துவங்கள் எவை? உங்கள் ஒவ்வொரு உறவினர்களின் தனித்துவத்தையும் பட்டியலிடுங்கள். அடுத்தபடியாக உங்கள் நண்பர்களின் குணாதிசயங்களையும் கணக்கிடுங்கள். நம் ஒவ்வொருவரையும் வேறுபடுத்தும் வடிவங்கள் விதவிதமாக இருப்பதைப் பார்ப்போம். உங்களின் தனித்துவத்தை அடையாளம் கண்டறிந்தால் மற்றவரிடமும் மிகச் சுலபமாகத் தென்படும்.
தனித்துவம், ஆற்றலாக இருக்கலாம். உடல்வாகு, உணர்வு, புரிதல், எழுதுவது, சொல்லித் தருவது, உதவுவது, சமூக திறன்கள், தானம் செய்வது என ஏதோ ஒன்றிலாவது மெச்சக் கூடிய தனித்தன்மை தென்படும்.
உலகின் எல்லோருக்கும், எல்லா கலாச்சாரத்திற்கும் இது உண்டு. தனித்துவமென்று பலவற்றைச் சொல்லலாம். இவை எல்லாமே குழந்தைகளுக்கும் பொருந்தும்.
ஒரே இடத்தில் பத்து குழந்தைகளைப் பார்த்தால், ஒவ்வொரு குழந்தையும் ஏதாவது ஒன்றேனும் மற்றவர்களை விட நன்றாகச் செய்வார்கள். இது அவர்களிடம் இருக்கும் திறமை, ஆற்றல், குணாதிசயம் என ஏதோ ஒன்றால் தனித்து நிற்பார்கள். உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஒரு குழந்தை, தன்னிடம் எது வந்தாலும் இன்னொருவருடன் பகிராமல் இருக்காது. தன்நலமற்ற நிலை அந்தப் பிஞ்சு வயசிலேயே. ஆம் நாம் எல்லோரும் பகிர்வதுண்டு, ஆனால் இப்படி அல்லவே! இப்படி ஒவ்வொரு குழந்தையிடமும் மெச்சக் கூடிய குணாதிசயங்கள் பல உண்டு, ஆனால் சிலவற்றை நாம் கவனிக்கத் தவறி விடுவோம், அல்லது பார்த்தாலும் அதன் சிறப்பை உணர மாட்டோம்.
தனித்துவங்களைக் கண்டு கொண்டு, சிறப்புகளைப் பாராட்டி ஊக்கமளித்தால், அது குழந்தைகளுக்கு நல்ல மனப்பான்மை உருவாக்குவதற்கு அடிப்படையாகும். நம் கொள்கைகள் (கடைப்பிடிப்பது), நம் பர்ஸனாலிடீ, நம்முடைய தோற்றம், நாம் செய்யும் விதம் இவை எல்லாம் நாம் யார் என்பதை எடுத்துக் காட்டும். குழந்தைப் பருவத்திலேயே சில குழந்தைகளும் மற்றவர்கள் பிறகு வளர வளரவும், தனித்துவ அடையாளங்கள் கொள்வார்கள். தாமாக அடையாளம் காண்பது தவிர, குழந்தைகளுடன் இருப்பவர்களும் இந்தத் தனித்துவங்களை அடையாளம் கண்டு கொண்டு, ஊக்குவித்து, கற்றுக் கொடுத்து அவை நன்றாக அமைவதில் ஓரளவிற்கு உதவ முடியும்.
எல்லோரையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்துக் கணிக்காமல் நாம் ஒவ்வொரு குழந்தையின் தனித்துவங்களையும் கண்டறிந்து ஏற்றுக் கொள்வது முக்கியம்.
தனித்துவத்தை அடையாளம் காண்பது
தனித்துவம் வெளிப்படுத்தப்படுவது பல வண்ணங்களில். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானவர். இங்கு ஓர் சில அடையாளங்களை உதாரணமாகப் பார்க்கலாம்: எல்லோரையும் விளையாட அழைப்பது, விட்டுக் கொடுப்பது, தனக்கு வந்ததை மற்றவர்களுடன் பகிர்வது, சமாதானப் படுத்துவது, படித்தவுடன் புரிந்து கொள்வது, மற்றவர்களுக்காகப் பேசுவது, எனப் பல பல உண்டு.
வகுப்பில் பரீட்சை தேர்வு முடிவுகள் வந்தாலும் சரி, ஓட்டப் பந்தயமோ, பேச்சுப் போட்டியோ, வீட்டிற்குள், சடங்குகளில் பங்கு கொள்ளும் போதோ, எதுவாக இருந்தாலும் எப்போதும் ஒரே மாதிரியாகச் செய்வதே ஒரு தனித்துவம் ஆகும். எவ்வாறு தனித்துவங்கள் பிரதிபலிக்கும் என்பதற்கு, இதோ, ஒரு சிறிய கண்ணோட்டம் :
பரீட்சை முடிவு பெற்றவுடன்:
நல்ல மதிப்பெண் வாங்கிய ஒரு குழந்தை சற்று குறைவாக மதிப்பெண் வாங்கிய குழந்தையைச் சமாதானப் படுத்துவது.
மற்றொரு குழந்தை மதிப்பெண் குறைவாக இருப்பதை ஏன் என்ற ஆராய்ச்சியில் ஆழ்ந்து போவது.
மதிப்பெண் குறைவினால் சோர்ந்து போய், அம்மா சமாதானம் சொன்னதும் உடனே சரியாகுவது

மதிப்பெண் அதிகம் பெற்றாலும் அதைப் பெரிதாகக் காட்டாமல் தன் நண்பர்கள் குறைவாக வாங்கியதைத் துச்சப் படுத்தாமல் இருப்பது.
மதிப்பெண் குறைவு, ஆனால் கையெழுத்தை எல்லோரும் புகழ்வதில் ஊக்கம் கொள்வது.
ஒரு குழந்தை முழு மதிப்பெண் பெற்று, "ஆம் வாங்குவேன் எனத் தெரியும்என்பது.
மற்றொரு குழந்தை குறைந்த மதிப்பெண் வாங்கி, மனம் தளராமல், மேலும் முயல முடிவு எடுப்பது.
ஆசிரியருக்கு, வகுப்புக்குத் தேவைகளை ஆசிரியர் கேட்பதற்கு முன்னதாகவே பார்த்துச் செய்து வைப்பது.
சிரிக்க வைத்து வகுப்பு தோழர்களைச் சமாதான நிலைக்கு வர வைப்பது.
மேற்சொன்னவை போலவே இன்னும் பல தனித்துவத்தைக் குறித்துக் கொண்டே போகலாம்.
இந்த உதாரணத்தின் அடிப்படையில் நீங்கள் உங்களைச் சுற்றி உள்ள நபர்களின் தனித்துவத்தைக் காண முயலுங்கள். அதே போலப் பார்க்கும் ஒவ்வொரு குழந்தையிடமும் அவர்களின் தனித்துவத்தை அடையாளம் காணுங்கள். இப்படித் தேட ஆரம்பிப்பதே அவைகளை நாம் அடையாளம் கண்டு கொள்ள உதவும், அத்துடன் நமது மனப்பான்மையைப் பறந்த மனப்பான்மையாக்கவும் உதவும்.
விளைவு? யாரையும் புறக்கணிக்கவோ துச்சமாகவோ கருத மாட்டோம். எல்லோரையும் மதிப்போம்.
ஒரே குடும்பம், ஒவ்வொருவரின் தனித்துவம்!
தனித்துவம் என்கிறோம், அதை அடையாளம் கொள்ள வேண்டும் என்பதையும் சொல்கிறோம். அப்போது, இரட்டை குழந்தைகளிடமும் வேறுபாடுகள் உண்டா? ஆம், இரு குழந்தையும் கருவில் ஒன்றாக இருந்துச் சில வினாடிகளின் வித்தியாசத்தில் பிறந்தவர்கள். இருந்தும் இருவரின் உடல் சாயல் பொருந்தினாலும் அவர்களின் குணாதிசயங்களில் வித்தியாசங்கள் இருக்கும்.
இரட்டை பிறவிகளிடமும் இந்த தனித்துவத்தை அறிவியலில் பல ஆராய்ச்சிகளில் கண்டிருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளின் வளரும் சூழல், திறன்கள், பாதிப்புகள், ஒன்றேதான். இருந்தும் அவர்களிடையே தனித்துவங்களைப் பார்க்க முடியும்.
இவ்வாறு ஒவ்வொரு நபரிடமும் தனித்துவம் இருப்பது நிஜம். இதை இந்தக் கோணத்திலும் பார்க்கலாம், பிறப்பின் அடிப்படையில் நாம் எல்லோரும் தனியாகத் தான் பிறக்கிறோம், இரட்டை குழந்தைகளும் கூடத்தான். மூளை, உடல், சுபாவம், மனநிலையில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும், அதனால் நம் அனுபவங்கள் வேறுபடும், போகப்போகத் தனித்துவங்கள் அதிகரித்துக் கொண்டே போகும்.
ஒப்பிடுவது தேவையற்றது
தனித்துவம் இப்படி வியாபித்து இருக்கையில் ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவதில் அர்த்தம் இல்லை. இது புதிதும் அல்ல! நாம் எவ்வளவு முறை இப்படி வியப்பாகச் சிந்தித்தோ, பகிர்ந்தோ இருக்கிறோம்?
இரட்டைப் பிறவியர் மட்டும் அல்ல, குடும்பத்தினரிடமும் சூழ்நிலை ஒன்றாக இருப்பினும் விளைவுகள் வெகுவாக மாறுபட முடியும். உலகளவில் எந்த கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, குடும்பமாக வசிப்பவர்களுக்கு ஏறத்தாழ எல்லா நபர்களுக்கும் கிடைப்பது அதே பொருள்கள், வசதிகள், அனுபவங்கள், உறவுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். குடும்பத்தினரிடையே உடன்பாடுகள் இருந்தாலும், பல்வகை வேறுபாடுகளும் இருக்கும். இந்தத் தனித்துவங்களைக் கண்டறிந்து, அதைச் சரியான கண்ணோட்டத்தில் நோக்கினால், அது வியப்பை, பூரிப்பை உண்டாக்குவது நிதர்சனம்.
நம் எல்லோரிடமும் ஒரு புதுமை புதைந்து இருக்கிறது. அதை அடையாளம் காண்பது முதல் கட்டமாகும். அடுத்தபடியாக அது நம்முடைய பர்ஸனாலிடீ, அடையாளம் என்பதை உணர்ந்து, அதைச் சரியாக உபயோகிப்பது நம் கடமையும் பொறுப்பாகும்.
தனி நபர்களின் இந்த தனித்துவம் போலவே, ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பம் தனித்து இருப்பதைப் பார்க்க நேர்கிறது.
ஆம் வளர்ச்சி என்பது பொதுவானது, இங்கும், உலகளவிலும். இருந்தாலும், மனிதனின் வளர்ச்சிகளை ஓர் அளவிற்கு தான் கணக்கிட, கட்டுப்படுத்த முடியும், பல விதங்களில் அது தன் வழியே போகும்.
தனித்துவத்தின் ஜாலங்கள்
தன்னுடைய தனித்துவத்தைத் தாமே கண்டு கொள்வதைத் தவிர, மற்றொருவர் சொல்லித் தெரிந்து கொள்வதும் ஆகலாம். எது எப்படியோ, இதை அறிந்தவுடன் ஒரு தெம்பு ஏற்படுகிறது. ஏன் இப்படி?

எந்த ஒரு நபரும் தன் தனித்துவத்தை அடையாளம் கண்டதும் அவர்களுக்குள் புத்துணர்ச்சி உதயமாகிறது. தனக்கென்று உலகில் ஓர் தனி இடம் உண்டு என்ற உணர்ச்சி. அதற்குக் காரணமே, அந்த தனித்துவம் புலப்பட்டதும், அதனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை உணர ஆரம்பிக்க, உடனே அது மேலும் தைரியத்தை அதிகரிக்கிறது.
இதன் காரணிகள்: தன்னைப் பற்றிய கருத்து மாறுகிறது. இதுவரையில் எப்படி தன்னைப் பற்றி நினைத்திருந்தாலும் அது நன்றாகவே மாறும். தனித்துவம்தான் சுய அடையாளமாகும். இது அவர்கள் வாழும் சமுதாயத்தின் அடையாளத்துடன், அபிப்பிராயத்துடன் சேர, அது மேலும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.
இதன் முக்கியத்துவம் உடல் மனநலனில் இருக்கின்றன. இவற்றைக் கடந்த வாரங்களில் பேசி வந்தோம்.
நம்மால் செய்ய முடிந்தவை
எல்லோரிடமும் தனித்துவம் உண்டு, இருப்பதை ஏற்றுக் கொள்ளுதல்.
தனித்துவத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் ஒப்பிடுவதற்கு இடமே இல்லை.
இவற்றிலிருந்து
குழந்தைகளின் தனித்துவத்தைப் புரிந்து அவர்களின் ஆர்வத்தை ஊக்குவிப்பது.
குழந்தைகளுடன் சேர்ந்து அவர்கள் தனித்துவங்களை உற்சாகத்துடன் கொண்டாடலாம்!
நம் எதிர்பார்ப்பிலிருந்து வேறுபட்டால், முடிந்த வரை கற்றுக் கொடுக்கலாம், மீதம் ஏற்றுக் கொள்ளலாம், கடுமையான சொற்களை, நடத்தையைத் தவிர்க்கலாம்.
தனித்துவம் இருப்பதால் பற்பல பாதைகள் தோன்றுகின்றன. புதிய திறன்கள் பிறப்பதற்கு வாய்ப்புகள் அமைகின்றன. இவ்வாறு அமைவதால் மற்றும் பல நன்மைகள் தென்படும். இவை, ஆற்றலில் மாற்றங்களாகவும், கண்ணோட்டங்கள்,
மேலும் விசாலமாக சமூகத்தில் சகிப்புத்தன்மையின் கருவியாகவும் அமைய உதவும். ஏனென்றால் இந்த அளவிற்குத் தனித்துவத்தினால் பேதங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் கொண்டுவிடும். இது நிலவ நாம் அனைவரும் தனித்துவத்தை உணர்ந்து, எல்லோரிடமும் அதைப் பார்க்க ஆரம்பித்து, ஏற்றுக் கொண்டதும், அமைதி, சமாதானம் நிலவும்.
மிகச்சிறந்ததைப் பெறமிகச்சிறந்ததைக் கொடு!
By மாலதி சுவாமிநாதன்
மனநலம் மற்றும் கல்வி நிபுணர் malathiswami@gmail.com 
நன்றி : தினமணி நாளிதழ் - 27.09.2019

No comments:

Post a Comment