புகார் அளித்திட காலவரையறை இருக்கிறது, தெரியுமா?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
இந்தியன் லிமிடேஷன் ஆக்ட் எனப்படுகின்ற இந்திய வரைமுறைச் சட்டத்தில் குற்றம் நடந்ததாக ஒருவர் புகார் தெரிவிக்கவோ அல்லது அது சம்பந்தமான வழக்கு பதிவு செய்யவோ காலவரையறை எதுவும் குறிப்பிடவில்லை.
புகார் தெரிவிக்கவில்லை என்றால்......
சம்பவம் நடந்து பல நாட்கள் ஆனபிறகும்கூட, ஒருவர் தமக்கு குற்றம் செய்தவர் மீது புகார் தெரிவிக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர் அந்த குற்றத்தை மன்னித்து விட்டதாக கருதப்படும்.
புகார் தெரிவிக்கும்போது......
புகார் தெரிவிக்க கால தாமதம் ஆனால், அது சட்டப்படி குற்றம் என்பது இவ்வளவு நாட்களாக தனக்குத் தெரியாது என்பதையோ அல்லது தாமதமாக புகார் அளிப்பதற்கான காரணத்தையோ குற்றம் சாட்டுபவர் தனது புகாரில் குறிப்பிட்டு அதனை நிரூபிப்பது நல்லது. அவ்வாறு புகார்தாரர் அதனை தெளிவுபடுத்தவில்லை என்றால், வேண்டுமென்றே
புகார் அளிக்க தாமதம் செய்ததாக கருதப்படும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 468
சிறைத்தண்டணை
எதுவும் இல்லாமல் அபராதம் மட்டுமே விதிக்கப்படக்கூடிய குற்றங்களுக்கு கால வரம்பு ஆறு மாத காலம் எனவும், ஓரு வருடம் சிறைத்தண்டணை உடைய குற்றங்களுக்கு கால வரம்பு ஓர் ஆண்டு எனவும், ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை தண்டனைக் காலம் உடைய குற்றங்களுக்கு
கால வரம்பு மூன்று ஆண்டுகள் எனவும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 468 கூறுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 469
குற்றம் நடந்த நாள், குற்றம் நடந்தது எப்போது என்று அக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கோ அல்லது காவல்துறையின் அதிகாரிக்கோ
தெரிந்த நாள் முதல் காலவரம்பானது கணக்கிடப்படும்
என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 469 கூறுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 469(ஆ)
குற்றத்தை செய்தது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கு தெரியாவிட்டால்
அதனை செய்தது யார் என்று பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது காவல்துறை அதிகாரிக்கோ எப்போது தெரிய வருகின்றதோ அந்த நாள் முதல் காலவரம்பு கணக்கிடப்படும்
என்றும் பிரிவு 469 (ஆ) கூறுகிறது.
பெரும்பாலும்
மூன்று ஆண்டுகளுக்கு
மேல் தண்டனை உடைய குற்றங்களுக்கு, தாமதமாக புகார் கொடுத்தாலும் குற்றத்தன்மையின்
அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது, அதே நேரத்தில் மிகவும் தாமதமாக அளிக்கப்படும் புகார்கள் மீது, (அந்தப் புகாரில் தீய நோக்கங்கள் இருக்கலாம். என்பதால்) வழக்குப் பதிவு உடனடியாக செய்யப்படுவதில்லை. இது போன்ற நேரங்களில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருக்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 21இல் வழங்கப்பட்டுள்ள தனிமனித வாழ்க்கை மற்றும் சுதந்திரத்துக்கான உரிமைகளும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 23.02.2020
No comments:
Post a Comment