ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும்.
வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது.
பிரிவு 309 - Power to postpone or adjourn Proceedings -
1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்.
வரம்புரையாக - இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ)- ன் கீழான குற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, முடிந்த மட்டும் அந்த வழக்கு விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். (இது புதிதாக சட்ட எண்- 13/2013 ன் படி இணைக்கப்பட்டு 3.2.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது)
2. நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு பின்னர் விசாரணை எதையும் துவக்குவதை தள்ளி வைப்பது அவசியமானது என்னும் முடிவுக்கு வருமானால் நிபந்தனைகள் அடிப்படையில் தள்ளி வைக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் சாட்சிகள் முன்னிலையாகி இருந்தால் காரணமில்லாமல் தள்ளி வைக்கக்கூடாது.
3. சூழ்நிலைகள் கைமீறியதாக இருக்கும் நிலையில் வாய்தா வழங்கலாம். மற்றபடி வழக்கு தரப்பினர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக வழக்கை தள்ளி வைக்கக்கூடாது.
4. வழக்கு தரப்பினரின் வழக்கறிஞர் மற்றொரு நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை காரணம் காட்டி வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்கும்படி கோர முடியாது.
5. உரிய சந்தர்ப்பங்களில் வழக்கு செலவுத் தொகையை செலுத்த உத்தரவிடலாம்.
இதுபோக இன்னும் பல விளக்கங்கள் உள்ளது.
வழக்கு விசாரணையை துரிதப்படுத்த காவல்துறையினரின் ஒத்துழைப்பு கட்டாயம் வேண்டும். ஆனால் காவல்துறையை நீதிமன்றம் நம்பாது.
ஒரு வழக்கை ஒத்தி வைக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது நீதிமன்றத்தின் இயல்பான அதிகாரத்தை பொறுத்ததாகும். ஆனால் இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. வாய்தா வழங்கினால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று கு. வி. மு. ச பிரிவு 309(1) கூறுகிறது. ஆனால் பெரும்பாலான நீதிமன்றங்கள் இதனை பின்பற்றுவதில்லை. அதனால் தரப்பினர் ஆஜராகும் போது நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தால் தகுந்த காரணம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை வற்புறுத்த வழக்கின் தரப்பினர்களுக்கு உரிமை உண்டு.
தகுந்த காரணம் என்பது வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் அல்லது வல்லுநரின் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது அல்லது முக்கியமான சாட்சியை அழைத்து விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்பன ஆகும். வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு சாத்தியமில்லை என்ற நிலையில் தான் வாய்தா வழங்கப்படுகிறது.
வழக்கறிஞருக்கு வேறு கோர்ட்டில் வேலை இருக்கிறது என்பதெல்லாம் தகுந்த காரணம் கிடையாது.
தகுந்த காரணம் இருந்தால் நீதிமன்றம் வழக்கை 15 நாட்களுக்கு மேல் ஒத்தி வைக்கக்கூடாது.
எந்த ஒரு நீதிமன்றமும் வழக்கை விரைந்து முடிக்கவே விரும்புகிறது. ஆனால் சில வழக்கறிஞர்கள் தேவை இல்லாமல் வாய்தா கேட்பதால்தான் காலதாமதம் ஆகிறது.
எனவே தேவையில்லாமல் வாய்தா கேட்டால் கு. வி. மு. ச பிரிவு 309(2) ன் கீழ் செலவுத் தொகை தர வேண்டும் என்று கோரினால் தேவையில்லாமல் வாய்தா வழங்கப்படுவதை தவிர்க்கலாம்.
( எனக்கு தெரிந்து இதுதான் நடைமுறை)
No comments:
Post a Comment