disalbe Right click

Showing posts with label அபராதம். Show all posts
Showing posts with label அபராதம். Show all posts

Friday, June 15, 2018

தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கைவிட்டால்....!

தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கைவிட்டால்....!
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவ, மாணவியர், பின்னர் அதை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்  தொடங்கியுள்ளது. 01.07.2018- முதல் 05.07.2018-வரை அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்ட கலந்தாய்வு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று அதனை ஏதோ ஒரு காரணத்தால் கைவிடுவோர் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., தகவல்குறிப்பேட்டில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள விதிகளில் கீழ்க்கண்ட விதியும் இணைக்கப்படுகிறது.  அதன்படி, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் 02.08.2018-ஆம் தேதி முதல் 19.08.2018 ஆம் தேதிக்குள் இடங்களைக் கைவிட்டால் ஒப்பந்தத்தைத் மீறியதற்காக ரூ. ஒரு லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். 19.08.2018 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு இடங்களைக் கைவிட்டால் ரூ.பத்து லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 16.06.2018  

Friday, November 24, 2017

குப்பையில் மருத்துவக்கழிவு - அபராதம்

மருத்துவகழிவு: ஸ்கேன் சென்டருக்கு அபராதம்
ஓசூர்: ஓசூரில், குப்பை கழிவுகளுடன் சேர்த்து, மருத்துவ கழிவுகளை கொட்டிய, ஸ்கேன் சென்டருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில், பி.எம்.கே., ஸ்கேன் சென்டர் உள்ளது. இங்கு சேகரமாகும் மருத்துவ கழிவுகளை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெற்ற, நிறுவனத்திடம் தான் வழங்க வேண்டும். ஆனால், நகராட்சி குப்பையுடன், மருத்துவ கழிவுகளை கொட்டியதால், கடந்த ஆண்டு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், ஸ்கேன் சென்டரில் சேர்ந்த குப்பையை நேற்று அள்ளினர். அப்போது, மருத்துவக் கழிவும் இருந்தது. இதையடுத்து, நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் உத்தரவின்படி, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கவும், நகராட்சி முடிவு செய்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.11.2017

Thursday, July 27, 2017

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு
புதுடில்லி: மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி தொடர்ந்த அவதுாறு வழக்கில், உரிய பதில் அளிக்காத, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த்கெஜ்ரிவாலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, டில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த போது மோசடியில் ஈடுபட்டதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டில்லி அரசின், ஐந்து அமைச்சர்களும், இதேபோன்று கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, இவர்கள் மீது, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, அருண் ஜெட்லி வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணையின் போது, கெஜ்ரி வால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, அருண் ஜெட்லி குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தினார்.
கெஜ்ரிவால் கூறியபடி, அந்த வார்த்தையை பயன்படுத்தியதாக, ராம்ஜெத் மலானி கோர்ட்டில் குறிப்பிட்டார். இதையடுத்து, கெஜ்ரிவால் மீது, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, அருண் ஜெட்லி மற்றொரு அவதுாறு வழக்கை தொடர்ந்தார். இந்த மனுவுக்கு, கெஜ்ரிவால் தரப்பில் உரிய பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. 
இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, டில்லி ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், 'அவதுாறான வார்த்தைகளை பயன்படுத்தும்படி ராம்ஜெத் மலானியிடம் நான் எதுவும் கூறவில்லை' என, கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராம்ஜெத் மலானி, கெஜ்ரிவால்  சார்பில் இந்த வழக்கில் ஆஜராகப் போவதில்லை என அறிவித்துள்ளதுடன், இதுவரை, வழக்கில்  ஆஜரானதற்காக, 2 கோடி ரூபாய் கட்டணம் கேட்டும், 'பில்' அனுப்பி உள்ளார்.
அவதுாறாக பேசக்கூடாது : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தொடர்ந்த அவதுாறு வழக்கு, டில்லி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, நீதிபதி கூறியதாவது:வழக்கு தொடர்ந்துள்ள அருண் ஜெட்லியிடம் குறுக்கு விசாரணை நடத்தும் போது, அவதுாறு ஏற்படுத்தும் வகையில் எந்தக் கேள்வியையும் கேட்கக் கூடாது. இவ்வாறு நீதிபதி கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 26.07.2017

Saturday, February 18, 2017

குற்றவாளிகளிடம் அபராதம் வசூலிக்கும் வழி


சொத்துக்குவிப்பு வழக்கில் 4 பேரிடம் ரூ. 130 கோடி அபராதம் வசூலிக்க வழி என்ன?
மதுரை,:சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா உட்பட 4 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள 130 கோடி ரூபாய் அபராதத்தை, தீர்ப்பு வெளியான தேதியிலி ருந்து, 6 ஆண்டுகளுக்குள் வசூலிக்கும் நடவடிக்கையை முடிவுக்குகொண்டுவர, சட்டத்தில் வழிவகை உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, 100 கோடி ரூபாய் அபராதம், அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்தது. 

 உச்சநீதிமன்றம்.அபராதத்தை செலுத்தத்தவறி னால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அபராதம் வசூலிக்கும் நடைமுறைகள் பற்றி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் கூறியதாவது:

குற்றவழக்குகளில் துாக்கு, ஆயுள், கடுங் காவல், மெய்க்காவல்(சாதாரண) சிறை தண்டனை, அபராதம் தண்டனையாக விதிக் கப்படும். கடுங்காவல் தண்டனை என்பது சிறை யில் வேலை பார்க்க வேண்டும்.சாதாரண தண்டனை என்பது சிறையில் வேலை பார்க்கத் தேவையில்லை. இவ்வழக்கில் சாதாரண சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.

குற்றவழக்கை பொறுத்த வரை, 'ஆளுடன் வழக்கு ஆளுடன் முடியும்' என்பது சட்டத்தின் நெறி. 

இதன்படி ஜெயலலிதா இறந்ததால், அவருக்கு எதிரான வழக்கில் அனுபவிக்க வேண்டிய சிறை தண்டனை குறித்த பகுதி,உச்சநீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

சிவில் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் இறந்தால், 30 நாட்களுக்குள் அவரது சட்டப்பூர்வ வாரிசுகள், வழக்கின் ஒரு தரப்பினராக இணைய வேண்டும் அல்லது இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். 

அதுபோல் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டகுற்றவாளி இறந்து போனால்,அதிலிருந்து 30 நாட்களுக்குள் அபராதம் தொடர்பான குறைபாடு பற்றி அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் தங்களை வழக்கின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ள மனு செய்ய வழிவகை உள்ளது. 

ஆனால், இவ்வழக்கில் தீர்ப்புஒத்தி வைக்கப்பட்ட பிறகு தான், முதல் குற்றவாளியான ஜெ.,இறந்தார். சிறை தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும் போது, அபராதத்தை செலுத்தத் தவறும்பட்சத்தில் தண்டனை காலத்தின் நான்கின் ஒரு பங்கு காலத் திற்கு குறையாத ஒரு காலத்தை, தண்டனையாக அனுபவிக்க உத்தரவிடலாம். 

அதன்படி 4 ஆண்டு சிறை தண்டனையின் ஒரு பகுதியான, ஓராண்டு சிறை தண்டனை, இவ் வழக்கில் விதிக்கப்பட்டுள்ளது.தீர்ப்பு வெளியான தேதியிலிருந்து 6 ஆண்டுகளுக் குள், அபராதத்தை வசூலிக்கும் நடவடிக் கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். 

செலுத்த தவறும் பட்சத்தில், வருவாய் வசூல்சட்டப்படி, அபராதத்தை வசூலிக்க சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றமானது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், சம்பந்தப்பட்ட கலெக்டர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியானவர், குற்றவாளியின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் கொண்டுவர வேண்டும். தொகையை வசூலித்து, அரசுகருவூலத்தில் செலுத்த வேண்டும்.

சசிகலா உட்பட 3 பேரின் தண்டனையைப் பொறுத்தவரை, அபராதத்தை செலுத்தாமல், அதற்கு பதிலாக அவர்களுக்கு விதிக்கப் பட்டுள்ள ஓராண்டு சிறை தண்டனையை அவர்கள் அனுபவிக்க விரும்பினால் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்களிப்படுவர். 

அப்படிகூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில், அவர்கள் தண்டனை காலம் முடிந்ததிலிருந்து 6 ஆண்டு களுக்கு பொதுத்தேர்தல்களில் போட்டியிட முடியாது.

ஜெ.,விற்கு விதிக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்க, அவரது பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையாசொத்துக்களை, பறிமுதல் செய்ய, மேற்கண்ட வழிவகையை விசாரணை நீதிமன்றம் பின்பற்றும் என்றார்.

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017 

கூடுதல் காலம் சிறையில் இருந்தால்


கூடுதல் காலம் சிறையில் இருந்தால் 
அபராதம் செலுத்த வேண்டியதில்லையா?

5 ஆண்டு சிறையில் இருந்தாலும் சசிக்கு ரூ.10 கோடி அபராதம் உண்டு
குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப் பட்டு, அபராதம் விதிக்கப்பட்டவர், அபராத தொகையை கண்டிப்பாக செலுத்தியே ஆக வேண்டும்; அபராதம் கட்டாமல், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்து விடலாம் என, தப்பிக்க முடியாது.

நான்கு ஆண்டு
சொத்து குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, தலா நான்கு ஆண்டுகளும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராத தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு, விலக்கி வைக்கப்பட்டது. அதேநேரத்தில், மற்ற மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அதன்படி, நேற்று முன்தினம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா, சுதாகரன், இளவரசி அடைக்கப்பட்டனர். இவர்கள் தரப்பில், அபராத தொகையை செலுத்தியதாக தெரியவில்லை; 

ஆனாலும், தண்டனை காலத்துக்குள், அபராத தொகையை செலுத்தலாம்; இல்லையென்றால், சட்டப்படி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

குற்ற வழக்கில், அபராதம் விதிக்கப்பட்டால், உத்தரவு பிறப்பித்த நீதிமன்றத்தில், அதை செலுத்த வேண்டும். அபராத தொகையை செலுத்தி விட்டு, மேல்முறையீடு செய்யலாம். நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியதற்கான ரசீதையும், மேல் முறையீட்டு மனுவில் இணைக்க வேண்டும். இது ஒரு நடைமுறை.

கூடுதல் காலம் அபராத தொகையின் அளவு அதிகமாக இருந்தால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து,தண்டனையை நிறுத்தி வைக்க கோர முடியும். அதில், அபராதமும் அடங்கும். அதை, உயர் நீதிமன்றம் அனுமதிக்கலாம்.

அபராத தொகையை, தண்டனையை அனுபவிக்கும் காலத்துக்குள் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், நீதிமன்றம் விதித்துள்ள படி, கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். அவ்வாறு கூடுதல் காலம் சிறை தண்டனையை அனுபவித்து விட்டால், அபராதம் செலுத்த தேவையில்லை என்கிற அர்த்தம் அல்ல.

சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தாலும், ஆறு ஆண்டுகள் வரை, அபராத தொகையை வசூலிக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும். 

குற்றவாளி பெயரில் சொத்துக்கள் இருந்தால், அதை முடக்கி வைத்து, கலெக்டர் மூலம், வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். 

அந்த சொத்துக்களை விற்று, நீதிமன்றத்துக்கு அபராத தொகையை, செலுத்தும்படி உத்தரவிட முடியும். அதுவே, ஆறு ஆண்டுகள் கழிந்து விட்டால், அபராத தொகையை வசூலிக்க முடியாது.

இவ்வாறு சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். 

- நமது நிருபர் -

நன்றி : தினமலர் நாளிதழ் - 18.02.2017