disalbe Right click

Tuesday, March 3, 2020

தகவல் ஆணையத்தின் ஆணைக்கு மதிப்பு இருக்கிறதா?

தகவல் ஆணையத்தின் ஆணைக்கு மதிப்பு இருக்கிறதா?
பொது தகவல் அலுவலர்களின் நம்பிக்கை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படுகின்ற தகவல்களை எந்த ஒரு பொது தகவல் அலுவலர்களும் தற்போது வழங்குவதே இல்லை. அதற்கு முழு முதல் காரணம் தமிழ்நாடு தகவல் ஆணையம்தான். காரணம் அந்த சட்டத்தின் ஷரத்துகளை தகவல் ஆணையர்கள் எவருமே பின்பற்றுவது இல்லை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(1)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1) ன் கீழ் அனுப்பப்படுகின்ற விண்ணப்பத்தில் மனுதாரரால் கேட்கப்படுகின்ற தகவல்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் அல்லது பிரிவு 8 அல்லது பிரிவு 9ல் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று இந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(2)
மேற்கண்டவாறு மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்றால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததாக கருதப்படும் என்று இந்த பிரிவில்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல மனுக்களுக்கு  எந்தவித தகவலையும் பொது தகவல் அலுவலர்கள் வழங்குவதே இல்லை. 
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)
மனுதாரரின் கோரிய தகவலை பொது தகவல் அலுவலர் அளிக்க  மறுத்திருந்தால், தகவல் அளிக்கின்ற நாள்வரை நாள் ஒன்றுக்கு ரூ. 250/- தண்டமாக  விதித்தல் வேண்டும் என்று இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இதன்படி எத்தனை பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது? 
இந்த பிரிவின்படி தண்டம் விதிப்பதென்றால், தமிழ்நாடு தகவல் ஆணையத்திலுள்ள பொது தகவல் அலுவலர் கூட தப்ப முடியாது. 
தகவல் ஆணையர்களது ஆணைக்கு மதிப்பிருக்கிறதா?
தகவல் ஆணையர்கள் தகவலை வழங்க வேண்டும் என்று கூறி ஆணை பிறப்பித்தாலும் அந்த ஆணைக்குப் பிறகும்கூட பொது தகவல் அலுவலர்கள் தகவல்களை தருவதில்லை.  
ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா?
  1. நாங்கள் தகவல்களை வழங்கச் சொல்லி ஆணை இடுவோம்; ஆனால், நீங்கள் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 
  2. நீங்கள் வழங்காவிட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லுவோம்; ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்க மாட்டோம் 
என்று தகவல் ஆணையர்களுக்கும், பொது தகவல் அலுவலர்களுக்கும் வாய்மொழியாக ஏதேனும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதோ  என்று அனைவரும் நம்புகின்ற  அளவிற்கு, இந்த சட்டம் ஒரு கேலிப் பொருளாகிவிட்டது. ஏனென்றால், தகவல் ஆணையர்கள் மேற்கண்ட சட்டப்பிரிவுகளை  பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதே இல்லை. அதனால், ஆணையர்களின் ஆணையை பொது தகவல் அலுவலர்கள் மதிப்பதே இல்லை.
ஆனையரின் ஆணையை மதிக்காத பொது தகவல் அலுவலருக்கு ஆணையர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தை கீழே பதிவிட்டுள்ளேன். அதனை படித்துப் பாருங்கள். நான் சொன்னது எவ்வளவு தூரம் உண்மை என்பது உங்களுக்கு விளங்கும்.




*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 03.03.2020 

No comments:

Post a Comment