disalbe Right click

Showing posts with label அரசு அலுவலர்கள். Show all posts
Showing posts with label அரசு அலுவலர்கள். Show all posts

Friday, August 7, 2020

மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

1. வருவாய் ஆய்வாளர்கள் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடைய பணிகள் மற்றும் பணி அமைப்பினை மேற்பார்வையிடுதல்.

2. வருவாய் வரி வசூல், கடன்கள் வசூல் மற்றும் இதர துறைகளுக்கும் வசூலித்துத்தர தக்க இனங்கள் ஆகியவற்றின் வசூல் பணிகளை ஆய்வு செய்தல்.

3. கிராமக் கணக்குகளை தணிக்கையிடுதல்.

4. “மற்றும்பிமெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான ஆணைகளை பிறப்பித்தல்.

5. புறம்போக்கு இடங்களிலுள்ள மரங்களை தணிக்கை செய்தல் மற்றும் அவற்றில் மகசூலை ஏலம்விட நடவடிக்கை எடுத்தல்.

 6. முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாறிகளின் விவரம் சரிபார்த்தல்.

7. பட்டா பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.

8. பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்

9. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.

10. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல்போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.

11. வரி வசூல்காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.

12. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.

 13 பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கை செய்தல்.

14. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நிலக்குத்தகை நிலமாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தல் மற்றும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தல்.

 15. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.

 16. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவர் என்பதை சரிபார்த்தல்.

 17. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.

 18. பயிர்கள் நிலையை மேல் பயிராய்வு செய்தல்.

 19. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, வரி தள்ளுபடி இனங்கள்

மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.

 20. வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல்.

 21. நகல்கள் கேட்டுவரும் மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.

 22. சாதிச் சான்று வழங்குதல் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தவிர).

 23. நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி ஆணைகள் வெளியிட ஆவன செய்தல்.

24. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் குறித்த ஆணைகள் பிறப்பித்தல்.

25. கால்நடைப் பட்டிகளை பார்வையிடல், மற்றும் அது தொடர்பாக கணக்குகளை சரிபார்த்தல், கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின் நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.

26. மழைமானிகள் தணிக்கையிடுதல்.

27. கிராமக் கல் டெப்போக்கள் மற்றும் நில அளவை கற்களை தணிக்கை செய்தல்.

28. அரசு புறம்போக்கு நிலங்களை தணிக்கையிட்டு ஆட்சேபனையுள்ள ஆக்கிரமணங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.

 29. வருவாய் ஆய்வாளர்களின் தன் பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.

 30. வருவாய் ஆய்வாளரின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.

நன்றி : http://tnroadgl.com

Thursday, November 14, 2019

அரசு ஊழியர் - நீதிமன்றம் அளித்த தண்டணை

அரசு ஊழியர் - தண்டணை - துறைரீதியான நடவடிக்கை - மேல்முறையீடு

வழக்கின் விபரம்:
  • சகாதேவன் என்பவர் ஆயுதப்படை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
  • அவரும் அவரது மனைவியும் சேர்ந்து சட்ட விரோதமாக சீட்டு நடத்தி பொதுமக்களிடம் பணம் பெற்று பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 34 ன் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று சகாதேவனுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.
  • அந்த தண்டனையை எதிர்த்து சகாதேவன் ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.
  • கூடவே தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்தார்.
  • அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
  • மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.
துறை ரீதியான நடவடிக்கை:
  • இந்நிலையில் காவல்துறை இணை ஆணையர் சகாதேவனை பணியிலிருந்து நீக்கி 31.10.2010 ஆம் தேதி உத்தரவிட்டார்.
துறை ரீதியான நடவடிக்கையை எதிர்த்து ரிட் மனு:
  • அதனை எதிர்த்து சகாதேவன் ஒரு ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
  • அதில் தனது மனைவிதான் சீட்டு நடத்தியதாகவும், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சட்ட விரோதமாக தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாகவும், மேல்முறையீடு நிலுவையில் இருப்பதால் இணை ஆணையர் தன்னை நீக்கி உத்தரவு பிறப்பித்திருப்பது தவறு என்றும் கூறியிருந்தார்.
வழக்கை நீதிபதி S. N. சுப்பிரமணியன் அவர்கள் விசாரித்தார்.
  • அரசு ஊழியர் ஒருவருக்கு குற்ற வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால், விதிகளின்படி அவரிடம் விளக்கம் கேட்டு ஓர் அறிவிப்பினை அனுப்பி அவரை பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
  • ஆனால் இந்த வழக்கில் சகாதேவனுக்கு குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
  • அதனடிப்படையில் அவர்மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓர் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் முன்.........
  • ஓர் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் அதிகாரம் கொண்ட நபர் ஒரு குற்ற வழக்கில் தண்டனை பெற்றுள்ள அரசு ஊழியருக்கு விளக்கம் கேட்டு ஓர் அறிவிப்பினை அனுப்பி, அந்த அரசு ஊழியரால் அளிக்கப்படும் விளக்கத்தை பெற வேண்டும்.
  • அந்த விளக்கம் மனநிறைவு அளிக்கக்கூடிய வகையில் இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
  • இல்லாவிட்டால் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிமை இல்லை!
  • சகாதேவனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
  • அதன் காரணமாக இணை ஆணையர் துறை ரீதியிலான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
  • சகாதேவனை நீக்கும் முன் அவருக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளார்.
  • இணை ஆணையர் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்.
  • மேல்முறையீடு நிலுவையில் உள்ளதால், துறை ரீதியிலான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோர சகாதேவனுக்கு எந்த உரிமையும் இல்லை.
  • துறை ரீதியிலான நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு சகாதேவன் கோரலாம்.
  • ஆனாலும் அதில்கூட விதிகளுக்குட்பட்டே இணை ஆணையர் செயல்பட முடியும்.
  • ஒரு குற்ற வழக்கிலிருந்து அரசு ஊழியர் விடுவிக்கப்பட்டார் என்ற காரணத்திற்காக, துறை ரீதியிலான நடவடிக்கையை மேற்கொள்ளகூடாது என்று அர்த்தமில்லை.
  • துறை ரீதியிலான நடவடிக்கைக்கும், குற்றவியல் நடவடிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது.
  • தண்டணை பெற்ற அரசு ஊழியரை பணியாற்ற அனுமதிக்கக் கூடாது.
  • எந்தவொரு அரசு ஊழியரும் தண்டனை பெற்றால் அவரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்ககூடாது.
  • ஒருவேளை மேல்முறையீட்டில் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை ஆனால் சம்மந்தப்பட்ட அரசு ஊழியர் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு கோரலாம்.
இந்த வழக்கில் சகாதேவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சட்டத்திற்குட்பட்டே உள்ளது. அதனால் இந்த மனுவை ஏற்க முடியாது என்று கூறி ரிட் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
W. P. NO - 33189/2018, Date : 02.04.2019
P. சகாதேவன் Vs இணை ஆணையர், போக்குவரத்து காவல்துறை, தெற்கு, சென்னை
2019-1-TLNJ-CRL-363

https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/455787

நன்றி: எனது முகநூல் நண்பரும், வழக்கறிஞருமான திரு ‎Dhanesh Balamurugan



Saturday, September 14, 2019

குற்றம் சாட்டப்பட்டவருக்கே புகாரை அனுப்பும் அதிகாரிகள்

குற்றம் சாட்டப்பட்டவருக்கே புகாரை அனுப்பும் அதிகாரிகள்
புகார்தாரரை திசை மாற்றிய அதிகாரி
கடந்த மாதம் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று எங்களது சங்கத்தின் மோசடியான நிதிநிலை அறிக்கையை கோர்வை செய்த வகையில் ஊழல் செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் மீது புகார் அளித்தேன். என்னிடமிருந்த ஆவணங்களை வாங்கி பார்த்த அங்கிருந்த அலுவலர், நீங்கள் நேரடியாக, சென்னையிலுள்ள எங்களது துறையின் இயக்குநர் அவர்களுக்கு இதனை தபாலில் அனுப்பி வையுங்கள். அருமையான கேஸ் இது. உடனடியாக எங்களுக்கு அங்கிருந்து உத்தரவு வரும். நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். நானும் சரி என்று அங்கிருந்து வந்துவிட்டேன்.
சிஸ்டம் சரியில்லை!
இது ஒரு வகையில் குற்றம் செய்த அரசு அதிகாரியை காப்பாற்ற, லஞ்ச ஒழிப்புத் துறை எடுக்கின்ற முதல் முயற்சியாகும்.  இப்படி தட்டிக் கழிக்கும்போது சில மனுதாரர்கள் அடுத்த முயற்சி எடுக்க முடியாமல் போகலாம்; அல்லது அவர்கள் வேகம் தணியலாம்; அல்லது தவறு செய்த அதிகாரிகளை அதற்குள் எச்சரிக்கைப்படுத்தி விடலாம். வேலை செய்தாலும், வேலை செய்யவில்லை என்றாலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்களுக்கு ஊதியம் மாதாமாதம் போய்ச் சேர்ந்துவிடும். பிறகு ஏன் அவர்கள் வருகின்ற புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? நமது நாட்டு காவல்துறையிலும் இதே கதைதான். காரணம் சிஸ்டம் சரியில்லை!
தள்ளிப்போடுவதால் ஒரு காரியம் என்ன ஆகும் - ராஜா காலத்துக் கதை!
ஒரு நாட்டில் ஒருவன் மிகப்பெரிய குற்றம் ஒன்றை செய்துவிட்டான்,  அரசன் அவனுக்கு தூக்கு தண்டணை விதித்தான். தூக்கு மேடைக்கு அவனை கொண்டு செல்லும் முன், அரசன் அவனிடம், உனது கடைசி ஆசை என்ன? என்று கேட்டான். அதற்கு அவன், ”என்னிடம் அதிசயமான திறமை இருக்கிறது”; யாருக்கும் அதனை சொல்லித்தராமல் சாகப்போகிறோமே! என்று வருந்துகிறேன். அதனை யாருக்காவது சொல்லிக் கொடுத்துவிட்டால் நான் நிம்மதியாக சாவேன் ! என்றான். அரசன் அது என்ன திறமை என்றான். ஒரு சாதாரண குதிரையை பறக்கும் குதிரையாக மாற்றும் திறமை என்னிடம் இருக்கிறது என்றான் கைதி. அப்படியா? என்று வியந்த அரசன், அதற்கு எவ்வளவு நாளாகும்? என்றான். ஒரு வருட காலமாகும் என்றான் கைதி. தூக்குத் தண்டணையை நிறுத்திய மன்னன், கைதிக்கு ஒரு குதிரையையும் அதனை வளர்க்க வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்து துணைக்கு ஒரு ஆளையும் ஏற்பாடு செய்து கொடுத்து, இன்றிலிருந்து ஒரு வருடகாலம் உனக்கு அவகாசம் தருகிறேன். குதிரை பறக்கவில்லை என்றால் எனது தலை கொய்யப்படும் என்று கூறினான். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான் கைதி. ஒரு மாத காலம் போயிற்று. அவனை பார்க்க வந்த நண்பன், உனக்கு என்ன பைத்தியம்  பிடித்திருக்கிறதா? குதிரை எப்படி பறக்கும்? என்றான். அது எனக்கும் தெரியும். தண்டணையை ஒத்தி வைத்திருக்கிறேன். அந்த பொய்யை கூறாவிட்டால் இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருக்க நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்றான் கைதி. அது சரி எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் நீ கொல்லப்பட்டுவிடுவாயே! என்றான் நண்பன். அதற்கு கைதி, இந்த ஒரு வருடத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். நானே நோய்வாய்பட்டு இறந்து போகலாம். அல்லது தண்டணையளித்த மன்னன் இறந்து போகலாம். வேற்று நாட்டு அரசன் படையெடுத்து வந்து இந்த அரசை அழித்துவிடலாம். ஒருவேளை குதிரை பறந்தாலும் ஆச்சர்யமில்லை என்றான். இதைப் போலத்தான் நமது நாட்டில் துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை தள்ளிப் போடுகிறார்கள். அயோக்கியன் யோக்கினாகிறான். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை வழங்கப்பட்ட தலைவர்களுக்குக் கூட அரசு செலவில் மரியாதை செய்யப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு அனுப்பிய புகார்
கடந்த 16.09.2019 அன்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்திற்கு எனது புகாரை உரிய ஆதாரங்களுடன் அனுப்பி வைத்திருந்தேன். அதில்  மோசடியான நிதிநிலை அறிக்கையை கோர்வை செய்து ஊழல் செய்த விருதுநகர் மாவட்டப் பதிவாளர் மற்றும் அவர்மீது ஆதாரத்துடன் புகார்கள் அளித்தும் துறை ரீதியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பதிவுத்துறைத்துணைத்தலைவர்,  பதிவுத்துறைத்தலைவர்  ஆகியோர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டி அதற்குரிய ஆவண நகல்களை இணைத்திருந்தேன். அதனை பெற்றுக் கொண்ட  லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர்  அவர்கள் எனக்கு உடனடியாக பதில் அனுப்பி இருந்தார்கள். அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கடிதத்தில் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பதிவுத்துறைத் தலைவர், சென்னை அவர்களுக்கு எனது புகார்மனு அனுப்பப்படிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
எந்த நாட்டிலும் இல்லாத நடவடிக்கை இது!
உங்கள் புகாரில் முகாந்திரம் இல்லை, அதனால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர்   கூறியிருக்கலாம். அல்லது இந்த புகாரில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு இருக்கலாம். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்ட புகாரை, அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கே அனுப்பி சட்டப்படி தேவையான நடவடிக்கையை  லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரே எடுக்கச் சொல்வது, நம் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் காணமுடியாத கீழ்தரமான நடவடிக்கை ஆகும்.  
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம்
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரே சொல்லிவிட்டார் என்று என்னால் ஏதும் செய்யாமலிருக்க முடியவில்லை. எடுத்தேன் பேனாவை. தொடுத்தேன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கணைகளை. அதனை கீழே காணலாம்.




தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.
*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 14.09.2019