நீதிமன்றம் செல்பவர்கள் கவனத்திற்கு.....
ஒருவன் அடர்ந்த காட்டின் வழியாக தனது ஆட்டுக்குட்டியை தோளில் போட்டு சென்று கொண்டிருந்தான். அந்தக் காட்டில் நான்கு திருடர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அந்தப்பக்கம் வருபவர்களை அடித்து, அவர்களிடம் உள்ளதை பறித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அந்த திருடர்கள், ஆட்டுக்குட்டியுடன் வருபவனை பார்த்தனர். அவனிடம் உள்ள ஆட்டுக்குட்டியை பறித்துக் கொள்ள எண்ணினர். ஆனால், அவனை தாக்காமல் அவனே அந்த ஆட்டுக்குட்டியை போட்டுவிட்டு ஓடுவதற்கு ஒரு திட்டம் தீட்டினர்.
அந்தத் திருடர்களில்
முதலாவது திருடன் அவன் வருகின்ற வழியில் எதிரே சென்று, என்னப்பா நாய்க்குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு போற? என்று சொல்லிக் கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
அந்தத் திருடர்களில்
இரண்டாவது திருடன் அவன் வருகின்ற வழியில் எதிரே சென்று, என்னப்பா பூனைக்குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு
போற? என்று சொல்லிக் கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
அந்தத் திருடர்களில்
மூன்றாவது திருடன் அவன் வருகின்ற வழியில் எதிரே சென்று, என்னப்பா கன்னுக்குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு
போற? என்று சொல்லிக் கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
அந்தத் திருடர்களில்
நான்காவது திருடன் அவன் வருகின்ற வழியில் எதிரே சென்று, என்னப்பா பன்னிக்குட்டிய தோள்ல போட்டுக்கிட்டு
போற? என்று சொல்லிக் கொண்டே அவனைக் கடந்து சென்றான்.
ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு சென்றவனுக்கு, இது ஆட்டுக்குட்டிதானா? அல்லது ஏதாவது பிசாசா? என்று சந்தேகமாகிவிட்டது. அதனை போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
திருடர்களுக்கு அன்று சரியான வேட்டைதான்!
இந்தக் கதையைப் போல, இருக்கிறது எனது வழக்கு அனுபவம்!
போலி ஆவணம் தயாரித்து பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களின் மீது நான் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது இது சிவில் வழக்கு என்று எனது புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த போது இது சிவில் வழக்கு என்று எனது புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை.
சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்த போது நடுவர் இது சிவில் வழக்கு என்று முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதன்பிறகு நடைபெற்ற குற்றங்களையும், அதற்குரிய சட்டப்பிரிவுகளையும், தண்டனைகளையும் எழுதிக் கொடுத்து மீண்டும் தாக்கல் செய்த பிறகு, அதனை ஏற்றுக்கொண்டு நம்பர் வழங்கிய நடுவர் ஒரு வருடம் வழக்கை நடத்திவிட்டு, இறுதியில் அதனை சிவில் வழக்கு என்று தள்ளுபடி செய்துள்ளார்.
இப்போது அந்த வழக்கு சிவில்வழக்காக இருக்குமோ என்று எனக்கே சந்தேகம் வந்துவிட்டது .
குற்றமுறு நம்பிக்கை மோசடி - இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு-405,
திட்டமிட்டு ஏமாற்றுதல் - இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு-420
போலி ஆவணம் தயாரித்தல் - இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு-467
அதனை உண்மையான ஆவணம் போல் பயன்படுத்துதல் - இ.த-ச., பிரிவு-471 ஆகியவை சிவில் குற்றங்களா? சொல்லுங்கள் நண்பர்களே!
******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 17.05.2018