disalbe Right click

Showing posts with label குற்றம். Show all posts
Showing posts with label குற்றம். Show all posts

Wednesday, March 11, 2020

ரயிலில் முன்பதிவு; இப்படியும் நடக்கலாம்!

முன்பதிவு செய்து பயணிக்கும் ரயில் பயணி மீது .....
சில சொந்த காரணங்களுக்காக சில நாட்களுக்கு முன் சென்னை செல்ல நேர்ந்தது. வேலைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு எனது மகள் தட்கலில் முன்பதிவு செய்து கொடுத்த காரணத்தினால் சென்னை எக்மோரில் பொதிகை எக்ஸ்பிரஸில் பயணித்து எனது சொந்த ஊருக்கு திரும்பினேன். 10.03.2020 இரவு 08.45 மணிக்கு ரயில் புறப்படும் நேரம் என்று 08.30 மணிக்கெல்லாம் ஸ்டேஷனுக்கு சென்றுவிட்டேன். எனக்கு எஸ்1 கோச்சில் 40வது சைடு பெர்த் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 09.00 மணிக்குத்தான் ரயில் புறப்பட்டது. இடைப்பட்ட நேரத்தில் எனது இரவு உணவை முடித்தேன்.
பயணச்சீட்டு பரிசோதகர் விஜயம்
சைடு அப்பர் பெர்த்தில் ஏறி அமர்ந்தேன். ரயில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். அடையாள அட்டை கேட்டார். எடுத்துக் கொடுத்தேன். தனது கையில் வைத்திருந்த பேப்பரில் சீட் நம்பர் 40க்கு நேராக இருந்த செல்வம் என்ற பெயரை டிக் அடித்துக் கொண்டார். எனது முகத்தை அவர் பார்க்கவே இல்லை. எனது அடையாள அட்டையில் செல்வம் என்ற பெயர் இருக்கின்றதா? என்பதை பார்ப்பதில் மட்டும்தான் அவரது கவனம் இருந்தது. அவர் ஒருவேளை தாமதமாக வந்திருந்தால், எனது கவனம் திசைமாறி இருக்கும். இந்த கட்டுரையை நான் எழுதி இருக்கவே மாட்டேன். 
அருகில் இருந்த பயணி செய்த வேலை
மேலே அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். என்னிடம் சரிபார்த்ததை போல அருகில் இருந்த பயணிகளிடம் அடையாள அட்டையை வாங்கி  பரிசோதகர் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அங்கு இருந்த பயணியுடன் மேலும் ஒருவர் இருந்தார். அவரை யார் என பரிசோதகர் கேட்டதற்கு என்னை வழியனுப்ப வந்தவர் என்றும், தாம்பரத்தில் இறங்கிவிடுவார் என்றும் அவரிடம் அந்த பயணி கூறினார். அதை கேட்ட பரிசோதகர் ஒன்றும் கூறாமல் சென்றுவிட்டார்.
தாம்பரத்தில் இறங்கியது யார்?
கண்களை மூடி தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. ஒரே யோசனையாகவே இருந்தது. மேற்கண்ட அந்த இருவரில் தாம்பரத்தில் இறங்கியது யார்? என்பதை நானும் பார்க்கவில்லை. அந்த பரிசோதகரும் பார்க்கவில்லை. பயணிகள் வேறு ஸ்டேஷன்களில் இருந்து ஏறும் நேரங்களில் அவர்களிடம் அடையாள அட்டையை பெற்று பரிசோதகர் டிக் செய்து அவரது வேலையை முழுமையாக முடித்து அவருக்கென்று தரப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்துவிட்டார். எனக்குத்தான் தூக்கமே வரவில்லை.
எனக்கு தோன்றிய சந்தேகம்
திரைப்பட இயக்குநர் திரு சந்திரசேகர் அவர்கள் அவரது ஆரம்பகால படங்களில் நடிக்கின்ற கதாநாயகன் இது போன்ற சாட்சியத்தை அந்த திரைப்படங்களில் உருவாக்கி வைத்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று கொலை செய்வான். அவனை அங்கு பார்த்ததாக கூறுபவர்களை இந்த சாட்சியை வைத்து மடக்கிவிடுவான். 
அதைப்போல ஒருவன் முன்பதிவு செய்துவிட்டு பரிசோதகர் பயணச்சீட்டை பரிசோதிக்கும் வரை இருந்துவிட்டு ரயிலில் இருந்து இறங்கி காரில் சென்று வேறு ஒரு இடத்தில் குற்றச்செயலை செய்துவிட்டு, பின் அது தெரிய வரும்போது, அந்த நேரத்தில் நான் முன்பதிவு செய்து ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன் என்றால் அதை நீதிமன்றம் ஏற்குமா? என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஏனென்றால், அந்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினர் விசாரணை செய்வதற்கு சில மாதங்கள் ஆகிவிடும். உடன் பயணித்தவர்களுக்கோ, பயணச்சீட்டு பரிசோதகருக்கோ குற்றவாளியின் முகம் அதற்குள் மறந்திருக்கும். எனவே அதுபற்றிய சங்கதிகளை பற்றி யோசித்தேன்.


விமானப் பயணத்தில் என்ன நடக்கிறது?
  1. விமானத்தில் பயணித்தால் பல சோதனைகளை கடந்துதான் ஒரு பயணியை விமானத்தில் ஏற்றுகிறார்கள். 
  2. வேறு ஒருவரை தன் பெயரில் பயணம் செய்ய வைக்க முடியாது. 
  3. வழியில் அந்த பயணியால் இறங்க முடியாது. 
  4. கண்காணிப்பு கேமிராக்கள் நாலாபுறத்திலும் இருக்கும். 
  5. அந்த பயணி விமான நிலையத்தின் முழு கண்காணிப்பிலேயே இருப்பார்.
இதனால், விமானப்பயணி ஒருவர் குற்றம் நடந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இருந்தார் என்பதை அவர் அந்த நேரத்தில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் என்பதை வைத்து நிரூபித்து, அவர் அந்த குற்றத்தை செய்திருக்க முடியாது என்று ஆணித்தரமாக 100% மறுக்க முடியும்.

ஆனால், ரயில் பயணத்தில் என்ன நடக்கிறது?
  1. ரயில் பயணத்தில் சோதணைகள் அதிகம் கிடையாது.
  2. அடையாள அட்டையை வாங்கி பார்ப்பதுகூட ஒப்புக்குத்தான் பார்க்கிறார்கள். 
  3. அதுவும் ஒரே ஒருமுறைதான் பார்க்கிறார்கள்.
  4. அந்த அடையாள அட்டை போலியாகக் கூட இருக்கலாம்.
  5. குற்றவாளி  தனக்கு பதிலாக வேறு நபரை பயணிக்க வைக்கலாம்.
  6. இடையில் எந்த ஸ்டேஷனிலும் அவன் இறங்கிக் கொள்ளலாம்.
  7. வேறு ரயில் நிலையத்தில் அவன் ஏறிக் கொள்ளலாம்.
  8. கண்காணிப்பு கேமிரா இருந்தாலும் அதிகம் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை வேலை செய்யாது. (சுவாதி கொலை வழக்கு)
  9. சில ஊர்களில் கண்காணிப்பு கேமிரா  இல்லவே இல்லை.
பயணியின் கையிலுள்ள செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடிக்கலாம் என்றாலும் அதுவும் முழுமையானதல்ல. குற்றவாளி தனது செல்போனை ரயிலில் தனக்கு பதிலாக ரயிலில் பயணிப்பவரிடம் கொடுத்திருந்தால் என்ன செய்ய முடியும்? ஆகையினால், குற்றம் நடந்த அந்த நேரத்தில், முன்பதிவு செய்து நான் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன் அல்லது  முன்பதிவு செய்து 
பேருந்தில்  பயணித்துக் கொண்டிருந்தேன் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கூறுவது 100% நம்பிக்கைக்குரியதல்ல என்பதும், இதை மட்டும் வைத்து அவரை நிரபராதி என்று முடிவு செய்யக்கூடாது என்பதும் எனது ஆய்வு! 
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 11.03.2020 

Friday, April 12, 2019

சட்டத்தின் பார்வையில் குற்றம் என்றால் என்ன?

சட்டத்தின் பார்வையில் குற்றம் என்றால் என்ன?
  1. . ஒரு நபரினால் அது செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  2.  அந்த நபருக்கு தீய எண்ணம் இருந்திருக்கவேண்டும்.
  3. அந்த எண்ணத்தின் காரணமாக அவரால் ஒரு செயல் நடைபெற்றிருக்க வேண்டும்.
  4. அந்த செயலின் மூலமாக ஒருவருக்கு அல்லது உங்களுக்கு ஒரு தீங்கு நடந்திருக்க வேண்டும்.
இவ்வளவும் இருந்தால்தான் அதனை சட்டப்படி குற்றம் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்.
குற்றத்தின் நிலைகள் என்ன ? (Stages of Crime)
பொதுவாக குற்றத்திற்கு நான்கு நிலைகள் உண்டு.
  1. ஒருவருக்கு தீய எண்ணம் இருக்க வேண்டும்.
  2.  அந்த தீய எண்ணத்தினால் ஒரு திட்டத்தை அவர் தயாரித்திருக்க வேண்டும்.
  3. அந்த தயாரிப்பின் காரணமாக அவர் ஒரு செயலை செய்ய முயற்சித்திருக்க வேண்டும்.
  4. அந்த செயலால் வேறு ஒருவர் பாதிக்கப் பட்டிருக்க வேண்டும்.
உதாரணமாக, (1)  குமார் என்பவர் ராஜா என்பவரை கொல்லவேண்டும் என்று நினைக்கிறார்.  (2) அதற்காக அரிவாள் செய்யும் இடத்திற்குச் சென்று வீச்சு அரிவாள் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். (3) ராஜாவின் வீட்டுக்குச் சென்று  கையில் கொண்டு சென்ற வீச்சு அரிவாளால்  அவரை வெட்டுகிறார். (4) ராஜா படுகாயம் அடைகிறார் அல்லது மரணம் அடைகிறார்.

Wednesday, March 15, 2017

ஆள் மாறாட்டம், பெண் கைது!


ஆள் மாறாட்டம், பெண் கைது! 

ஜாமீனுக்காக ஆள்மாறாட்டம் செய்ததால் விபரீதம் ரூ.500க்கு ஆசைப்பட்டு சிறைக்கு சென்ற பெண்: ஐகோர்ட்டில் பரபரப்பு

சென்னை : சென்னை கண்ணகி நகரை சேர்ந்த சூர்யா. இவர் போதை மருந்து மற்றும் மயக்க மருந்துகளை  சட்டத்திற்கு விரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். 

இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு கண்ணகி நகர் போலீசார் சூர்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் சூர்யாவின் ஜாமீன் வழக்கு நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் உள்ள முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சூர்யா தரப்பில் ரூ.1 லட்சம் ஜாமீனில் விடுவிக்க கோரி சத்தியபாமா என்ற பெண் உரிமை கோரினார். 

 அதற்கான ஆவணங்களையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நீதிபதி ஆவணங்களை சரிபார்த்த போது சத்தியபாமா அளித்த வாக்காளர் அடையாள அட்டையில் வேறு ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தை பார்த்து சந்தேகம் அடைந்து, சத்தியபாமாவிடம் இது உங்கள் புகைப்படமா என்று கேட்டார். அதற்கு அந்த படம் என்னுடைய படம் தான் என்று கூறியுள்ளார்.

ஆனால், சந்தேகம் தீராததால் நீதிபதி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி நீதிமன்ற பெஞ்ச் கிளர்க் பஞ்சவர்ணம் (42) உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் சத்தியபாமா மீது புகார் அளித்தார். 

அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய போது சத்தியபாமா என்ற பெயரில் சைதாப்பேட்டை வெங்கடாபுரத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்று தெரியவந்தது. 

இவர் ரூ.500க்கு ஆசைப்பட்டு சத்தியபாமா என்ற பெயரில், ஜாமீனுக்காக ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விஜயலட்சுமியை போலீசார் கைது செய்தனர். ஜாமீனுக்காக நீதிமன்றத்தில் ஆள்மாறட்டம் செய்த சம்பவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி : தினகரன் நாளிதழ் - 16.03.2017