தீர்ப்புக்கு தேவை காலக் கெடு!
மன்னராட்சி காலத்தில், நாட்டை நிர்வகித்த மன்னர்கள், நீதி பரிபாலனத்தையும் மேற்கொண்டனர். அந்த மன்னர்களுக்கு சட்டத்தையும், நீதி பரிபாலனத்தையும் கற்றுக் கொடுத்தோர், குருகுல ஆசிரியர்கள் தான்.
அதை, மன்னர்கள் செவி வழியாக கேட்டு, கற்று, புரிந்து, மூளையில் பதிய வைத்துக் கொண்டனர்.
ஏடுகளில் எழுத்தாணி கொண்டு, பாடல்களைத் தான், பதிய வைத்தனரே தவிர, சட்டத்தை அல்ல!மன்னர்கள் அவ்வாறு வழங்கிய தீர்ப்புகளில், கண்ணகி வழக்கில், பாண்டியன் நெடுஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு ஒன்று தான், தவறான தீர்ப்பாக அமைந்துவிட்டது;
வேறு எந்த மன்னர் கொடுத்த தீர்ப்புகளும், தவறாக போகவில்லை.கோவலன் விஷயத்தில், நெடுஞ்செழியன் அளித்த தீர்ப்பில், 'கொண்டு வருக' என்று அவர் கூறியதை, 'கொன்று வருக' என, காவலர்கள் தவறாக புரிந்து, கோவலனைக் கொன்றதாகவும் கருத்து உண்டு.
தவறான தீர்ப்பை வழங்கியதற்காக, அம்மன்னன், 'யானோ மன்னன்... யானே கள்வன். கெடுக என் ஆயுள்' என்று சொல்லி, உயிரை விட்டதாக, 'சிலப்பதிகார' காப்பியம் கூறுகிறது.
ஆனால், இப்போதுள்ள நடைமுறையில், தவறான தீர்ப்பை வழங்கியதற்காக, எந்த நீதிபதியாவது வருத்தம் தெரிவித்திருக்கிறாரா?பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு, சட்டமும், சாட்சிகளும், ஆதாரங்களும் தான், ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்க தேவையாக உள்ளதே தவிர, எந்த நீதிபதியும், மனசாட்சியை துணைக்கு வைத்துக் கொள்வதில்லை.
மன்னராட்சியில், மன்னர்கள் வழங்கிய தீர்ப்புகளை விடுங்கள். மக்களாட்சியில், நீதிமன்றங்களை நாடாமல், கிராமப் புறங்களில், ஆலமரத்தின் கீழ் அமர்ந்து விசாரித்து வழங்கப்படும் பஞ்சாயத்து தீர்ப்புகளை பாருங்கள்.
அங்கு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகளில், எதுவாவது, மேல் முறையீட்டுக்குச் சென்றதுண்டா; அங்கிருக்கும் பஞ்சாயத்தார், எந்த சட்டப் புத்தகங்களையும் படித்து, தீர்ப்பு வழங்கியதில்லை!
செஷன்ஸ் நீதிமன்றங்களில் இருந்து, உச்ச நீதிமன்றம் வரை, பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள், தீர்ப்புக்காக காத்திருக்கின்றன.
இவற்றை எப்போது விசாரித்து, எப்போது தீர்ப்பு
வழங்குவர்; நீதிமன்றங்களுக்கும் தெரியாது; அரசுக்கும்
தெரியாது; ஆண்டவனுக்கே
வெளிச்சம்!
ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், அந்த ஆண்டவனே, ஓர் ஆயுட்காலத்தை நிர்ணயித்து வைத்திருக்கிறான்.
ஆனால், நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் எப்போது விசாரிக்கப்படும்; எப்போது தீர்ப்பு வழங்கப்படும்; எப்போது தண்டனை கிடைக்கும் என்பதற்கு, காலக்கெடு இல்லை.
சில சமயங்களில் விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்படும். ஆனால், தீர்ப்பு வழங்குவர் என்று சொல்ல முடியாது. ஒரு மாதமும் ஆகலாம்; ஒன்பது மாதமும் ஆகலாம்.
சில வழக்குகள், ஐம்பது ஆண்டுகளாகியும் கூட, முடியாமல், நீடித்துக் கொண்டு இருக்கின்றன. விசாரணையை முடித்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பதை, நீதிமன்றங்கள் வாடிக்கையாகவே வைத்திருக்கின்றன.
இப்படி செய்வதால், தண்டனை பெறும் குற்றவாளிகள் கூட, தண்டனையை அனுபவிக்காமல், தப்பி விடும் அவலமும் நடக்கிறது.
'நாம் கால தாமதம் செய்ததால் தானே, இந்த வழக்கில் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டிய குற்றவாளி, தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள நேர்ந்தது... இனியாவது, விசாரணை முடிந்தவுடன், தீர்ப்பை அறிவித்து விடுவோம்' என்ற முடிவுக்கு, எந்த நீதிபதியும் வருவதில்லை.
இந்த விஷயத்தில், மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களை பாராட்டியே ஆக வேண்டும். பெட்டி கேஸ், அடிதடி வழக்குகள், போக்குவரத்து விதி மீறல்கள் போன்ற, சாதாரண குற்றங்கள் விரைந்து முடிகின்றன.
காவல் துறை வழக்கு பதிந்து, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகள், சில சமயங்களில், ஓரிரு நாட்களில், முடித்து வைக்கப்படுகின்றன.
திருட்டு, கொள்ளை, கொலை, ஊழல் வழக்குகளை, இது போல முடிக்க முடியாது தான். ஆனால், ஒரு வழக்கை, இத்தனை காலத்திற்குள் முடிக்க வேண்டுமென்ற காலக் கெடு நிர்ணயிப்பது அவசியம் தானே!
ஆனால், அரசும் நிர்ணயிக்கவில்லை; சட்டமும் குறிப்பிடவில்லை. அதனால், நீதிபதிகளும், அது குறித்து கவலை கொள்வதில்லை; கோளாறே, இங்கு தான் துவங்குகிறது.
ஏராளமான சட்ட புத்தகங்களைப் படித்த வழக்கறிஞர், தன் கட்சிக்காரருக்காக வாதாடுகிறார்.
அதுபோலவே, ஏராளமான சட்ட புத்தகங்களை கரைத்துக் குடித்தவர், நீதிபதியாக அமர்ந்திருக்கிறார்; தீர்ப்பு வழங்குகிறார்.
எனினும், எந்த நீதிபதியாலும், வாதி, பிரதிவாதி இருவரும், ஏற்றுக் கொள்ளும்படியான தீர்ப்பை வழங்க முடியாது.
அத்தனை பேருக்கும், நல்லவனாக ஆண்டவன் கூட இருப்பானா என்பது சந்தேகமே.
கீழ் கோர்ட்டில் யாருக்கு எதிராக தீர்ப்பு அமைந்துள்ளதோ அவர், அடுத்த கட்ட நடவடிக்கையாக, உயர் நீதிமன்றத்தை அணுகுவார்.
உயர் நீதிமன்றத்திலும், மீண்டும் முதலிலிருந்து வழக்கு விசாரிக்கப்படும்.அங்கு, விசாரித்து முடித்தவுடன், அங்கிருக்கும் நீதிபதி, கீழ் கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தாலும் செய்யலாம்; ரத்து செய்தாலும் செய்யலாம்.
அப்படி ரத்து செய்தால், கீழ் கோர்ட்டில்
விசாரித்துக் கொடுத்த தீர்ப்புக்கு என்ன மரியாதை; அந்த நீதிபதி ஆராயாமல்
தீர்ப்பு வழங்கினாரா
என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
ஆனால், நீதிபதிகளோ, வழக்கறிஞர்களோ வாய் திறப்பதில்லை! விஷயம் இத்தோடு முடிவதில்லை. உயர் நீதிமன்றதீர்ப்பால், பாதிக்கப்பட்டவர், உச்ச நீதிமன்றத்தை நாடுவார்.
அங்கு மீண்டும் வழக்கு, முதலில் இருந்தே துவங்கும். அங்குள்ள நீதிபதியும், மெத்த படித்தவர் தான்.
அவர், அந்த உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தாலும் செய்யலாம்; ரத்து செய்தாலும் செய்யலாம். இரண்டும் அல்லாது, வேறு வகையான தீர்ப்பை வழங்கினாலும் வழங்கலாம்.
கால மாற்றத்திற்கேற்ப, சில திருத்தங்களை, நடைமுறைக்கு கொண்டு வந்தால் மட்டுமே, நீதிமன்றங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்;
வழக்குகளும் தேங்காது; நீதியும், தாமதமின்றி கிடைக்கும்.* தற்போது ஒரு, 'ஷிப்ட்' மட்டும் இயங்கும் நீதிமன்றங்கள், இரண்டு ஷிப்டுகளாக இயங்க வேண்டும்
· அரசியல் கட்சிகளின் வழக்குகள் எதையும், நீதிமன்றங்கள் ஏற்கக் கூடாது.
· அவை, அந்தந்த மாநில காவல் துறை உயரதிகாரிகளால் விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்
· தொடுக்கப்படும் வழக்குகள் அத்தனைக்கும், தடை, தற்காலிகத் தடை மற்றும் நிரந்தரத் தடை விதிக்கும் போக்கை, நீதிமன்றங்கள் கைவிட வேண்டும்.
இந்த மூன்று வகையான தடைகளே, பல லட்சம் வழக்குகள் முடிக்கப்படாமல், இழுபறியில் இருக்க முக்கிய காரணங்களாகும்.
· ஒவ்வொரு வாய்தாவிலும், ஒவ்வொரு மனுவாக போட்டு, வழக்கை நீட்டித்துக் கொண்டிருக்கும் போக்குக்கு, 'செக்' வைக்க, வாய்தாக்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும்
· தேர்தல் தொடர்பாக தொடுக்கப்படும் வழக்குகளை, ஆறு மாதங்களுக்குள் முடித்து விட வேண்டும். வழக்குகள் முடியும் வரை, மேற்படி நபர், சட்டசபை அல்லது பார்லிமென்டில் நுழையவே கூடாது. அவருக்கு, அரசு சார்பில் வழங்கப்படும் எவ்வித சலுகைகளும், சம்பளமும் வழங்கக் கூடாது.
· சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள், ஒவ்வொன்றுக்கும் காலக் கெடு நிர்ணயிக்க வேண்டும்.
· சிவில் வழக்குகளுக்கும், ஊழல் வழக்குகளுக்கும், அதிகபட்சம் ஓர் ஆண்டு, கிரிமினல் வழக்குகளுக்கு, ஆறு மாதம் என, காலக்கெடு நிர்ணயிக்கலாம்
·
வழக்கு விசாரணை முடிந்தவுடன், தீர்ப்பை வழங்க வேண்டும். விசாரணையை முடித்து, தீர்ப்பை ஒத்தி வைக்கும் நடைமுறையை, நீதிமன்றங்கள் கைவிட வேண்டும்
· தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் மட்டுமே, வழக்குகளை மேல் முறையீட்டுக்கு அனுமதிக்க வேண்டும்.
·
எல்லா வழக்குகளுக்கும் மேல் முறையீடு செய்ய அனுமதி அளித்துக்கொண்டிருக்க கூடாது. மாநிலங்களுக்கு இடையே நிகழும் வழக்குகளுக்கும், இது பொருந்தும்.
· ஜாமின் மற்றும் முன் ஜாமின் முறைகள், முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும்.
· குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்படும் வரை, சிறையில் தான் இருந்தாக வேண்டும்.
இதுபோல, நிறைய நடைமுறைகள் திருத்தப்பட வேண்டும்.
· இவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தாலே, நீதியும் தாமதிக்காது; நீதிமன்றங்களும் சுமுகமாக இயங்கும்; நீதிபதிகளும், 'ரிலாக்ஸ்டாக' வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்க முடியும்.
· ஜனாதிபதி, பிரதமர், மத்திய -மாநில அமைச்சர்கள், சட்டசபை, பார்லிமென்ட், பஞ்சாயத்து உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்ற அனைவருக்குமே, பதவிக்கான காலக் கெடு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
· ஆனால், நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் வழக்குகளுக்கு மட்டும், விசாரித்து தீர்ப்பு வழங்க, காலக் கெடு கிடையாது.
· அந்தக் காலக் கெடு இல்லாததால், நாடும், நாட்டு மக்களும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.
· அந்த பிரச்னைகளுக்கு முடிவும், விடிவும் ஏற்பட வேண்டும்!
கட்டுரையாளர் : ஆர் .ஜெயகுமாரி, சமூக ஆர்வலர்,
இ-மெயில்: jeyakumarir55@gmail.com
நன்றி : தினமலர்
நாளிதழ் - 18.01.2020