பதிவுத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய முடியாது!
எங்களது சங்கத்தில் நடக்கின்ற மோசடி
எங்களுடைய சங்க நிர்வாகத்தில் பல மோசடிகள் நடந்துள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்ற சங்க நிர்வாகிகளுக்கு சாதகமாக விருதுநகர் மாவட்டப்பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் நல்லதொரு பாதுகாப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவர்கள் என்ன தவறு செய்து இருந்தாலும், அதனை ஆதாரபூர்வமாக நான் நிரூபித்தாலும் தீர்ப்பு என்னமோ அவர்களுக்கு சாதகமாகத்தான் வழங்கப்படுகிறது. மாவட்டப் பதிவாளர் மட்டும்தான் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார் என்று பார்த்தால் பதிவுத்துறையே அவர்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.
மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் செய்த பல மோசடிகள்
நான் சங்க நிர்வாகிகள் மீது ஆதாரத்துடன் புகார் அளிப்பேன். யாராவது ஆதாரங்களுடன் புகார் அளித்தால் விசாரணை நடத்த வேண்டும் அல்லவா? உடனே எனக்கு விசாரணை அழைப்பு விடுக்கப்படும். நானும், ஆஹா, மாவட்டப் பதிவாளர் விசாரணைக்கு நம்மை அழைத்துவிட்டார்; இதோடு சங்க நிர்வாகிகளின் மோசமான நிர்வாகத்திற்கு ஒரு முடிவு ஏற்பட்டுவிடும்! என்று அந்த விசாரணைக்கு ஆர்வத்துடன் செல்வேன். விசாரணை நடக்கும். நான் சங்க நிர்வாகிகளின் மீது ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுவேன். என்முன்னே அவர்களை மிரட்டுவது போல் மாவட்டப் பதிவாளர் பாசாங்கு செய்வார். அவர்கள் தலையை சொரிவார்கள். என்னை மட்டும் அனுப்பிவிட்டு அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்.
விசாரணையின் முடிவு அறிவிக்க மாட்டார்கள்
நடந்து முடிந்த விசாரணையின் முடிவை மாவட்ட பதிவகத்தில் இருந்து புகார்தாரரான எனக்கு வழங்கவே மாட்டார்கள். ஆனால், வழங்கியது போல ஒரு ஏற்பாட்டை செய்து கொள்வார்கள். இது சமீபத்தில்தான் எனக்கு தெரிய வந்தது. அதுபற்றிய ஆதாரமும் எனக்கு எதேச்சையாக கிடைத்தது. இதுபற்றிய செய்தியை 17.03.2020 அன்று ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து அதனை அறிந்து கொள்ளலாம்.
ஆவணங்களை ஆய்வு செய்தால் என்ன?
சங்க நிர்வாகிகளும், பதிவுத்துறையும் சேர்ந்து செய்கின்ற அத்தனை மோசடிகளையும் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது, சங்க நிர்வாகிகள் பதிவுத்துறையில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்தால் என்ன? என்று ஒரு யோசணை தோன்றியது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (ஜே) ன் கீழ், விருதுநகர் மாவட்டப்பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்களுக்கு, கடந்த 2001ம் ஆண்டு முதல் கடந்த 2019ம் ஆண்டு வரை எங்களது சங்க நிர்வாகிகள் தங்களிடம் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் தாங்கள் அவர்களுக்கு, மற்றவர்களுக்கு அனுப்பிய கடிதங்களை ஆய்வு செய்து கொள்லவும், குறிப்பெடுத்துக் கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கடிதத்தை கடந்த 31.08.2019 அன்று அனுப்பினேன்.
பதிவுத்துறையின் சட்டதிட்டங்கள் வேறு
தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிரிவு 2 (ஜே) ன் கீழ் பதிவுத்துறையில் உள்ள சங்க ஆவணங்களை ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது என்றும், பதிவுத்துறையின் சட்டதிட்டங்கள் மூலமாகவே அவற்றை ஆய்வு செய்ய முடியும் என்றும் மாவட்டப் பதிவாளர் எனக்கு 30.09.2019 அன்று கடிதம் அனுப்பினார்.
போராளிகளின் வேகத்தை தடுக்கின்ற ஸ்பீடு பிரேக்கர்
அதனால், மதுரை - பதிவுத்துறை துணைத் தலைவருக்கு எனது முதல் மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். அங்கு பதிவுத்துறை துணைத் தலைவராகவும், பொது தகவல் அலுவலராகவும் வீ.வாசுகி என்று ஒரு அம்மையார் பணியாற்றி வருகிறார்கள். எனக்கு எந்த பதிலையுமே அனுப்பவில்லை. தகவல் ஆணையமானது முதல் முறையீடு செய்யாமல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு செய்தால் அந்த மனுக்களை தள்ளுபடி செய்கிறார்களே தவிர, முதல் மேல்முறையீடு செய்த மனுதாரர்களுக்கு எந்தவித பதிலையும் அளிக்காத முதல் மேல்முறையீட்டு அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதே இல்லை. போராளிகளின் வேகத்தை தடுக்கின்ற ஸ்பீடு பிரேக்கராகவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முதல் மேல்முறையீடு இருக்கிறது.
இரண்டாம் மேல்முறையீடு!
”அழுதுகிட்டு இருந்தாலும் உழுதுகிட்டு இருன்னு!’ நம்ம ஊருகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். அது சட்டப்போராளிகளின் வாழ்க்கைக்கும் நன்றாக பொருந்தும். அதனால், எனது இரண்டாம் மேல்முறையீட்டை கடந்த 21.11.2019 அன்று தகவல் ஆணையத்திற்கு அனுப்பினேன்.
ஆணையம் போட்ட உத்தரவு
தகவல் ஆணையத்தில் இருந்து எனக்கு மேற்கண்ட ஆய்வு சம்பந்தமாக, விருதுநகர் மாவட்டப் பதிவாளர் அவர்களுக்கு அனுப்பிய உத்தரவு நகல் ஒன்றை எனக்கு 24.02.2020 அன்று அனுப்பி வைத்திருந்தார்கள். அதில் ஆய்வு செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தண்டம் விதிக்க நேரிடும் என்றும் மாவட்டப்பதிவாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அசராத மாவட்டப் பதிவாளர்
அதற்கு 04.03.2020 அன்று அனுமதி அளிக்க வழியில்லை என்று ஒரு கடிதம் மூலமாக தகவல் ஆணையத்திற்கும் சட்டம் சொல்லித் தந்திருந்தார். ஆணையம் 19.03.2020 அன்று நேரடி விசாரணைக்கு அவரை மட்டும் அழைத்தது. நானும் பல வழிகளில் விசாரணை செய்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதிவுத்துறையில் ஆய்வு செய்ய அனுமதிக்கலாம்! என்பதை எனது 14.03.2020 கடிதத்தில் மீண்டும் தகவல் ஆணையத்தின் ஆணையாளருக்கு வலியிறுத்தி இருந்தேன்.
மாவட்டப் பதிவாளர் அனுப்பி, எனக்கு பறந்து வந்த கடிதம்
19.03.2020 விசாரணையில் நேரடியாக ஆஜரான மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் எப்போது விருதுநகர் வந்தாரோ, எப்போது கடிதம் எழுதினாரோ, எப்போது அனுப்பினாரோ, 21.03.2020 அன்று எனக்கு அவர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதில் வருகின்ற 30.03.2020 அன்று விருதுநகர் மாவட்டப் பதிவகத்தில் ஆய்வு செய்ய எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் தங்களது பார்வைக்காக கீழே பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிந்தவுடன் இது சம்பந்தமான அடுத்த பதிவை என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம்.
************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 21.03.2020
No comments:
Post a Comment