disalbe Right click

Showing posts with label அரசுத் துறைகள். Show all posts
Showing posts with label அரசுத் துறைகள். Show all posts

Tuesday, March 17, 2020

அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புகின்ற கடிதம்

அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புகின்ற கடிதம்
விருதுநகர் மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள், எனது 30.06.2018 புகார்மனு ஒன்றின் மீது விசாரணை நடத்தி 01.11.2018 அன்று எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பாமலேயே,  அனுப்பியதாக ஒரு பொய்யான ஆதாரத்தை ஏற்படுத்தி, என்னிடம் இருந்து பதில் ஏதும் வராத காரணத்தினால்  எங்களது சங்க நிர்வாகிகளுக்கு சாதகமாக உள்நோக்கத்தோடு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வழங்கி எனது மனுவை முடித்து வைத்துள்ளார். எனக்கு இது கடந்த மாதம் வரை தெரியாது.
அந்த கடிதத்தில் இருந்த சங்கதி என்ன?
மேற்கண்ட 01.11.2018 கடிதத்தில் சங்கநிர்வாகிகளின் மீது நான் தொடுத்த வழக்கு, அவர்கள் அளித்த வாக்குமூலம், நடுவர் அளித்த தீர்ப்பு மற்றும் நான் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு ஆகியவற்றின் நகல்களை தன்னிடம் அளித்தால் அது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனக்கு மாவட்ட பதிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் எனக்கு அப்போதே கிடைத்திருந்தால், விசாரணையின் முடிவானது சங்க நிர்வாகிகளுக்கு எதிராக மாவட்டப்பதிவாளர் அவர்களால் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
எனக்கு இந்த வருடம் கிடைத்த அந்த கடித நகல்
கடந்த 2019ம் வருடத்தில் பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் அளித்த புகார் மனு குறித்து விசாரணை செய்ய மதுரை -  பதிவுத்துறை துணைத் தலைவர் அவர்கள் பணிக்கப்பட்டிருந்தார். அவரிடம் நான் கேட்ட ஆவணங்களோடு அவரையும் அறியாமல் மேற்கண்ட 01.11.2018  கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
அந்தக் கடிதத்தை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். 2018ம் ஆண்டிலேயே இந்த கடிதம் கிடைத்திருந்தால் என்னிடம் உள்ள வழக்கு ஆவண நகல்களை நான் அளித்திருப்பேன். போலி ஆவணம் தயாரிக்கப்பட்ட குற்றத்தை மாவட்ட பதிவாளரிடம் சங்கநிர்வாகிகள் ஒத்துக் கொண்டு போயிருப்பார்கள். அந்த பிரச்சனையில் ஒரு முடிவு அப்போதே வந்திருக்கும். நமக்கு தெரியாமலேயே கடிதம் வந்துவிட்டு திரும்பி இருக்குமோ? அல்லது நமது பெயரில் வேறு யாருக்காவது அஞ்சல் செய்திருப்பார்களோ? என்று எனது எண்ணம் அலைபாய்ந்தது.
கை கொடுத்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்
மதுரை -  பதிவுத்துறை துணைத் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி தகவல்களை பெற்றுத்தர வேண்டினேன். அவரும் துறைமாற்றம் செய்தார். பதிவாளர் சாதாரண தபாலில் அனுப்பியதாக தகவல் தந்ததோடு மட்டுமல்லாமல் அந்த கடிதத்தின் நகல் ஒன்றையும் சேர்த்து மாவட்டப் பதிவாளர் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதம் தங்கள் பார்வைக்காக கீழே உள்ளது.


குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது
மாவட்டப் பதிவாளர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனது கைகளுக்கு அந்த கடிதம் கிடைக்கக்கூடாது என்பதற்காக அந்த கடிதம் சாதாரண தபாலில் அனுப்பப்பட்டதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர் செய்தது எந்த சட்டத்தின் கீழ் அது குற்றம்? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  பொதுவாக அவர் செய்தது குற்றம்! என்று சொல்வதைவிட,  அவர் செய்தது இந்த சட்டத்தின் கீழ் இன்ன பிரிவின் கீழ் குற்றம் என்று சொல்வதை விரும்புபவன் நான். அதனால், எனது தேடலை ஆரம்பித்தேன். 
கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்: தேடுங்கள் கிடைக்கும்!
நண்பர்கள் சிலரிடம் விபரம் கேட்டேன். அவர்களும் அதை குற்றம் என்ற்ய் சொன்னார்களே தவிர,. எந்த சட்டத்தின்படி அது குற்றம் என்பது அவர்களுக்கும் குறிப்பாகத் தெரியவில்லை. இணையத்தில் இரண்டு மணி நேரம் தேடினேன். ஒரு வழியாக விபரம் எனக்கு கிடைத்தது. பெரியவர்கள் சொல்லி வைத்த வாசகங்கள் பொய்யில்லை.
அரசு அலுவலக நடைமுறை நூல்
அரசு அலுவலக நடைமுறை நூலில் இதற்கான விடை எனக்கு கிடைத்தது. அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படுகின்ற முக்கியமான கடிதங்கள், ”பத்தி 159ன்படி”  பதிவு அஞ்சலில்தான் அனுப்பப்பட வேண்டும்! என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை
மாவட்ட பதிவாளரது மேற்கண்டதிட்டமிட்ட மோசடி செயல் குறித்து எனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க ஆயுத்தமானேன்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 17.03.2020  

Thursday, February 27, 2020

கிராம வரைபடம் வேண்டி - அனுபவம்

சென்னை நில அளவைத்துறை அலுவலகத்தில் கிராம வரைபடம் வேண்டி
இன்று நம்மிடையே அதிகம் நடந்து கொண்டிருக்கும் குற்றத்தில் முக்கியமானது ஆக்கிரமிப்பு ஆகும். முதலாவது காரணம் நமது கவனக்குறைவு; இரண்டாவது காரணம் ஆவணத்தை சரியாக பராமரிக்காதது ஆகும். கவனக்குறைவு இருக்கும்போது நமது நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர்.  அதுபற்றி உரிய அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் என்றால் அதற்குரிய முக்கிய ஆவணமாகிய  வரைபடம் நம்மிடம் இருக்காது.  
வரைபடம் நம்மிடத்தில் இருந்தாலும்....
அப்படி நாம் ஆவணத்தை பத்திரமாக வைத்து இருந்தாலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேவையான பணத்தை கொடுத்து அந்த வரைபடத்தையே மாற்றிவிடுகின்றனர். இது போன்ற குற்றத்தை செய்கின்ற அரசு அலுவலர்கள்  மிக தைரியமாக இதனை செய்கிறார்கள். காரணம் என்னவென்றால், கை நிறைய பணம் கிடைக்கிறது; ஒரு வேளை அவர்கள் மாட்டிக் கொண்டாலும், வழக்கு முடிவதற்குள் அவர்கள் ஆயுள் முடிவடைந்துவிடுகிறது. அவர்கள் காலத்தின் உபயத்தால் நிரபராதி ஆக்கப்பட்டு விடுகின்றனர். 
நான் கையாண்ட புகாரில் ......
எங்களது ஊரில் இது போன்ற சம்பவம் நடந்தது.  வரைபடத்தை மாற்றிவிட்டார்கள்.  அருகிலிருந்த இடத்து சொந்தக்காரர் புதிய வரைபடத்தின்படி (நான்குமால்) கல்லும் ஊன்றிக் கொண்டார். இவர்களது இடத்தில் அரை ஏக்கரை காணோம்.  நிலத்தின் உரிமையாளர்கள் பல முயற்சிகள் எடுத்தனர். ஒன்றும் நடக்கவில்லை. கடைசியாக என்னிடத்தில் வந்தனர். செய்யவேண்டிய வேலைகளைச் செய்தேன். எப்படியோ தவறு நடந்துவிட்டது. நான் பழைய அளவுகளின்படி வரைபடத்தை மாற்றிக் கொடுக்கிறேன் என்று வட்டாட்சியர் கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நான் கூறினேன். நிலத்து உரிமையாளர்களுக்கு அதில் ஏனோ விருப்பமில்லை.  வரைபடம் மீண்டும் பழைய அளவுகளின்படி திருத்தி வழங்கப்பட்டது. எனக்கு கணிசமான ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கினார்கள். அவர்கள் வட்டாட்சியருக்கு நன்றி செலுத்தினர். வட்டாட்சியர் எனக்கு நன்றி செலுத்தினார். 
சரி, விஷயத்திற்கு வருவோம்!
நமது நிலத்தை ஆக்கிரமித்தால், நம்மிடம் உள்ள பத்திரத்தின் மூலம், எப்.எம்.பி. எனப்படும் வரைபடம் மூலம் நாம் ஆட்சேபிக்கலாம். அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் என்ன செய்வது? ஒவ்வொரு கிராமத்திற்கான வரைபடங்களை அரசு ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கின்ற நில அளவைத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி வாங்கலாம். கிராம வரைபடங்கள் இங்கு கிடைக்கும் என்று எழுதியெல்லாம் போடப்பட்டிருக்கும். ஆனால், நீங்கள் போய் கேட்டால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். அல்லது அது வேண்டும், இது வேண்டும், அடுத்த வாரம் வாருங்கள் என்று உங்களை அலைய வைப்பார்கள். எனக்கும் அதே பதில்கள்தான் கிடைத்தது. ஆனால், சென்னையிலுள்ள நில அளவைத்துறை அலுவலகத்தில் நமது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம வரைபடங்களும் கிடைக்கிறது. அதனை பெற்று ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ளலாம்.
அந்த அலுவலத்தைப் பற்றி ......
அந்த அலுவலகத்தின் பெயர் நில அளவை மற்றும் நிலவரி விதிப்பு ஆணையகம் ஆகும். இது சென்னையில் சேப்பாக்கத்தில் இருக்கிறது. பஸ்ஸில் செல்வதாக இருந்தால், சென்னை கடற்கரையில்  கண்ணகி சிலை அருகே இறங்கி (மேற்கில்) எதிர்புறம் செல்ல வேண்டும். கடற்கரை கிழக்கில் இருக்கிறது. அதற்கு எதிர்புறம் உள்ள சாலையில் செல்ல வேண்டும். டிரெயின் மூலம் செல்வதாக இருந்தால், கடற்கரை ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி செல்கின்ற (பறக்கும்) ரயிலில் ஏறிக்கொண்டு சேப்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஸ்டேஷன் அருகில் இந்த அலுவலகம் உள்ளது. மேலும், பசுமை தீர்ப்பாயம், மாநில மகளிர் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகங்களும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது.
படங்கள் எங்கு கிடைக்கும்?
இந்த அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஒரு அறையில், காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை படங்களை விற்பனை செய்கிறார்கள். ஒரு படத்தின் அகலம் 24 அங்குலம், உயரம் 36 அங்குலம் இருக்கிறது. அங்குள்ள அலுவலரிடம் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
படத்தை பெற விண்ணப்பிக்க வேண்டுமா?
இதற்கென்று நீங்கள் எந்தவித விண்ணப்பமும் எழுத வேண்டியதில்லை. ஒரு சிறிய பேப்பரில் நீங்கள் வேண்டுகின்ற வரைபட கிராமத்தின் பெயர், அதன் தாலுகா, அதன் மாவட்டம் ஆகியவற்றை சிறு குறிப்பாக எழுதி அந்த அலுவலரிடம் கொடுத்தால் போதும். அதை வைத்துக் கொண்டு அவரிடமுள்ள ஒரு பதிவேட்டில் அந்த கிராமமானது எத்தனை வரை படங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு ஒரு படத்திற்கு ரூ.85/- வீதம் பெற்றுக் கொண்டு அதற்கு ரசீதும் தருகிறார்.  பின்பு சில மணி நேரங்கள் கழித்துதான் படத்தை வழங்குகிறார். குறைந்தது இரண்டு படங்களாக வரையப்பட்டுள்ளது. 
ஒரு அலுவலர்தான் அங்கு இருக்கிறார். ஆர்டர் பெறுவது, அதற்கான கட்டணம் பெறுவது, ரசீது தருவது மற்றும் அங்கு  வேறு இடத்திலுள்ள ஜெராஜ்ஸ் மெஷினில் நகல்கள் எடுத்து வருவது என்று பல வேலைகளை அவர் ஒருவரே பார்ப்பதால் கால தாமதமாகிறது
நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம்
நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத்திட்டம் (Updating Registry Scheme - UDR)  எனப்படுகின்ற நிலங்கள் கணக்கெடுப்புத்திட்டம் 01.06.1979 முதல் 30.04.1987 வரை நடைபெற்றது. அதற்குப் பிறகு உள்ள படங்களை மட்டுமே இவரிடமிருந்து நேரடியாக நாம் உடனே பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு முந்திய படங்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?
அந்த ஆணையத்தின் முகப்பில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக முதல் தளத்திற்கு சென்று அங்குள்ள மத்திய நில அளவைத் துறையின் பொது தகவல் அலுவலர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)ன் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இதனை நீங்கள் நேரில் வந்துதான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் அதற்குரிய பணத்தை கட்டச்சொல்லி 15 நாட்களுக்குப் பிறகு தபால் அனுப்புவார்கள். நாம்  அவர்கள் கூறுகின்ற வழிமுறைகளின்படி பணத்தை கட்டி அதன் ஒரிஜினல் ரசீதை அனுப்பினால், நமது முகவரிக்கு அவர்கள் அந்த படங்களை அனுப்பி வைப்பார்கள். நேர்ல் சென்று விண்ணப்பம் அளித்தாலும், 15 நாட்களுக்குப் பிறகே படத்தை வழங்க முடியும் என்று சொல்கிறார்கள். 
தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)ன் 
கீழ் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
பொது தகவல் அலுவலர்
மத்திய நில அளவைத்துறை அலுவலகம்
சேப்பாக்கம்,
சென்னை - 600 005

நான் 27.02.2020 அன்று விண்ணப்பித்ததற்கு 12.03.2020 அன்று கிடைத்த பதில் கீழே.


************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.12.2020  

Wednesday, February 12, 2020

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?

உங்கள் கிராமத்தின் வரைபடம் வேண்டுமா?
சட்ட போராளிகளிடம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆயுதம்....
சென்னை மாநகரில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை அல்லது நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம்  அமைந்து  உள்ளது.  இந்தத் துறையானது  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கிராமங்களின் வரைபடங்கள்
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்குரிய கிராம வரைபடம் இங்கு விலைக்கு  கிடைக்கிறது. உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வரைபடங்களை உங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வாங்கலாம்! என்றாலும். அங்கு கிடைக்காத வரைபடங்கள்  இங்கு கட்டாயம் கிடைக்கும்.
இந்த கிராம வரைபடங்கள் சுமார் 1970 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை ரீசர்வே செய்யப்பட்ட வரைபடங்களாகும். எனவே முழு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும்.

இந்த வரைபடத்தின் மூலமாக,  நமது தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான  குளம்குட்டைகால்வாய்ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகள்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாம் எளிதாக  கண்டறியலாம். 
மேலும், இந்த கிராம வரைபடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் மற்றும்   அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விஸ்தீரனத்தையும் தற்போது ( நடப்பு ஆண்டில் ) உள்ளபதிவேடுகளில் உள்ள விஸ்தீரனத்தையும் ஒப்பிட்டு, எங்கெங்கு என்னென்ன ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக கண்டறிய முடியும்.
உங்களால் நேரில் சென்று வாங்க முடிந்தால், தேவைப்பட்ட வரைபடத்தை அரைமணி நேரத்திற்குள் வாங்கிவிட முடியும். 
நேரடியாக சென்று அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுச்செய்து மட்டுமே வரைபடங்களை வாங்க முடியும்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 12.02.2020 

Friday, December 6, 2019

தமிழ்நாடு அரசு - சமூக நலத்துறை


தமிழ்நாடு அரசு - சமூக நலத்துறை
சமுக நலத்துறை பின்வரும் திட்டங்களை செயல்படுத்திவருகிறது:
  • மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்
  • .வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்
  • அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்
  • டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்
  • டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம்
  • முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்
  • சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம்
1. மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்:
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பத்தாம் வகுப்பு இறுதி தோ்வு எழுதியிருக்க வேண்டும்.
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பட்டப் படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பயனாளி : மணமகளின் பெற்றோர்
தகுதிகள் :
18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
2. .வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்:
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பழத்திருந்தால் போதுமானது.
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளி: விதவை தாயார்
தகுதிகள் :
18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
3. அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம் :
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது.
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயனாளி : தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்.
தகுதிகள் :
18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்குள் இருத்தல் வேண்டும்
திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னா் விண்ணபிக்க வேண்டும்.
தாய், தந்தை இறப்பு சான்று சமா்பிக்க வேண்டும்.
4. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் :
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது 
(ரூ. 15,000/- காசோலை & ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
(ரூ. 20,000/- காசோலை & ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
பயனாளி : கலப்புத் திருமண தம்பதியா்.
தகுதிகள் :
18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.
திருமண வகை கீழ்கண்டவாறு இருத்தல் வேண்டும் FC- BC,SC/ST- BC, SC/ST-FC
குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.
திருமண நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மனு செய்ய வேண்டும்.
வயது வரம்பு இல்லை.
5. டாக்டா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம் :
பயன் மதிப்பு :
ரூ. 25,000/- + 8 கிராம் தங்கம்
மணமகள் பத்தாம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது
(ரூ. 15,000/- காசோலை, ரூ. 10,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
ரூ. 50,000/- + 8 கிராம் தங்கம் 
மணமகள் பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் 
(ரூ. 20,000/- காசோலை, ரூ. 30,000/- தேசிய சேமிப்பு பத்திரம்)
பயனாளி : விதவை மறுமண தம்பதியா்
தகுதிகள் :
குறைந்தபட்ச வயது 20 ஆக இருத்தல் வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் வரம்பு இல்லை.
திருமணம் முடிந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விதவைச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.
6. முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம் :
பயன் மதிப்பு :
திட்டம் I : ரூ. 50,000/-
திட்டம் II : ரூ. 25,000/- (01.08.2011 அன்றோ அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு)
தகுதிகள் :
திட்டம் I :
குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
திட்டம் II :
குடும்பத்தில் இரு பெண் குழந்தை மட்டும் இருந்து, குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்குள் இருத்தல் வேண்டும்.
பொது :
ஆண்/பெண் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
2வது குழந்தை பிறந்த 3 வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
7. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் :
பயன் மதிப்பு : தையல் இயந்திரம்.
பயனாளி : விதவை/கணவரால் கைவிடப்பட்டோர் நலிவுற்ற ஏழைப்பெண்/மாற்றுதிறனாளி ஆண்/பெண்
தகுதிகள் :
20 வயதிலிருந்து 40க்குள் இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 24,000/-க்குள் இருக்க வேண்டும்.
தையல் தொிந்திருக்க வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவருக்கு உதவி வழங்குதல்
அடையாள அட்டை
சுய தொழில் செய்ய பயிற்சி
40 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கு ஓய்வூதியம்
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2017
நேரடியாகவோ, தீா்ப்பாயத்தின் மூலமாகவோ பெறப்படும் பாதிக்கப்பட்டோாின் மனுக்கள் சமரச அலுவலா் (மாவட்ட சமூகநல அலுவலா்) விசாரணை செய்து தீா்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பார்
தன்னை பராமரித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாத பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு கோட்டாட்சியா் தலைமையிலும் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையிலும் மேல்முறையீட்டு தீா்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006
18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிரைவடையாத ஆணும் செய்யும் திருமணமே குழந்தை திருமணம் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய திருமணம் செய்யும் பெற்றோர்களும், உறவினா்களும், உடந்தையாக இருப்பவா்களும் தண்டனைக்கு உரியவா்கள்.
காவல் துறை
மாவட்ட சமூகநல அலுவலா்
நீதித் துறை
வட்டாட்சியா்
குழந்தைகள் நலம் குழுமம்
பஞ்சாயத்து கண்காணிப்பு குழு உறுப்பினா்கள் (ஊராட்சி தலைவா், சமூக நல விரிவாக்க அலுவலா், கிராம உதவிக் குழு செயலா், பள்ளித் தலைமையாசிாியா், பெண் வாா்டு உறுப்பினா், கிராம நிர்வாக அலுவலா்)
குழந்தைகளுக்காக 24×7 செயல்படும் அவசர உதவி எண்1098
அரசு சேவை இல்லம் மேல்நிலைப் பள்ளி
சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளியில் மாணவிகள் சோ்த்து கொள்வதற்க்கு
தகுதிகள் :
14 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்
விதவை மகள்
ஆதரவற்ற பெண்கள்
இல்லத்திலேயே தங்கி கல்வி பயில வேண்டும்.
a) மேல் நிலை படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் தொடா்ந்து பயில ஆண்டிற்கு ரூ. 33,000/- வழங்கப்படுகிறது.
b) தொடா்ந்து சேவை இல்லத்திலேயே தங்கி ஆசிரியா் பயிற்சி, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் வசதி.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005.
உடல் ரீதியான
பாலியல் ரீதியான
பொருளாதார
வார்த்தை மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
பெண்கள் தன்னுடைய கணவனாலோ அல்லது கணவரின் உறவினா்களாலோ ஏற்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக தீா்வு மற்றும் நிவாரணம் கிடைக்க இச்சட்டம் வகை செய்கிறது.
வரதட்சனைத் தடுப்புச் சட்டம் 1961 :
திருமணத்திற்கு முன்போ () பின்போ திருமணத்திற்கென்று பெண் வீட்டாரிடமிருந்து நேரடியாகவோ () மறைமுகமாகவோ நிதி மற்றும் பொருள் கொடுப்பதோ () கொடுப்பதாகச் சம்மதிப்பதோ வரதட்சனை ஆகும்.
மணமகள்/மணமகனின் பெற்றோர்/உறவினா்கள் வரதட்சனை கேட்டு நேரடியாகவோ () மறைமுகமாகவோ வற்புறுத்துவார்களேயானால் அவா்களுக்கு 6 மாதத்திற்கு குறையாமலும் 2 வருடம் வரை நீட்டித்து சிறை தண்டனையும் ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்படும்.
வரதட்சனை தடுப்புச் சட்டம் பிாிவு 8 B ன் படி அரசு வரதட்சனை தடுப்பு அலுவலா்களை நியமிக்கலாம் என்பதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலா்களை வரதட்சனைத் தடுப்பு அலுவலா்களாக அரசு நியமித்துள்ளது.

இணையதளத்திலிருந்து திரட்டியவை : அன்புடன் செல்வம் பழனிச்சாமி , 07.12.2019