ப்ரோபேட் என்றால்
என்ன?
உயில் எழுதியவர்
இறந்துவிட்டார்; அந்த உயில் மூலம் உங்களுக்கும், வேறு சிலருக்கும் சில சொத்துக்கள்
சொந்தமாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட சொத்தானது சென்னை, கோவை,
திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் இருந்தால், அந்த சொத்தை வேறு ஒருவருக்கு
நீங்கள் உடனே நேரடியாக விற்க முடியாது. அப்படி வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் அந்த (அசல்) உயிலையும், வாரிசு சான்றிதழையும், உங்கள் அடையாள அட்டையையும் நீதிமன்றத்தில்
சமர்ப்பித்து தங்கள் பெயருக்கு அந்த சொத்துக்களை மாற்ற உத்தரவிட விண்ணப்பிக்க வேண்டும்.
நீதிமன்றம் என்ன செய்யும்?
நீதிமன்றம் அந்த உயிலை ஆராய்ந்து,
➽ உண்மையிலேயே இந்த
உயில் இறந்தவரால் எழுதப்பட்டதுதானா?
➽ இறந்தவரால் கடைசியாக இந்த உயில் எழுதப்பட்டதுதானா?
➽ இறந்தவர், யாரும் வற்புறுத்தாமல் தனது சுயநினைவுடன்தான் அந்த உயிலை
எழுதினாரா?
➽ இறந்தவருக்கு அந்த சொத்து சொந்தமானதுதானா? எப்படிச் சொந்தமானது?
➽ உயிலை சமர்ப்பித்துள்ளவர்கள், உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்தானா?
என்ற விஷயங்களில்
திருப்தியடைந்த பின்னர், அந்த உயிலின்படி யார் யாருக்கு எந்தெந்த சொத்து சொந்தமானது! என்று ஒரு அறிக்கையை வழங்கும். அந்த அறிக்கைக்கு பெயர்தான் ப்ரோபேட் என்பதாகும். அந்த
ப்ரோபேட்டை வைத்துக் கொண்டுதான் உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள்
தங்களது பெயருக்கு பதிவு அலுவலகத்தில் தனித்தனியாக விண்ணப்பித்து மாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்திய வாரிசுச்சட்டம், பிரிவு 57ன்படி உயில் அவசியம் ப்ரோபேட் செய்ய வேண்டும்.
இந்திய வாரிசுச்சட்டம், பிரிவு 57ன்படி உயில் அவசியம் ப்ரோபேட் செய்ய வேண்டும்.
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட
பகுதிகளில் சொத்துக்கள் இல்லையென்றால், உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்துக்களை சம்பந்தப்பட்டவர்கள் உயிலின் அசல், வாரிசு சான்றிதழ் நகல் மற்றும் தங்களின் அடையாள (ஆதார்) அட்டை நகல் இணைத்து நேரடியாக பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து தங்களது பெயருக்கு, மாற்றிக் கொள்ளலாம்.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 27.03.2019