தகவல் ஆணையர் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல்
விருதுநகர் மாவட்ட காவல்துறை பொதுத்தகவல் அலுவலர் அவர்களிடம் கடந்த 23.06.2018 அன்று சில தகவல்களை நான் கேட்டிருந்தேன். அதற்கு அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 2(எப்)ன் கீழ் அது வரவில்லை என்று ஏதோ சில தகவல்களை மட்டும் வழங்கியிருந்தார்.
அந்த தகவல்களும் பொருத்தமானதாக இல்லாத காரணத்தால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் 26.07.2018 அன்று முதல் மேல்முறையீடு செய்திருந்தேன். அதற்கு அவர் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
அதனால் மாநில தகவல் ஆணையத்திற்கு 01.10.2018 அன்று எனது 2வது மேல்முறையீட்டை சமர்ப்பித்தேன். வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கு SA 7248/A/2018 என்ற எண்ணும் வழங்கப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணை சென்னையில் மாநில தகவல் ஆணையத்தில் 26.02.2020 அன்று நடைபெற்றது. நான் ஆஜரானேன். தகவல் ஆணையர் திரு தட்சணாமூர்த்தி அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
பொது தகவல் அலுவலர் வந்திருந்தாலும் எனது எல்லாக் கேள்விகளுக்கும் ஆணையர் அவர்களே பதில் அளித்தார். ஒரு தலைப்பட்சமாகவே வழக்கு நடத்தப்பட்டது. முடிவில் எந்தவித தகவலும் வழங்க வேண்டியதில்லை என்று ஆணையும் பிறப்பித்தார்.
எனக்கு தபாலில் அனுப்பப்பட்ட எனது வழக்கு குறித்த ஆணை 20.03.2020 அன்று கிடைத்தது ஆனால், மாநில தகவல் ஆணைய இணையதளத்தில் எனது வழக்கு குறித்த ஆணை பதிவேற்றம் செய்யப்படவில்லை. அன்றைய 26.02.2020 தினத்தில் 22 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் எனது இந்த வழக்கு (SA 7248/A/2018) ஏனோ பதிவு செய்யப்படவில்லை. ஆனால், எனது மற்றொரு வழக்கின் ஆணை (SA 5331/2018) பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீராய்வு மனு தாக்கல்
கோப்பில் உள்ள தகவலை வழங்க மறுத்தது தவறு என்றும் தகவல் ஆணையர் திரு தட்சணாமூர்த்தி அவர்கள் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்றும் உரிய ஆதாரங்களுடன் தலைமை தகவல் ஆணையர் திரு ஆர். ராஜகோபால் அவர்களுக்கு 24.03.2020 அன்று சீராய்வு மனுவை பதிவுத்தபால் மூலம் தாக்கல் செய்தேன். அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஆ.ம. எண்:NC.991-2020 என்ற எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனது செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலை அனைவரிடத்திலும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 30.07.2020.
No comments:
Post a Comment