ஓய்வு பெற்றவர்களுக்கான முதலீடு திட்டம்
அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும், ‘சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்’ எனப்படும் மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme) ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் பிரபலமான முதலீட்டு திட்டமாக இருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அதிக பலன், குறைவான ரிஸ்க் மற்றும் வரிச்சலுகை போன்ற அம்சங்களால், இது ஓய்வூதியம் விரும்பும் முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்படுகிறது.
வங்கிகளின் வைப்பு நிதி முதலீடு தவிர, இந்த திட்டத்தையும் வயதானவர்கள் பரிசீலிக்கலாம் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
தகுதி:
60 வயதுக்கு மேலானவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது சூப்பர் ஆனுவேஷன் கீழ் ஓய்வு பெற்றவர், 55 வயது முதல், 60 வயதானவர்களும் முதலீடு செய்யலாம்.
ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக முதலீடு செய்யலாம். அதற்கு மேலான தொகை எனில் காசோலை மூலம் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஆயிரம் ரூபாயின் பெருக்கல் தொகையாக முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தின் கீழ் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் துவக்கலாம். ஆனால், மொத்த தொகை, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.
தனியாக அல்லது கணவன், மனைவி இணைந்த கூட்டாக கணக்கு துவக்கலாம். நாமினி வசதியும் இருக்கிறது.
வட்டி வருமானம்: தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. வட்டி காலாண்டு அடிப்ப-டையில் செலுத்தப்படும்.
வட்டி வருமானம் தானாக செலுத்தப்பட அஞ்சல் அலுவலகத்தில் தனியே சேமிப்பு கணக்கு துவக்கியிருக்க வேண்டும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம், 5 ஆண்டுகள்.
முதிர்வு அடைந்தவுடன், ஓராண்டு காலத்திற்குள் உரிய விண்ணப்பம் சமர்ப்பித்து, மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.
தொகையை முன்கூட்டியே விலக்கிக் கொள்ளும் வாய்ப்பு ஓராண்டுக்கு பிறகு வழங்கப்படுகிறது. எனினும், டிபாசிட் தொகையின், 1.5 சதவீதம் கழித்துக்கொள்ளப்படும்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கிக் கொண்டால், 1 சதவீத தொகை கழித்துக்கொள்ளப்படும். ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருந்து, இன்னொரு அஞ்சல் அலுவலகத்திற்கு கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.
கே.ஒய்.சி., படிவம், புகைப்படம், பான் எண் ஆகியவற்றை சமர்ப்பித்து அஞ்சல் அலுவலகங்களில் இந்த திட்டத்தின் கீழ் கணக்கு துவக்கி முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள் அதற்குரிய சான்றிதழை அளிக்க வேண்டும். ஒரு சில வங்கிகளும் இந்த திட்டத்தை வழங்குகின்றன.
இந்த முதலீடு, 80 சி பிரிவின் கீழ் வருமான வரிச்சலுகைக்கு தகுதி உடையது.
நன்றி : தினமலர் (வர்த்தக மலர்) - 13.03.2017