காணாமல் போனவர் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்
தனது பெயரில் சொத்தோ அல்லது வழக்கோ இல்லாத ஒருவர் காணாமல் போனால் எந்தவித பிரச்சணையும் இல்லை. ஒரு நபரின் பெயரில் சொத்து இருந்து அவர் காணாமல் போனால், அந்த சொத்து யாருக்கு உரியது? அதனை என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். அதேபோல் ஒருவரது பெயரில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து கொண்டு இருக்கும்போது அவர் காணாமல் போனால், அந்த வழக்கை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்ற குழப்பம் நீதிமன்றத்திற்கும், காவல்துறைக்கும் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்திய சாட்சியச்சட்டம் பிரிவு 108 விளக்குகிறது.
இந்திய சாட்சியச்சட்டம் பிரிவு 108
ஒருவர் காணாமல் போய்விட்டால், அவர் காணமல் போன நாளில் இருந்து ஏழு வருடங்கள் முடிந்துவிட்டால், யூகத்தின் அடிப்படையில் அவர் இறந்து போனதாக கொள்ளலாம்! என்று இந்தப்பிரிவு சொல்கிறது. ஆனால், அவர் காணாமல் போன பிறகு, அவர் காணாமல் போய்விட்டார்; கண்டுபிடித்து தாருங்கள்! என்று அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ புகார் அளித்து அந்த சம்பவத்தை பதிவு செய்திருக்க வேண்டியது மிக அவசியம்.
காணாமல் போனவரது சொத்து
காணாமல் போனவரது பெயரில் ஏதாவது சொத்து இருந்தால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, காவல்நிலையத்தில் இருந்து அவரை கண்டுபிடிக்க இயலவில்லை! என்ற சான்றிதழை பெற்று அதனை வைத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அதனை நிரூபித்து, அவரது இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் பெற்று அந்த சொத்துக்களை அவரது வாரிசுகள் சட்டப்படி பிரித்துக் கொள்ளலாம்.
**********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.07.2020
No comments:
Post a Comment