பிளஸ் 1, பிளஸ் 2 சேர்க்கையில் பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் பின்பற்ற இயக்குநர் உத்தரவு
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் பாடப்பிரிவு வாரியாக இட ஒதுக்கீடு பின்பற் றப்பட வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு விதிகள் பாடப்பிரிவுகள் வாரியாக (குரூப் வாரியாக) கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் மேல்நிலைப் பள்ளிகள் அங்கீகாரம் வழங்கும் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இட ஒதுக் கீடு தொடர்பான சட்டங்களின்படி, 2017-18-ம் கல்வி ஆண்டிலும் மேல்நிலைக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் மாநில அரசின் அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் (சிறுபான்மை பள்ளிகள் தவிர) பின்வரும் விகிதத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்.
பொதுப் பிரிவினர் (ஓசி) - 31 சதவீதம்
பழங்குடியினர் (எஸ்டி) - 1 சதவீதம்
ஆதி திராவிடர் (எஸ்சி) - 18 சதவீதம் (இதில் 3 சதவீதம் அருந்ததியினருக்கு)
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (எம்பிசி, டிஎன்சி) - 20 சதவீதம்பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் - 3.5 சதவீதம்
பிற்படுத்தப்பட்டோர் (பிசி) - 26.5 சதவீதம்
மேற்கண்ட இட ஒதுக்கீடு முறையில், முதலில் பொதுப் பிரிவினருக்கான 31 சதவீத இடத் துக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படை யில் மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இந்த பட்டியலை ஓசி, பிசி, எம்பிசி என எந்தவித பாகுபாடும் இல்லாமல் தயாரித்து அதன் பின்னர் அந்தந்த பிரிவினருக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.
மாநிலத்தின் அதிகார வரம்புக்குள் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் (சிறுபான்மை கல்வி நிலையங்கள் நீங்கலாக) பாடப்பிரிவு வாரியாக (Group-wise) இட ஒதுக் கீடு முறை பின்பற்றப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 04.05.2017