மூத்த குடிமக்களுக்கு RTI சட்டம் தருகின்ற சலுகை
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, விண்ணப்பம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)ன் கீழ் தகவல்கள் மற்றும் ஆவண நகல்களை கேட்டு நாம் விண்ணப்பிக்கும் போது, அதனை பெற்றுக் கொண்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அதற்குரிய தகவல்களை வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, முதல் மேல்முறையீடு
அவ்வாறு பொது தகவல் அலுவலர் அவர்கள், தகவல்கள் எதையும் தரவில்லை என்றாலோ அல்லது சில தகவல்களை மட்டும் வழங்கியிருந்தாலோ அல்லது வழங்கிய தகவல்கள் முழுமையாக இல்லை என்றாலோ அல்லது தவறாக இருந்தாலோ, விண்ணப்பம் செய்து தகவல் பெற்று இருக்க வேண்டிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
முதல் மேல்முறையீடு பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அதற்கு மேல்முறையீட்டு அலுவலர் பதில் வழங்க வேண்டும். அதனை 30 நாட்களுக்குள் வழங்க இயலவில்லை என்றால், 45 நாட்கள் வரை நீடித்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான காரனத்தை அவர் பதிவு செய்திருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, இரண்டாம் மேல்முறையீடு
முதல் மேல்முறையீடு செய்து 30 நாட்களுக்குள் தகவல்கள் ஏதும் வழங்கவில்லை என்றால், அதிலிருந்து 90 நாட்களுக்குள் மாநில தகவல் ஆணையத்திற்கு நாம் இரண்டாம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
இரண்டாவது மேல்முறையீடு செய்தவர்களுக்கு இத்தனை நாட்களுக்குள் தகவல் ஆணையர் பதில் வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை.
ஆனால், மனுதாரர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் ஒரு சலுகை வழங்குகிறது.
அது என்ன சலுகை?
மனுதாரர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அவர் அனுப்புகின்ற புகார் அல்லது மேல்முறையீட்டு மனுவுடன் அவரது வயதை குறிப்பிடும் சான்றுகளான, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களின் நகல்களில் ஏதாவது ஒன்றை இணைத்து விண்ணப்பித்தால்,
மாநில தகவல் ஆணையருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 15(4)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, அந்த மனுக்கள் 8 வாரங்களுக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது கீழ்க்கண்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.02.2020
No comments:
Post a Comment